Published:Updated:

அலுவலகப் பணியில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

அலுவலகப் பணியில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் சூட்சுமங்கள்!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது, சிறந்த செயல்திறனுடன் திகழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் மனிதர்களுக்கான புத்தகமாகும். இந்த உலகில் நம்முடைய செயல்கள் அனைத்தும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. இதனாலேயே நம்முடைய செயல்திறன் என்பதற்கான சவால்கள் நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங் களில் இருந்து தோன்றாமல் நமக்குள் இருந்தே உருவாகிறது என்பதை முக்கியமாக வைத்து எழுதப்பட்டு இருக்கிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
 Glow: Play For Greatness
ஆசிரியர்: 
சேகர் ரங்கராஜன்
பதிப்பகம்:‎ 
Stardom Books 
(10 February 2022)
புத்தகத்தின் பெயர்: Glow: Play For Greatness ஆசிரியர்: சேகர் ரங்கராஜன் பதிப்பகம்:‎ Stardom Books (10 February 2022)

நிழலிலிருந்து நிஜத்துக்கு...

‘‘வெற்றி, தோல்வி என்ற இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு மானுடனாக நாம் இந்த இரண்டு விஷயங் களையும் நம் வாழ்வில் எதிர்கொள்ளவே செய்கிறோம். நாம் அனைவருமே எப்போதுமே எல்லாச் செயல்களிலுமே வெற்றி பெறவே விரும்புகிறோம். இப்படி நாம் பெற்ற வெற்றிகள் எல்லாம் அந்தச் சூழ்நிலையின் சாதகத்தால் வந்த வெற்றியே என்பதை உணராமல் நம்முடைய திறமையால் கிடைத்த வெற்றி என நம்பி, அந்த வெற்றி மனநிலையிலேயே நாம் மூழ்கிப் போய்விடுகிறோம்.

ஆனால், நாம் வெற்றி பெறாமல், தோல்வி அடையும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் விஷயங்களில் (மனிதர்கள், சிஸ்டம் போன்றவை) இருக்கும் குறைபாடுகளை நாம் சுலபமாகக் கண்டறிந்துவிடுகிறோம். இந்தக் குறைபாடுகள் குறித்த நம்முடைய எண்ணத்தில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்று சீர்தூக்கி ஆராயாமல், ‘இதுபோன்ற குறைபாடுகளால் பாதிப்படைந்து இந்தப் பரிதாபகரமான நிலையில் இருக்கிறேன்’ என்று புலம்புகிறோம்.

நம்முடைய விதியை நொந்துகொண்டு இருக்கும் அதே சமயத்தில், நம்மைப் போன்ற சூழ்நிலையிலேயே வாழும் சிலர் வெற்றி பெறுவதையும் நாம் பார்க்கவே செய்கிறோம். எதனால் நாம் மட்டும் இப்படி இருக்கிறோம் எனில், அதற்குக் காரணமாக இருப்பது நம்முடைய நிழல். இந்த நிழலை விட்டு எப்படி வெளியே வருவது, எப்படி இந்த நிழலை நம்முடைய நண்பனாக்கிக்கொள்வது, நிழலையும் நிஜத்தையும் எப்படி ஒரே கோணத்தில் செயல்பட வைப்பது (ஒட்டு மொத்தமாக, இவை அனைத்தும் சேர்ந்தால், நிழலை விட்டு வெளியேறுதல் என்பதாகிறது) என்ற கேள்விகள் உங்கள் அனைவரின் மனதிலும் எழவே செய்யும்.

அந்த நிழல் என்பது நம்முள்ளேதான் இருக் கிறது. கண்ணுக்குத் தெரியாத நிழலே நம்மைக் (நிஜத்தை) கட்டுப்படுத்தி சூழ்நிலைக் கைதியாய் வாழ வைக்கிறது. இந்த நிழலைவிட்டு வெளியேற நாம் ஞானம் என்ற ஒளியைப் பெற வேண்டும். இந்த ஒளியைப் பெற்றுவிட்டால் நிஜமும் நிழலும் ஒரே கோணத்தில் பயணிக்கும். அதனால் பல்வேறு பலன்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். இந்த ஒளியைப் பெற்று நிஜத் தையும் நிழலையும் நட்பாக்கி வாழ்வில் வெற்று பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்குத்தான் இந்தப் புத்தகம்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

அலுவலகப் பணியில் தடைகளைத்  தாண்டி வெற்றி பெறும் சூட்சுமங்கள்!

நம் தோல்விக்குக் காரணம் நாமா, உலகமா?

