பிரீமியம் ஸ்டோரி

Mobility Engineer 2030

Future Skills for the Automotive Industry

வாகனத்துறையில் வெற்றி பெற தொழில்நுட்பத் திறன்கள் மட்டும் இருந்தால் போதாது. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, அதற்கேற்ப வாகனங்களை வடிவமைத்து தயாரிப்பதும் முக்கியம். அதற்கு ஒரு பிரபலமான அணுகுமுறை டிசைன் திங்கிங். டிசைன் திங்கிங் பின்பற்ற‌ நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய மென்திறன் வாடிக்கையாளர் பரிவு (empathy).

அலுவலகத்துக்குள் உட்கார்ந்து மட்டுமே வாடிக்கையாளர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாது. அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் பார்வையில் ஒரு பிரச்னையை அல்லது வாய்ப்பை அணுக வேண்டும்.

டொயோட்டாவின் `கெம்பா’ கொள்கையின்படி ஒரு பிரச்னையைத் தீர்க்க அது நடக்கும் சரியான இடத்திற்கு நாம் செல்ல வேண்டும். வாகனத்தயாரிப்பில் அந்த இடம் தொழிற்சாலை. கெம்பாவை `சென்று பார்க்கவும்’ (go and see) என்றும் அழைப்பார்கள். இந்தக் கொள்கையின்படி ஒரு பிரச்னை அது நடக்கும் இடத்தில் இருக்காமல் வேறு ஒரு இடத்தில் இருந்தபடி தீர்க்கவே முடியாது. மேலோட்டமாகச் சரிசெய்வதன் மூலம் அதன் அறிகுறியைத்தான் நாம் திருத்துகிறோம். அந்தப் பிரச்னையும் அதன் மூல காரணமும் அப்படியேதான் இருக்கும். “ஏன்” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் ஐந்து முறை கேட்பதால் (Five Whys) ஆழமாகச் சென்று அந்தப் பிரச்சனையின் உண்மையான காரணத்தை அறிந்து அதைச் சரி செய்ய தீர்வுகள் எடுக்கலாம்.

வாகனத்துறையில் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்பை ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஜே.டீ. பவர், சமீபத்தில் ஒரு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது. அதில் முக்கியமான ஒன்று “வாகனத் தயாரிப்பாளர் கள் பல தேவைப்படாத தொழில்நுட்ப அம்சங்களை வண்டிகளில் திணிக்கிறார்கள். இவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத் தாமல் தவிர்க்கவே செய்கிறார்கள்.” அந்த ஆய்வில் பங்கு பெற்ற வாகன உரிமையாளர் களில் பாதிக்கும் மேற்பட்டோர் மூன்றில் ஒரு நவீன அம்சத்தை வாகனம் வாங்கிய முதல் 90 நாட்களில் பயன்படுத்தவே இல்லை. டிசைன் திங்கிங்கைச் சரியாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டால் இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்க்கலாம்.

கொரோனாவால் ஏற்பட்ட சிப் நெருக்கடியைச் சமாளிக்கவும், இதுபோல‌ வாடிக்கையாளர்கள் கேட்கும் அம்சங்களை மட்டும் கொடுப்பது ஒரு நல்ல யுக்திதான். வாகனம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சிப் என்று இன்று இருக்கும் நிலையில், ஒரு வண்டியில் 300லிருந்து 400 வகையான சிப்கள் தேவைப்படுகின்றன. இவற்றை எளிமைப்படுத்தினால் வாகனம் தயாரிக்க ஆகும் நேரமும் செலவும் குறையும்.

டிசைன் திங்கிங் உதாரணங்கள்

ஒரு புதிய பொருளை வெற்றிகரமாக உருவாக்குவதில் பரிவு எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம், நேபாளத்தில் குழந்தைகளை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்துக் கொண்ட ஒரு சவால் குறைப் பிரசவ குழந்தைகளின் உயிரைக் காப்பது. இது காத்மாண்டுவில் ஒரு பெரிய சவாலாக இருந்தது.

