Published:Updated:

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு - முழுமையான விபரங்கள்!

ஆசிரியர்
ஆசிரியர் ( pixabay )

இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - ஜூலை 2020 அறிவிப்பினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET July 2020) அறிவிப்பினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) வெளியிட்டுள்ளது.

இரு தேர்வுகள்:

வகுப்பு 1 முதல் 5 வரையிலான முதன்மை நிலை (Primary Stage) ஆசிரியர் பணிகளுக்குத் தாள் 1 தேர்வு, வகுப்பு 6 முதல் 8 வரையிலான தொடக்க நிலை (Elementary Stage) ஆசிரியர் பணிகளுக்குத் தாள் 2 தேர்வு என்று தகுதித் தேர்வு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்
ஆசிரியர்
pixabay

கல்வித் தகுதி:

தாள் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்காணும் ஏதாவதொரு கல்வித் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

1. மேல்நிலைக் கல்வியில் (+2 அல்லது அதற்கு இணையானது) 50% மதிப்பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

2. மேல்நிலைக் கல்வியில் 45% மதிப்பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும். (இது NCTE கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்)

3. மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி மற்றும் நான்காண்டு இளநிலைத் தொடக்கக் கல்விப் பட்டப்படிப்பு (B.El.Ed) தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

4. மேல்நிலைக் கல்வியில் 50% மதிப்பெண்கள் மற்றும் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு (சிறப்புக் கல்வி) தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

5. பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் மற்றும் இளநிலைக் கல்வியியல் பட்டம் (B.Ed) தாள் 2 தேர்வுக்குக் கீழ்க்காணும் ஏதாவதொரு கல்வித் தகுதி தேவையானதாக இருக்கிறது.

1. பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

2. பட்டப்படிப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஓர் ஆண்டு இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

exam
exam
pixabay
நபார்டு வங்கியில் 150 உதவி மேலாளர் பணியிடங்கள்... முழு விவரங்கள்!

3. பட்டப்படிப்பு 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் ஆண்டு இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும். (இது NCTE கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்)

4. மேல்நிலைக் கல்வியில் (+2 அல்லது அதற்கு இணையானது) தேர்ச்சி மற்றும் நான்கு ஆண்டு இளநிலைத் தொடக்கக் கல்விப் பட்டப்படிப்பு (B.El.Ed) தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

5. மேல்நிலைக் கல்வியில் 50% மதிப்பெண்கள் மற்றும் நான்கு ஆண்டு இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.A/B.Sc.Ed அல்லது B.A.Ed / B.Sc.Ed.) தேர்ச்சி, அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

6. பட்டப்படிப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் இளநிலைக் கல்வியியல் (சிறப்புக் கல்வி) பட்டம் (B.Ed (Special Education) இத்தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பம்:

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளட்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் தாள் 1 அல்லது தாள் 2 (Paper I or II) தேர்வுக்கு ரூபாய் 1000/- என்றும், இரு தாள்களுக்கும் (Paper I and II) எனில், ரூபாய் 1200/- என்றும், எஸ்சி., எஸ்டி பிரிவினர் தாள் 1 அல்லது தாள் 2 (Paper I or II) தேர்வுக்கு ரூபாய் 500/- என்றும், இரு தாள்களுக்கும் (Paper I and II) எனில் ரூபாய் 600/- என்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியிலோ, ஈ சலான் மூலம் சிண்டிகேட் அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24-2-2020.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 27-2-2020.

exam
exam
pixabay

தேர்வு முறை:

தாள் 1 தேர்வு இரண்டரை மணி நேர அளவில் இருக்கும். தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy), மொழிப்பாடம் I, மொழிப்பாடம் II, கணிதம், சுற்றுச்சூழல் ஆய்வுகள் (Environmental Studies) என்று ஒவ்வொரு பாடத்துக்கும் 30 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

தாள் 2 தேர்வு இரண்டரை மணி நேர அளவில் இருக்கும். தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் I, மொழிப்பாடம் II என்று ஒவ்வொரு பாடத்துக்கும் 30 மதிப்பெண்களும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்கள் அல்லது சமூக ஆய்வியல் அல்லது சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு சமூக ஆய்வியல் அல்லது சமூக அறிவியல் 60 மதிப்பெண்கள் என்று மொத்தம் 150 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

தேர்வுக்கான முதன்மைக் கேள்வித்தாள், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இருக்கும். மொழியியல் பாடங்களாக தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 20 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 20 மொழிகளில் ஏதாவது இரு மொழிப் பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

தேர்வு நாள்:

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி என்று நான்கு மையங்கள் உட்பட நாடு முழுவதும் 112 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனுமதி அட்டையினை தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக www.ctet.nic.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தாள் 1 தேர்வானது 5-7-2020 அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், தாள் 2 அதே நாளில் மதியம் 2.00 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam
exam
pixabay
`4 கோடி பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!' பொருளாதார ஆய்வறிக்கை 2019-20

தேர்ச்சி சான்றிதழ்:

தேர்வுக்குப் பின்னர், தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டுத் முடிவுகள் வெளியிடப்படும். பங்கேற்ற அனைவரும் பெற்ற மதிப்பெண்களை இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். தேர்வில் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள், தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் இணையதளத்திலிருந்து மதிப்பெண் சான்றிதழைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்ச்சிபெற்றவர்கள் அனைவருக்கும் எண்ணிம முறையிலான (Digital Format) தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். இத்தகுதிச் சான்றிதழை தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு ஆசிரியர் பணியினைப் பெறப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கூடுதல் தகவல்கள்:

தேர்வு குறித்து கூடுதல் தகவல்களுக்கு https://ctet.nic.in/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது Smt.Poonam Sachdeva, Dy.Secretary, Central Teacher Eligibility Test Unit, Central Board of Secondary Education, PS 1-2, Institutional Area, I P Extension, Patparganj, Delhi-110 092 எனும் அஞ்சல் முகவரியிலோ, ctet.cbse@nic.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது 011-22240107, 22240112 எனும் தொலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு