இந்தியாவின் பெரும் பிரச்னைகளில் ஒன்று மக்கள்தொகைப் பெருக்கம். முதலிடத்தில் இருக்கும் சீனாவை முந்த அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். 1901-ம் ஆண்டு 23 கோடியாக இருந்த நமது நாட்டின் மக்கள் தொகை, 2011-ல் 121 கோடியாக அதிகரித்துவிட்டது. 2019-ம் ஆண்டுக் கணக்குப்படி, 136.8 கோடி மக்கள் தொகையுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இன்னும் 8 ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

இந்தியாவின் 73-வது சுதந்திர தின உரையில், `மக்கள் தொகைப் பெருக்கம் எதிர்கால சந்ததிக்குப் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் இதுகுறித்து நாம் கவலைப்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார் பிரதமர் மோடி. `குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முறையாகத் திட்டமிடாமல் குழந்தை பெற வேண்டாம்' எனவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய குடும்பநல ஆய்வு (NFHS) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுள்ள திருமணமான பெண்களில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் மிகவும் குறைவு. இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில்தான் 30 சதவிகிதப் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். குறைந்தபட்சமாக ஆந்திராவில் 4.6 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 10 சதவிகிதப் பெண்கள் கருத்தடை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியிருக்கும் சூழலில், `மக்கள்தொகைப் பெருக்கத்தில் தமிழகத்தின் நிலை என்ன, அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?' என்று பொது சுகாதாரத் துறையின் குடும்பநலத் திட்ட அதிகாரி ஹரி சுந்தரியிடம் கேட்டோம்.
``2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.3 ஆகும். கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் எத்தனைமுறை கருவுறுகிறார் என்பதைக் குறிக்கிறது. கருவுறுதல் விகிதத்தில் முதலிடத்தில் இருப்பது பீகார். அங்கு கருவுறுதல் விகிதம் 3.2 ஆகும். தமிழகத்தில் 1.6 சதவிகிதம் மட்டுமே. மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் இதே நிலை நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கருவுறுதல் விகிதம் குறைவாக உள்ளது. மேலும் தமிழகத்தின் கிராமப் பகுதிகள் மற்றும் நகர்ப்பகுதிகளிலும் கருவுறுதல் விகிதம் சராசரியாக 1.6 என்ற அளவில்தான் உள்ளது.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. பெண்கள்தான் அதிகளவில் கருத்தடை செய்துகொள்கின்றனர். தற்காலிகமானவை, நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் எனக் கருத்தடை முறைகள் மூன்று வகைகள் உள்ளன. தற்காலிக முறைகளில் ஆணுறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளையங்கள், ஸ்பெர்மிசைட் ஜெல், டயாப்ரம், கருத்தடை ஊசி ஆகியவை பயன்படுத்தப்படும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் போன்றவையும், நிரந்தர முறையில் கருக்குழாய் நீக்கம், `வாசெக்டமி' (vasectomy) சிகிச்சையும் அடங்கும். இதில் ஆணுறையும் வாசெக்டமியும் ஆண்களுக்கானவை. மற்றவை பெண்களுக்கானவை.

இந்தியாவைப் பொறுத்தவரை 0.3 சதவிகித ஆண்களும் 36 சதவிகிதப் பெண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். அதேபோல், இந்திய அளவில் 4.1 சதவிகிதமும் தமிழகத்தில் 0.2 சதவிகிதமும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு குறித்து பல்வேறு நடைமுறைகள் இருந்தாலும் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. நாடு முழுவதும் விழிப்புணர்வை அதிகரித்தால்தான் மக்கள் தொகைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் அவர்.

இந்தியாவில், 5.6 சதவிகிதம் பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகின்றனர். ஆணுறைகளை அதிகம் பயன்படுத்தும் முதல் ஐந்து மாநிலங்களில் சண்டிகர், டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம் ஆகியவை உள்ளன. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆணுறைகளை மிகக்குறைவாகப் பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் கருவுறுதல் விகிதத்தில் முதலிடத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள `நைஜர்' என்ற நாடு 6.95 சதவிகிதமாக உள்ளது. 6.12 சதவிகிதம் உள்ள சோமாலியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