அவர்கள் முதலில் உருவாக்கியது ஒரு விலை அதிகமான இன்குபேட்டர். இது மருத்துவமனைகளில் குழந்தைகளை இதமான சூட்டில் வைத்துக்கொள்ளும். ஆனால் இதனால் பலன் அதிகம் காணப்படவில்லை. அதற்கான மூல காரணத்தை அறிய அவ‌ர்கள் களத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் உணர்ந்த ஓர் உண்மை, அந்தக் குறைப்பிரசவக் குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்தன. அவர்களை மருத்துவரின் ஆலோசனைக்கு எடுத்து வரும்போது அவர்களுக்கு வெதுவெதுப்பு தேவைப்பட்டது. தாய்மார்கள் மின்சாரம் இல்லாமல் குறைந்த செலவில், கைய‌டக்கமாக, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய‌, குழந்தைகளை இதமான சூட்டில் வைத்துக்கொள்ள ஓர் இயந்திரம் தேவைப்பட்டது.

அவர்கள் இறுதியில் கண்டுபிடித்தது குழந்தைகளுக்குப் போர்வை போன்ற ஒரு துண்டு. அதற்குள் ஒரு வகை மெழுகு நிரப்பப்பட்டது. கொதிக்கும் நீரில் அதைச் சுட வைத்தால் சில மணி நேரங்களுக்கு அந்த மெழுகு வெதுவெதுப்பாக இருக்கும். வாடிக்கையர்களான தாய்மார்கள், குழந்தைகளின் தேவையை நன்கு அறிந்து செய்யப்பட்ட இந்த மலிவான கண்டுபிடுப்பு அதன் வேலையைச் சரியாகச் செய்தது. வெற்றியும் கண்டது.

இந்திய வாகனத்துறையில் இப்படிப்பட்ட ஓர் உதாரணம் டாடா மோட்டார்ஸின் நானோ. நடுத்தர வர்க்கம் வாங்கக்கூடிய ஒரு மலிவான வாகனம் என்ற நல்லெண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு யோசனை நானோ. ஒரு லட்ச ரூபாயில் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் தயாரிக்கப்பட்ட வாகனம். 2008-ல் வெளிவந்தது. எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை. 2018-ல் கைவிடப்பட்டது. அதற்கு என்ன காரணம்?

நானோ அதன் தொழில்நுட்பத்தாலோ அல்லது விலையாலோ விற்காமல் போகவில்லை. அவர்கள் அணுகிய வாடிக்கை யாளர்களின் தேவைகளையும் மனநிலையை யும் புரிந்து கொள்ளாததே காரணம். நானோவைப் பற்றி பல வல்லுநர்கள் எழுதியிருக்கின்றனர். வாகனத்தை ஒரு சமூக அந்தஸ்துப் பொருளாகப் பார்க்கும் இந்திய நாட்டில் `மிகவும் மலிவான வாகனம்’ என்று அறிமுகப்படுத்தியதால், நானோ விற்காமல் போயிருக்கலாம். விலையோ அதன் மைலேஜோ இந்த அந்தஸ்திற்குப் பிறகுதான் வந்தது.

பரத்தின் டிசைன் திங்கிங் அனுபவம்

பரத், ஒரு வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் மின்சார வாகனப் (Electric Vehicle, EV) பிரிவின் CTO. அவர் சமீபத்தில் ஓர் அமெரிக்கக் கூட்டமைப்புடன் சேர்ந்து EV தயாரிக்க கலந்தாலோசனை செய்ய வெளிநாடு சென்று வந்தார். அப்போது வாகனம் தயாரிப்பில் தங்கள் சிறப்பு அம்சம் டிசைன் திங்கிங் என்று விளக்கி, அனைவரையும் அசத்தினார்.

டிசைன் திங்கிங்கை ஒரு மூன்று கால்கள் கொண்ட முக்காலியாகப் பார்க்கலாம். அந்த மூன்று கால்கள் நாம் முதலில் பார்த்த வாடிக்கையாளரின் விருப்பம் (customer desirability), அந்த விருப்பத்திற்கு ஏற்ற ஒரு பொருளைச் செய்யக்கூடிய சாத்தியக்கூறு (technical feasibility), அந்தப்பொருளை நல்ல லாபம் கிடைக்கும் விலையில் விற்று வணிகம் நடத்தக்கூடிய நம்பகத்தன்மை (economic viability).

