Published:Updated:

ஜெயலலிதா இல்லாத அவர் பிறந்த நாளில், மிஸ்ஸாகும் விஷயங்கள்!

ஜெயலலிதா இல்லாத அவர் பிறந்த நாளில், மிஸ்ஸாகும் விஷயங்கள்!
ஜெயலலிதா இல்லாத அவர் பிறந்த நாளில், மிஸ்ஸாகும் விஷயங்கள்!

ஜெயலலிதா இல்லாத அவர் பிறந்த நாளில், மிஸ்ஸாகும் விஷயங்கள்!

.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஜெ. மறைவுக்குப் பின்னர் வரும் பிறந்தநாள் என்பதோடு, அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வு என்பதால் இந்த ஆண்டு பிறந்தநாள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவிர, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகப் பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளை எல்லா ஆண்டுகளையும் போல, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.தி.மு.க-வினர் சபதம் ஏற்று, பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனாலும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் நடைபெறும் பல ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு அவரது பிறந்தநாளில் இருக்காது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், அவரது வயது என்னவோ அந்த எடையிலான பிரமாண்ட கேக் வெட்டப்படும். கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஆட்சியில் இருந்தால் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கேக் வெட்டுவார்கள்.

ஓரிரு ஆண்டுகள் ஜெயலலிதாவே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்து, இனிப்பு வழங்குவார். அ.தி.மு.க மகளிர் அணி சார்பில், ஆளுயர மாலை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும்.

கட்சியின் தலைமை அலுவலகத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து, கூடியிருப்பவர்களுக்கும், அந்த வழியாக வாகனங்களில் செல்வோருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவார்கள்.

ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் சென்று, அவரைச் சந்தித்து ஆசி பெறுவார்கள்.

தமிழகம் முழுவதும் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். அன்னதானமும் வழங்கப்படுவது வழக்கம்.

2011-ல் ஜெயலலிதா முதல்வரானது முதல், ஒவ்வொரு ஆண்டும், அவரது வயது அடிப்படையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படும். சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில், மரக்கன்றினை நட்டு, ஜெயலலிதா அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சியினர் மரக்கன்றுகளை நடுவது வழக்கம்.

ஜெயலலிதா பிறந்தநாளில் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை கட்சியின் நிர்வாகிகள் வழங்குவார்கள்.

மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில், பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, பொதுக்கூட்டங்களும் நடைபெறும்.

பிரதமர், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ஜெயலலிதாவுக்கு தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிப்பார்.

இந்த ஆண்டு அ.தி.மு.க-வினர் மத்தியில், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்ற சோகம் ஒருபுறம் இருக்க, சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் இருக்கிறார் என்பது கட்சியினரை உற்சாகம் இழக்கச் செய்துள்ளது.

இருந்தாலும், 'ஒவ்வோர் ஆண்டும் ஜெ. பிறந்தநாளில் நடைபெறுவது போன்று, கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தின் முன் 'கழகத்தைக் காப்போம்' என்று கூறி சபதம் ஏற்க வேண்டும்' என்று சசிகலா கழகத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சியினர் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!

-சி.வெங்கட சேது

அடுத்த கட்டுரைக்கு