லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

திறமையை வீணாக்காதீர்கள்!

வாய்ப்புகள் ஆயிரம்
பிரீமியம் ஸ்டோரி
News
வாய்ப்புகள் ஆயிரம்

வாய்ப்புகள் ஆயிரம்

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பேச்சிலர்களுக்கு இருக்கும் சிக்கல்களில் பிரதானமானது உணவு. என்றைக்காவது வீட்டுச் சாப்பாடு கிடைக்காதா எனக் காத்துக்கிடப்பார்கள்.

இந்த நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் அருமையாகச் சமைக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்கிற திட்டம்கூட அவர்களிடம் இருக்கும். ஆனால், அதற்கான பொருளாதார வசதி அவர்களிடம் இருக்காது.

ஒருபக்கம் வீட்டு உணவைத் தேடுபவர்கள்; மற்றொரு பக்கம் நன்றாகச் சமைக்கத்தெரிந்தவர்கள். இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்தால் என்ன என்கிற சின்ன ஐடியாவின் பலன்தான் `ஈட்’ (EAT) என்கிற ஆப்.

இப்போது பிரபலமாக இருக்கும் பல ஃபுட் டெலிவரி ஆப்களைப் போலவே இந்த ஆப்பும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் ஹோட்டல்களுக்குப் பதிலாகத் தனிநபர்கள் இருக்கிறார்கள். இதன் மூலமாக வீட்டில் சமைக்கப்படும் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

இந்த ஆப் ஐடியாவுக்குச் சொந்தக்காரர் `தம்பி விலாஸ்' ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநர் அருண் பிரசாந்த். ஏற்கெனவே உணவகத் தொழிலில் நிறையவே அனுபவம் பெற்றவரிடம் இந்தப் புதிய முயற்சி பற்றிப் பேசினோம்.

இப்படி ஓர் ஆப்பை உருவாக்கும் யோசனை எப்படித் தோன்றியது?

எல்லாருடைய அம்மாவும் நல்லா சமைப்பாங்கன்னு தெரியும்... எங்க வீட்டிலும் அப்படித்தான். குறிப்பா எங்கம்மா கையால் போட்டு தரும் காபியைப் போல நான் வேற எங்கேயும் குடித்ததில்லை. வாய்ப்பிருந்தால் அதை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லலாமேனு யோசித்தேன். ஆனால், ஹோட்டல் போன்ற அமைப்பில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஹோட்டல் என்பது திட்டமிட்டுச் சமைக்கும் இடமாக இருக்கும். ஒருநாள் சிறப்பான உணவைக் கொடுத்துவிட்டு வேறொரு நாள் அது இல்லையென்று சொல்ல முடியாது.

வீட்டில் சுவையாகச் சமைப்பவர்கள் மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்னு நினைச்சாங்கன்னா இந்த ஆப் அதற்கு உதவியாக இருக்கும். அது மட்டுமில்ல... சென்னையில வேலை பார்க்கிற இளைஞர்கள் அவங்க அம்மா கையால செஞ்ச சாப்பாட்டை நிச்சயமா மிஸ் பண்ணுவாங்க. அவர்களுக்கும் வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் நல்லதுதானே? அப்படி ஒரு யோசனையில்தான் இந்த ஆப் உருவானது.

இதனால் இல்லத்தரசிகளுக்கு என்ன லாபம்?

திறமையை வீணாக்காதீர்கள்!

உங்களுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்றால், அந்தத் திறமையை எதற்காக வீணாக்க வேண்டும்? உங்களால் ஒரு ஹோட்டல் வைக்க முடியாமல் இருக்கலாம். அந்தக் குறையை இந்த ஆப் சரி செய்யும். இதில் குறிப்பிட்ட அளவு உணவைச் சமைத்தே ஆக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் வேலை செய்தே ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உங்களால் முடிந்த உணவைச் சமைத்து விற்பனை செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது அருமையான தொழில் வாய்ப்பாகவும் அமையும். உணவை பேக்கிங் செய்துவிட்டால் போதும். டெலிவரி பாய் வந்து அதைப் பெற்றுக்கொள்வார்.

வரவேற்பு எப்படி இருக்கிறது?

சென்னையில் வெவ்வேறு ஊர்கள், மாநிலம், நாடுகளைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்குச் சொந்த மண்ணின் உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான உணவு அதே சுவையுடன் இதில் கிடைக்கும் என்பதால் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இந்தஆப் நிச்சயம் இன்னும் பலரிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

வீட்டில் தயாரிக்கப்படும் உணவை விற்பதுதான் இந்த ஆப்பின் நோக்கம். அதே நேரம் அந்த வாய்ப்பை ஹோட்டல்கள் பயன்படுத்திக் கொள்வதை எப்படித் தடுப்பீர்கள்?

இந்த ஆப்பில் சேர விண்ணப்பிக்கும் அனைவரையும் இதில் சேர்த்துக் கொள்வதில்லை. சில வரையறைகளை வைத்திருக்கிறோம். அவற்றுக்குப் பொருந்திப் போனால் மட்டுமே இதில் இணைய முடியும். விண்ணப்பித்தவரின் வீடுகளுக்கு நேரில் சென்று சோதனையிடுகிறோம். ஒரு முறை அல்ல; இரண்டு முறை சென்று பார்த்து உறுதி செய்த பின்னரே அவர்களை இணைக்கிறோம். எனவே ஹோட்டல்கள் இதில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

வீட்டில் சமைக்கப்படும் உணவு சுகாதாரமானதாக இருக்குமா என்பதை எப்படி அறிந்துகொள்வது?

எந்த அம்மாவும் தன் குழந்தைக்கு சுகாதாரமில்லாத உணவைச் சமைத்துக் கொடுக்க மாட்டார்கள். அதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. சமைப்பவர்களின் கிச்சன், அடுப்பு உட்பட சில விஷங்களை போட்டோவாக ஆப் மெனுவில் இணைத்திருக்கிறோம். அதேநேரம் அதிகாரபூர்வமான ஆதாரம் என்று வரும்போது வெறும் நம்பிக்கையும், போட்டோவும் உதவாது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே FSSAI அமைப்பின் சான்றிதழையும் நாங்களே வாங்கிக்கொடுத்து விடுகிறோம்.

திறமையை வீணாக்காதீர்கள்!

இந்த ஆப்பில் இணைவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

இந்த ஆப்பில் இணைந்துகொள்வதற்கு எந்தக் கட்டணமும் நாங்கள் வசூலிப்பதில்லை. உணவைத் தயார் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. அதை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது ஹோட்டலில் கொடுப்பதுபோல பேக்கிங் செய்தே தர வேண்டியிருக்கும். அதனால், பேக்கேஜுக்குத் தேவைப்படும் பொருள்கள் தொடங்கி உணவை எப்படி பேக்கேஜ் செய்ய வேண்டும் என்பதற்குப் பயிற்சி கொடுப்பது வரை அனைத்தையும் நாங்களே நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இதில் ஆர்வம் இருப்பவர்கள் eatalltime.com என்ற இணையதளப் பக்கத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.