இந்த மூன்று கால்களின் மேல் இருக்கும் பலகை தொலைநோக்குப் பார்வையுடன், இயற்கை வளங்களை வீணாக்காமல், எதிர்காலத் தலைமுறைகள் பாதிக்கப்படாத முறையில் தொழிலை வழி ந‌டத்திச்செல்வது (sustainability). இந்த பாகங்களில் ஏதாவது ஒன்று பலவீனமாக இருந்தாலும், அந்தத் தொழில் வெற்றிடையாது. டிசைன் திங்கிங்கை சரியாகப் பயன்படுத்தினால் இந்த அம்சங்கள் எதையும் விட்டுவிடாமல் ஒரு பொருளை வெற்றிகரமாகத் தயாரித்து விற்கலாம். பரத் புதிதாகத் தயாரிக்கவிருக்கும் மின்சார வாகனத்திற்கு டிசைன் திங்கிங் பயன்படுத்தி உருவாக்க ஒரு திட்டம் வைத்திருந்தார்.

மாணவர்களுக்கு டிசைன் திங்கிங்

டிசைன் திங்கிங் தொழில்துறை வல்லுநர்களால் மட்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு பழக்கம் அல்ல. கல்லூரிகளில் தொடங்கி மாணவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொண்டு பின்பற்றலாம். பேராசிரியர் முருகன் இதில் கைதேர்ந்தவர். அவர் பவன் மற்றும் காவ்யாவிற்கு இதை நடைமுறைக்கு ஏற்ற வழிகளில் கற்றுக்கொடுக்க, மனதில் ஒரு திட்டம் வைத்திருந்தார். பவனும் காவ்யாவும் வாகனத்துறையில் விருப்பம் உள்ள‌ இறுதி ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள். படித்து முடித்தவுடன் பரத் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

பரத்தும் காவ்யாவும் எடுத்துக்கொண்ட ப்ராஜெக்ட் ஒரு மின்சார வாகனத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய அம்சங்களை அடையாளம் காண்பது. அதற்கு அவர்கள் முருகனின் உதவியுடன் ஒரு நுகர்வோர் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்த ஆய்வை எங்கே தொடங்கலாம் என்று யோசித்தபோது, முருகன் ஒரு யோசனை கூறினார். டீலர்களின் கடைகளில் வாடிக்கையாளார்கள் வாகனங்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? அதுவே அவர் கொடுத்த அடிப்படைக் கேள்வி. இதற்கு விடை கிடைக்க டிசைன் திங்கிங்கின் கொள்கையின்படி இணையதளம் மூலம் மட்டும் ஆய்வு நடத்தாமல் (online survey) நேரில் சென்று வாடிக்கையாளர்களைச் சந்திக்குமாறு முருகன் கூறினார்.

வாடிக்கையாளர்களின் தேவைக்குத் தீர்வு காண்பது!

தாங்கள் நடத்திய நுகர்வோர் ஆய்வின் முடிவில் பவனும் காவ்யாவும் பல யோசனைகளுடன் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருந்தார்கள். மீண்டும் முருகன் அவர்கள் சரியான பாதையில் செல்ல வழிந‌டத்தினார். பிரச்சனைக்கு விடை காண பல யோச‌னைகளை முன்வைத்து அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க இரண்டு வழிகள் உள்ளன. அவை 1) பரவலாக, வெவ்வேறு கோணங்களில், பல யோசனைகளை முன்னிறுத்தும் மாறுபட்ட முறை (divergent mode), மற்றும் 2) பல யோச‌னைகளில் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் ஒருங்கிணைந்த முறை (convergent mode).

மாறுபட்ட முறையில் நம்முடைய‌ கவனம் யோச‌னைகளின் எண்ணிக்கையில் இருக்க வேண்டும்; அவற்றின் தரத்தில் அல்ல. அணியில் யார் என்ன யோச‌னை சொன்னாலும் அதைச் செய்ய முடியுமா முடியாதா என்று உடனே மதிப்பீடு செய்யாமல், ஒதுக்கிவிடாமல் குறித்துக் கொள்ள வேண்டும். அணியினர் அனைவரிடமிருந்தும் யோசனைகளைக் கேட்கும் ஒரு பிரபலமான வழி ப்ரெய்ன்ஸ்டார்மிங் (brainstorming). இதில் பலமாக குரலை உயர்த்திப் பேசுப‌வர், பெரிய பதவியில் இருப்பவர் கருத்துகள் பொதுவாகக் கேட்கப்படும், எடுத்துக் கொள்ளப்படும். மற்றவர்கள் அமைதியாக வாய் திறக்காமல் இருந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் நல்ல யோச‌னைகள் இருந்தாலும், அவை வெளியே வராமலே இருந்துவிடும்.

இதைவிட ஒரு சிறப்பான வழி ப்ரெய்ன்ஸ்வார்மிங் (brainswarming). எறும்புக் கூட்டத்தில் எப்படி ஒன்றோடு ஒன்று தகவலைப் பரிமாறிக் கொள்ளுமோ, அது போல ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுத்து ஒற்றுமையாக‌ விடை காண்பதே இந்த வழியின் சிறப்பு.

ஒரு விளக்கப்படத்தின் மேலே அந்த அணியின் இலக்கு அல்லது அவர்கள் தீர்க்க முயற்சிக்கும் சவாலை எழுத வேண்டும். அந்தப் படத்தின் கீழே அந்த அணியின் கைய்யிருப்பை (resources) எழுதிக் கொள்ள வேண்டும். அதன் பின் அணியினர் ஒவ்வொரு கையிருப்பையும் யோச‌னைகள் கொண்டு மேலே உள்ள சவாலுடன் இணைக்க வேண்டும். முக்கிய இலக்கு அல்லது சவால் சிறு பகுதிகளாகப் பிரிந்துவிடும்.

பவனும் காவ்யாவும் டீலர்களின் கடைகளில் நடத்திய‌ நுகர்வோர் ஆய்வு
பவனும் காவ்யாவும் டீலர்களின் கடைகளில் நடத்திய‌ நுகர்வோர் ஆய்வு
ஓபன் இன்னவேஷன் பற்றி ஆராய்ச்சி செய்யும் பரத்
ஓபன் இன்னவேஷன் பற்றி ஆராய்ச்சி செய்யும் பரத்

ஒருங்கிணைந்த முறையில் ஒவ்வொரு யோச‌னையையும் ஆரம்பத்திலேயே கணித்து வாடிக்கையாளர்கள் விரும்பும், தொழில்நுட்ப சாத்தியக்கூறு உடைய, லாபகரமான, நிலையான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு யோசனையையும் டிசைன் திங்கிங்கில் பார்த்த இந்த நான்கு அளவுகோல்கள் மூலம் மதிப்பிட வேண்டும். மதிப்பிட்டபின் அணி ஒன்று சேர்ந்து எந்த யோசனையைச் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்ய வேண்டும். பவனுக்கும் காவ்யாவிற்கும் இந்த வழிமுறைகளைப் பற்றிக் கேட்டபிறகு, அவற்றைப் பயன்படுத்த உற்சாகத்துடன் அவர்கள் நண்பர்களை அழைக்க ஆரம்பித்தனர்.

நவீன மின்சார வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் தொடங்கிய பரத்திற்கு, தொடக்கத்தில் ஏமாற்றமாக இருந்தது. அவர் நினைத்த வேகத்தில் அவர் அணியால் செயல்பட முடியவில்லை. அனைவரும் ஒப்புதல் வழங்கும் யோச‌னைகள் பல நாட்கள் எடுத்துக்கொண்டன. அப்போது பரத், தன் மூத்த அதிகரியான அந்நிறுவனத்தின் CTO Dr.ஷர்மாவைச் சந்திக்க சென்றார்.

