Published:Updated:

ஐஏஎஸ் படிக்க விரும்புறீங்களா... அரசு வழங்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

தேனி மு.சுப்பிரமணி

தமிழக அரசு பயிற்சி மையத்தில் முழு நேரம் படிக்க ரூ.1000 மட்டுமே கட்டணம், தங்கும் வசதியும் உணவும் இலவசம்.

IAS aspirants
IAS aspirants

Apply For Free IAS Coaching

இந்திய அரசின் மத்திய தேர்வாணைக்குழு (Union Public Service Commission) நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அகில இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (IAS, IPS, IRS) தேர்வுகளில் பங்கேற்க விரும்புபவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறது தமிழ்நாடு அரசு. இதற்காக அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் (All India Civil Services Coaching Centre) ஒன்றை சென்னையில் அமைத்திருக்கிறது. இந்த மையத்தில் 2020-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (Civil Services Preliminary Examination – 2020) பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி - வயது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 1-8-2020 அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21ஆக இருக்க வேண்டும். இதர வகுப்பினருக்கு 32 வயதுக்கு மிகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 37 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு 35 வயதுக்கு மிகாமலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

UPSC
UPSC

முழுநேர பயிற்சிக்கான காலி இடங்கள்

விடுதியில் தங்கிப் பயிற்சிபெறும் வசதியுடன்கூடிய 225 இடங்கள்

  • ஆதிதிராவிடர் - 92

  • அருந்ததியர் - 18

  • பழங்குடியினர் - 3

  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 40

  • பிற்படுத்தப்பட்டோர் - 54

  • பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம் - 7

  • மாற்றுத்திறனாளிகள் - 7

  • இதர வகுப்பினர் - 4

Vikatan

பகுதிநேர பயிற்சிக்கான காலி இடங்கள்

  • ஆதிதிராவிடர் - 41

  • அருந்ததியர் - 8

  • பழங்குடியினர் – 1

  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 18

  • பிற்படுத்தப்பட்டோர் - 24

  • பிற்படுத்தப்பட்டோர்-முஸ்லிம் - 3

  • மாற்றுத்திறனாளிகள் - 3

  • இதர வகுப்பினர் - 2

  • (மொத்தம் 100 இடங்கள்)

பயிற்சி நேரம்

முழுநேர பயிற்சி: காலை 10:00 மணி முதல் மாலை 5.00 மணிவரை.

பகுதிநேர பயிற்சி: வாராந்திர நாள்களில் மாலை 6:30 மணி முதல் 8:30 மணிவரை.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர பயிற்சி.

Civil service
Civil service

பயிற்சிக் கட்டணம்

முழுநேர பயிற்சி இதர வகுப்பினர் - ரூ.1,000/- (முழுப் பயிற்சிக் காலத்துக்கும்)

மற்ற பிரிவினர் - கட்டணம் இல்லை.

விடுதியில் தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக அளிக்கப்படும். பகுதிநேர பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. ஆனால், வாரத்தின் ஐந்து நாள்களில் இரவு உணவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு வேளை உணவும் வழங்கப்படும். பயிற்சிக்கு தேர்வுசெய்யப்பட்ட அனைத்துப் பிரிவினரும் காப்புத் தொகையாக ரூ. 3,000/- செலுத்த வேண்டும்.

online application
online application

விண்ணப்பப் படிவம்

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் http://www.civilservicecoaching.com/ என்ற இணையதளத்தில் இணையவழியில் (Online) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 16-9-2019

நுழைவுத் தேர்வு

விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்கள் அனைவரும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு சென்னை, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 13 மையங்களில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் மேற்காணும் ஏதாவதொரு மையத்தைத் தேர்வுசெய்துகொள்ளலாம். நுழைவுத் தேர்வு 13-10-2019 அன்று காலை 10:30 மணி முதல் 12.30 மணிவரை நடத்தப்படும்.

நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை (Hall Ticket) இந்தப் பயிற்சி மையத்தின் http://www.civilservicecoaching.com எனும் இணையதளத்தில் 7-10-2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுத் தேர்வுப் பாடங்கள்

இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் நிர்வாகமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புறச் சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், உயிரின பரிணாம வளர்ச்சி, பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொதுத்திறனறித் தேர்வு ஆகியவற்றிலிருந்து 100 கொள்குறி (Objective) வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை

நுழைவுத் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்கள் மேற்காணும் இனவாரியாக அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றவரில் தொடங்கி, அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்ப சேர்க்கப்படுவார்கள். காலியிடங்கள் ஏற்பட்டால், காத்திருப்போர் பட்டியல்படி பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறும்.

Tamilnadu government
Tamilnadu government

கூடுதல் தகவல்கள்...

இந்தப் பயிற்சி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், மேலே குறிப்பிட்டிருக்கும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது `முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு மையம், 163/1, காஞ்சிக் கட்டடம், பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028’ என்ற முகவரிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது 044–24621475, 24621909 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ தெரிந்துகொள்ளலாம்.