Published:Updated:

மத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan

SSC CGL
News
SSC CGL

'SSC CGL' தேர்வை 18 முதல் 30 வயது வரையிலானவர்கள் எழுதலாம். வயது வரம்பு, ஒவ்வொரு பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வு உண்டு.

மத்திய, மாநில அரசுகளின் சிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வோராண்டும் 30-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, மத்திய, மாநில அரசுகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் நிறைய தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நகர்ப்புற மாணவர்கள் மத்தியிலேயே குறைவாகத்தான் இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு இன்னும் எட்டவேயில்லை. தேர்வுகளின் வகை, பாடத்திட்டங்கள், தேர்வு நடைபெறும் காலம் என எந்தத் தகவலுமே நம் இளைஞர்களை பெரிய அளவில் எட்டுவதில்லை.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் யோகேஷ் என்ற வாசகர் இது தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ''SSC CGL என்ற போட்டித்தேர்வு எதற்காக நடத்தப்படுகிறது. அந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?" என்பதுதான் அவரது கேள்வி. இந்தக் கேள்வியைக் கல்வியாளரும் வேலைவாய்ப்பு ஆலோசகருமான பேராசிரியர் நெல்லை கவிநேசன் முன் வைத்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''இந்தியாவில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்களைக் கண்டடைவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் 'ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்' (Staff selection commission). பல்வேறு தேர்வுகள் வழியாக தகுதிவாய்ந்தவர்களைத் தேர்வு செய்யும் இந்த அமைப்பை எஸ்.எஸ்.சி (SSC) என்று சுருக்கமாக அழைப்பார்கள். அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு என 7 மண்டல அலுவலகங்களைக்கொண்டு இந்த அமைப்பு இயங்குகிறது. இவைதவிர, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில் துணை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன.

பேராசிரியர் நெல்லை கவிநேசன்
பேராசிரியர் நெல்லை கவிநேசன்

எஸ்.எஸ்.சி அமைப்பு நடத்தும் சில முக்கியத் தேர்வுகள்!

1. Combined Graduate Level Examination-CGLE

2. Stenographer Grade C / Grade D Examination

3. Combined Higher Secondary Level (10+2 Level) Examination- CHS

4. Multi Tasking Staff – Technical and Non-Technical

5. Junior Engineer Examination Combined Graduate Level Examination என்ற தேர்வைத்தான் 'SSC CGL' என்று சொல்கிறார்கள். இதில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

ஆண்டுதோறும் 4 நிலைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

1. Combined Graduate Level Examination - Tier 1

2. Combined Graduate Level Examination - Tier 2

3. Descriptive - Tier 3

4. Skill Test - Tier 4

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கண்ட நான்கு நிலைகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக, இந்தியன் ஆடிட் அன்ட் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் (CAG) துறையில் Assistant Audit officer, Assistant account officer பணிகளை இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன்மூலம் பெறமுடியும். Central Secretariat Service துறையில் Assistant Section Officer பணியும்கூட இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். Intelligence Bureau, ரயில்வே, வெளியுறவுத் துறை போன்ற துறைகளில் Assistant section officer பணியும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குக் கிடைக்கும்.

SSC CLG exam
SSC CLG exam

இவைதவிர, வருமான வரித்துறையில் Inspector of Income tax, Inspector of central excise, Preventive officer, Examiner போன்ற பணிகளும் இந்தத்தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. புள்ளியியல் துறையில் Junior Statistical Officer, CPI Inspector, Postal department inspector போன்ற பல உயர்நிலை பணிகளுக்கும் இந்தத் தேர்வு மூலம் நியமனம் நடக்கிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் Assistant section officer, Assistant enforcement officer, Sub-Inspector, Inspector போன்ற பணிகளும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கிடைக்கும்.

யாரெல்லாம் இந்தத் தேர்வை எழுதலாம்?

'SSC CGL' தேர்வை 18 முதல் 30 வயது வரையிலானவர்கள் எழுதலாம். வயது வரம்பு, ஒவ்வொரு பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்புத் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் அங்கீரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். ஆனால், Assistant Audit officer, Assistant accounts officer ஆகிய பணிகளில் சேர விரும்புபவர்கள், பல்கலைக்கழகப் பட்டத்தோடு, Charted accountant, Cost and management account, Company secretary ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வணிகவியல், வணிக நிர்வாகம், வணிகப் பொருளியல் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தப் பணிக்கான தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். Junior Statistical officer பணிக்கு, பட்டப்படிப்போடு பிளஸ் டூ கணிதப் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். பட்டப்படிப்பில் புள்ளியியல் பாடத்தை விருப்பப் பாடமாகவே படித்திருப்பது இந்தத் தேர்வுக்கு சரியான தகுதி.

தேர்வுக் கட்டணம்

இந்தத் தேர்வுக்கானக் கட்டணம் 100 ரூபாய். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension, Quantitative Abilities, English Language and Comprehension, Finance and Economics, Statistics, Computer Proficiency ஆகிய பாடங்களை உள்ளடக்கித் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு மையம்

இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்படும். Staff Selection Commission சென்னை மண்டல அலுவலகம், EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai - 600006 என்ற முகவரியில் இயங்குகிறது. கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

Doubt of Common Man
Doubt of Common Man

உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள் தோன்றினால் https://special.vikatan.com/doubt-of-commonman/ இந்தப் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு உரிய பதில்கள் தரப்படும்.