நாம் யார் என்று நாம் நம்புகிறோமோ அதாகவே நாம் உருவெடுக்கிறோம். இந்த உலகம் நிலையானது. இந்த உலகம் கால வரம்பற்றது என்ற எண்ணத்துடனேயே நாம் வாழ்கிறோம். இந்தவித நம்பிக்கையை உருவாக்கி அதை முழுமையாக நம்பியும் விடுவதால், நாம் பெரும்பாலான சமயங்களில் நம்மை நோக்கி வருவதை எதிர்கொள்ளத் தயாராகிவிடுகிறோம். ஆனால், இந்த உலகம் நம்முடைய எதிர்பார்ப்புக்கு எதிராகச் செயல்படும்போது, நாம் அசெளகர்யமாக உணர ஆரம்பிக்கிறோம். குறிப்பாகச் சொன்னால், வேறு வழியேயில்லை என்ற கட்டாயமான சூழல் உருவாகும் வரையில் நாம் நம்மை மாற்றிக்கொள்வதே இல்லை.

சுருக்கமாக, நம்முடைய தோல்விக்கும்/ செயல்திறன் குறைவுக்கும் உலகத்தைக் குறை சொல்லிப் பழகிவிடுகிறோம். உலகம் குறித்த நம்முடைய பார்வையின் கோணம் சரி இல்லாமல் இருக்கலாம் என்கிற ரீதியில் நாம் சிந்திப்பதே இல்லை. மாறாக, இப்படித்தான் உலகம் இருக்கும் என்று நாம் கொண்டிருக்கும் நம்முடைய மதிப்பீடு முழுக்க முழுக்க சரி என்ற ரீதியில் செயல்பட ஆரம்பித்துவிடுகிறோம். குறுகிய காலத்தில் இப்படிப்போகும் நம் வாழ்க்கையில் நீண்ட நாள் அடிப்படையில் உலகத்தின் போக்குக்கும் நம்முடைய எதிர்பார்ப்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தால் உருவாகும் அசெளகர்யத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறோம். ஒரு கட்டத்தில் நம்முடைய எதிர்பார்ப்புகள் தவறு என்பது கொஞ்சம் புரியும் அளவுக்கான ஒளிக்கீற்றுகள் அவ்வப்போது தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஒளிக்கீற்றுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் சூழ்நிலையில் நாம் விழிப்புணர்வைப் பெறுகிறோம். இந்த விழிப்புணர்வே நம்மை சுயமாக சரியான பாதையில் இயங்குவதற்கு வழிவகை செய்கிறது. நம்முடைய சிந்தையும் செயலையும் இணைக்கும் உள் இயக்கம் சீராக இருக்கும் அளவுக்கான திட்டங்களை இந்தச் சூழலில் நாம் வடிவமைத்து செயல்படுத்த ஆரம்பிக்கிறோம். இதனால் நாம் மனதில் ஞானம் ஒளியைப் பெற்று அதன் மூலம் சுயமாக இயங்க ஆரம்பித்துவிடுகிறோம் என்கிறார் ஆசிரியர்.

கொஞ்சம் தூர நின்று யோசித்துப் பாருங்கள்...

ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வது நமக்கு சலிப்பை உருவாக்குகிறது. இந்த சலிப்பே நமக்குள் இரைச்சல் உருவாக பெரியதொரு காரணியாக அமைகிறது. இந்த இரைச்சல் குறித்து நாம் முழுமையாக உணராதுபோனால் அதன் காரணமாக உருவாகும் பத்து வகை சிக்கல்களைக் கொண்ட பொறியில் நாம் சிக்கிக்கொள்கிறோம். இதில் இருந்து இறங்கவும் பயப்படும் நாம் எக்கச்சக்க ஏக்கங் களுடனும், எங்கும் எதிலும் நமக்கென்றே தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற எண்ணத்துடனும், சுவாரஸ்ய மற்ற சூழ்நிலையிலும் வாழ ஆரம்பிக்கிறோம். இதனால் தான் நமக்குள்ளே இருக்கும் இரைச்சலை எந்தளவுக்கு நாம் குறைக்கிறோமோ, அந்தளவுக்கு நம்முடைய செயல்திறன் அதிகரிக்கிறது.

நடப்பை விட்டு கொஞ்சம் தள்ளிநின்று சிந்திக்க ஆரம்பிக்கும்போது நமக்கு புதிய கோணங்கள் பலவும் கிடைக் கின்றன. இந்தக் கோணங்களில் சிந்தனையை மேலும் வலுப் படுத்துவதன் மூலம் வாய்ப்பு களையும் அதில் இருக்கும் இடைவெளிகளையும் கண்ட றிந்து அதற்கேற்ப நம்முடைய திட்டங்களை நம்மால் தீட்டவும் முடிகிறது. இதனால் சூழ்நிலை முழுவதும் நம் வசப்பட்டு நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதனால் நம்முடைய செயல்திறன் அதிகரிக்கிறது என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

நிழலைவிட்டு வெளியேறும்போது...

