Published:Updated:

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் பட்டப்படிப்புகளின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? 

ICAR
ICAR

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் 2020-2021 கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research - ICAR) கீழ் செயல்பட்டுவரும் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் இளநிலைப் பட்டப்படிப்புகளில் 2020-2021 கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (All India Entrance Examination for Admissions to Bachelor Degree Programmes) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தேசியத் தேர்வு முகமை:

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Technology) போன்ற இந்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (Join Entrance Examination), மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும், உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதிபெறுவதற்குமான தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test) போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசியத் தேர்வு முகமையே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அகில இந்திய நுழைவுத் தேர்வையும் நடத்துகிறது.

exam
exam
pixabay

இளநிலைப் பட்டப்படிப்புகள்:

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் கீழ்க்காணும் 11 வகையான இளநிலைப் பட்டப்படிப்புகள் இடம்பெற்றுள்ளன.

1. B.Sc., (Hons.) Agriculture

2. B.Sc., (Hons.) Horticulture

3. B.F.Sc.,

4. B.Sc., (Hons.) Forestry

5. B.Sc., (Hons.) Community Science

6. Food Nutrition and Dietetics*

7. B.Sc., (Hons.) Sericulture

8. B. Tech., Agricultural Engineering

9. B. Tech., Dairy Technology

10. B. Tech., Food Technology

11. B. Tech., Bio- Technology

கல்வி மற்றும் வயது:

இளநிலைப் பட்டப்படிப்புகள் ஒவ்வொன்றுக்கும் ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில், எந்தெந்தப் பாடங்கள் எடுத்துப் படித்திருக்க வேண்டும் என்பது குறித்து தகவல், குறிப்பேட்டில் பாடவாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில் பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 50% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31.8.2020 அன்று 16 வயதுக்குக் குறைவில்லாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Representational Image
Representational Image
pixabay

விண்ணப்பம்:

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் ஏதாவதொன்றுக்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப முறை, இணைய வழியிலான பதிவு, விண்ணப்பம், படிமம் பதிவேற்றம் மற்றும் கட்டணம் செலுத்தல் எனும் நான்கு வகையான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

பொது, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் பிரிவினர் ரூபாய் 750/- எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 375/- விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.3.2020. விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் 25.4.2020 முதல் 2.5.2020 வரை செய்துகொள்ள முடியும்.

நுழைவுத் தேர்வு:

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், நாமக்கல் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர் விருதுநகர் என்று 15 நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டையைத் தேசியத் தேர்வு முகமையின் இணையதளத்திலிருந்து 8.5.2020 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வுமுறை:

இணைய வழியிலான கணினி வழித் தேர்வாக (LAN Based CBT) 1.6.2020 அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரையிலான 150 நிமிட அளவில் நடைபெறும். தேர்வில் மூன்று பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு 50 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். பதிலளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவுமில்லை. தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடைபெறும். தேர்வு முடிவுகள் 15.6.2020 அன்று www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் வெளியிடப்படும்.

exam
exam
pixabay

மாணவர் சேர்க்கை:

நாடு முழுவதும் உள்ள வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15% மாணவர் சேர்க்கை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் வழியாக, நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குறித்த நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் தகவல்கள்:

கூடுதல் தகவல்களை அறிய www.nta.ac.in மற்றும் https://icar.nta.nic.in இணையதளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம். அல்லது icar@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, உதவிக்கான 0120-6895200 எனும் எண்ணில் தொடர்புகொண்டோ பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு