தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது முகநூல் கணக்கில் `பிட் காயின் இன்வெஸ்ட்மென்ட்’ சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை க்ளிக் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டு பின்னர், அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையதளத்தில் ரூ.12,10,740 பணத்தை முதலீடு செய்துள்ளார். இதையடுத்து அந்த வாட்ஸ் அப் எண்ணில் இருந்து எந்தத் தகவலும் இல்லையாம். தொடர்பு கொண்டும் ராமரின் அழைப்பை அந்த நபர் ஏற்கவில்லை.

இதனால், தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோரின் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமரை மோசடி செய்து ஏமாற்றியது கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம் பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீஸார், சின்னியம் பாளையத்திலுள்ள வீட்டில் இருந்த கருணாகரனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.5 லட்சம் பணம், ஒரு ஸ்கோடா கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர், தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.9,98,865-ஐ முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் கூறுகையில், ``பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெறுவது என்பது நல்ல விஷயம்தான். போலி செயலிகள், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலி திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், முதலீடு செய்யப்படும் திட்டங்கள் உண்மைதானா என்பதை நன்கு விசாரித்துவிட்டு முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டி, கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து, பின்னர் ஏமாறுகிறார்கள். எனவே, முகம் தெரியாத நபரை நம்பி பணத்தை முதலீடு செய்யும் முன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அரசு நிதி நிறுவனங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு, முதலீடுகளைச் செய்யலாம். நிதி சம்பந்தமான ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற்று பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.