கண்ணுக்குத் தெரியாத நிழலின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாம், அந்த நிழலை விட்டு முழுமையாக வெளியேறு வதால், மூன்று வகை அனுகூலங் கள் நமக்குக் கிடைக்கின்றன. முதலாவதாக, நாம் நம் பலகீனங் களைப் பலமாக மாற்றிக் கொள்கிறோம். இரண் டாவதாக, நம்முடைய அனுபவங்களை நாம் நிபுணத்துவமாக மாற்றிக் கொள்கிறோம். மூன்றாவதாக, நாம் எதிர்கொள்ளும் சவால்களை வாய்ப்புகளாக நாம் மாற்றியமைத் துக்கொள்கிறோம். இந்த ஒளி யானது நம்முடைய முக்கியத் துவத்தை நாம் உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கிறது.

நம்மில் சிலர் நீண்ட நாள் அடிப்படையில் வாழ்க்கையின் போக்கிலேயே இந்தத் திறனைப் பெற்றுவிடுகிறோம். இந்தத் திறனைப் பயிற்சியின் மூலம் குறுகிய காலத்தில் ஒருவரால் பெறமுடியும். எந்தளவுக்கு விரைவில் அதைப் பெறுகி றோமோ, அந்த அளவுக்கான பலன் நமக்கு கிடைக்கும். அப்படிப் பெற வைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

சேகர் ரங்கராஜன்
சேகர் ரங்கராஜன்

மூன்று பெரும் பிரிவாக...

புத்தகத்தின் முதல் பிரிவில், பல்வேறு உதாரணங்கள் (case) மூலம் புத்தகத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெரும்பிரிவானது, வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நம்முடைய புலன்களைக் கூர்மையாக்கிக் கொள்வது எப்படி, நம்முடைய பார்வையில் உள்ளது உள்ளபடி என்ற ரீதியாகப் பார்ப்பது எப்படி, எதிர்த்து நிற்கும் திறன்களை வளர்த்தெடுப்பது எப்படி, கட்டுக் கதைகளை விட்டொழித்து உண்மைகள் மற்றும் தரவுகளைக் கொண்டு நடவடிக்கைகளை எடுப்பது எப்படி, சிஸ்டத்தைக் குறைசொல்லி பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காமல் இருப்பது எப்படி, நம்முடைய சிந்தனை மற்றும் நம்பிக்கையை புதிய கோணத்தில் மாற்றியமைப்பது எப்படி, நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருக்கும் நிறை /குறைகளில் இருந்தே கற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி, வாய்ப்புகள் என்பது குறுகிய காலத்தில் தோன்றி மறைபவை என்பதை உணர்ந்து அதை சரியாக உபயோகிக்கும் வண்ணம் செம்மையாக வேலை செய்வது எப்படி, நமக்குள் இருக்கும் இரைச்சலைக் குறைத்து நம்மை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு மறுகட்டமைப்பு செய்துகொள்வது எப்படி, நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை (முன்னேற்றம் மற்றும் பின்னடைவு) எவ்வாறு அறிவு செறிவூற்றியும் புனிதம் கெடாமலும் ஒருங்கிணைத்து உலகம் போகும்போக்கிலேயே சென்று வெற்றிகொள்வது எப்படி என பத்து அத்தியாயங் களில் எளிமையான முறையில் தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர்.

மூன்றாவது பெரும் பிரிவில், புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வற்றை உபயோகித்து உங்களை ஒரு புதிய மனிதராக நடைமுறைப்படுத்துவது எப்படி என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். இதற்காக சுய மதிப்பீட்டு கேள்விகள் அடங்கிய ஒரு பட்டியலை (self-scoring template) தந்துள்ள ஆசிரியர், இந்தக் கேள்விப் பட்டியலில் ஆசிரியர் அவர் வகித்த எட்டு கார்ப்பரேட் பதவிகளின் அடிப்படை யிலான விடைகளைத் தந்து அவை எந்த மாதிரியானவையாக இருந்தன என்பதை எளிமையாகப் புரியும் வகையில் விளக்கவும் செய்துள்ளார்.

தன்னை உணர்ந்து செயல்பட்டு விதியை மதியால் வென்று அதன் மூலம் ஈடுபடும் காரியங்களிலெல்லாம் வெற்றி பெறுவது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை முன்னேறத் துடிக்கும் அனைவரும் ஒருமுறை படித்து பயன் பெறலாம்.