Dr. ஷர்மா ஒரு நல்ல யோச‌னை கூறினார். நல்ல யோசனைகள் அல்லது சவால்களுக்கு விடைகள் நம் நிறுவனத்தின் உள்ளே இருந்துதான் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. வெளியே உள்ளவர்களும் யோச‌னைகள் கூறலாம். அதற்குப் பெயர் ஓபன் இன்னவேஷன். பல நிறுவனங்கள் இந்த அணுகுமுறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன. அதற்குத் தேவையான வேலைகள் அனைத்தையுமே நாமே செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. வெளியே உள்ளவர்களின் உதவியையும் எடுத்துக்கொள்ளலாம்.

ப்ரெய்ன்ஸ்வார்மிங் வழிமுறை விளக்கப்படம்
ப்ரெய்ன்ஸ்வார்மிங் வழிமுறை விளக்கப்படம்
நிலைத்தன்மை
நிலைத்தன்மை

ஓபன் இன்னவேஷன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள்

ஓபன் இன்னவேஷன் பயன்பாட்டுக்கு ஓர் உதாரணம், பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனம் லெகோ. லெகோ, பொது மக்களிடமிருந்து புதிய பொம்மைகள் தயாரிக்க போசனைகளை வரவேற்கும். வாக்கு எண்ணிக்கை மூலம் நல்ல யோசனைகளிலிருந்து பரிசு வெல்லும் சில தேர்ந்தெடுக்கப்படும். பரிசு பெறும் பொம்மைகளிலிருந்து வரும் வருமானத்தில் 1% ராயல்டியாக யோசனை கூறியவருக்கு அளிக்கப்படும்.

பாரம்பரியத் துறையாக இருந்து வந்த இந்த ஆராய்ச்சி, அனைவரும் பங்கு பெறும் அளவுக்கு மாறியதற்கு தொழில்நுட்பமும் ஒரு காரணம். ஓபன் இன்னவேஷ‌ன் மூலம் வெளியே இருக்கும் நிபுணர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாஸா `ஸால்வ்’ என்ற ஓர் இணையதளத்தை இதற்கு பயன்படுத்துகிறது. ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் (GE) அதன் ஊழியர்கள், நிபுணர்கள், தங்களின் வாடிக்கையாளர்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கியமான சவால்களைச் சமாளிப்பதையே முக்கியமான வேலையாகப் பார்க்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்க இந்த ஓபன் இன்னவேஷன் உதவுகிறது.

GE விமானங்களில் பயன்படுத்தும் ஒரு ப்ரேக்கெட்டின் எடையைக் குறைத்தால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம் என்று இதனை ஒரு சவாலாக அறிவித்தது. அதே சமயம் இன்ஜின் போன்ற கனமான பாகங்களைத் தாங்கிப் பிடிக்கும் இந்த ப்ரேக்கெட் வலிமையாகவும் இருக்க வேண்டும். 30% எடையைக் குறைக்க வேண்டும் என்று அறிவித்த GE-க்கு 700 யோச‌னைகள் வந்தன. இந்தோனேஷியாவில் இருந்த ஒரு பொறியாளர் அனுப்பிய யோசனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் அனுப்பிய யோசனை, 84% எடையைக் குறைத்து வலிமையை இழக்காமல் பார்த்துக்கொண்டது.

பரத்தின் ஓபன் இன்னவேஷன் முயற்சி

பரத், தன் ஆராய்ச்சியில் எடுத்துக்கொண்ட மற்றொரு தொழில்நுட்பம் `டிரைவ் பை வயர்’. இந்தத் தொழில்நுட்பம் நாஸாவால் 1970-ல் அப்போலோ விண்வெளி இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின் விமானத்துறையில் 1990-ல் இராணுவத்தில் தொடங்கி, பிறகு மற்ற விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தன் அணியில் பலரும் இயந்திரவியல் பொறியாளர்களாக இருந்ததால், பரத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை வ‌ரவில்லை.

ஒரு வாகனத்தை இயக்க பாரம்பரியமாக இயந்திர பாகங்கள் பயன்படுத்தப்படும். இவற்றின் எண்ணிக்கை, எடை, தேய்மானம் என எல்லாம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி பழுதுபார்க்கும் நிலை உருவாகும். ஆனால் `டிரைவ் பை வயரில்’ மின்னணு, மின்சார அமைப்புகள் மூலம் வாகனம் இயக்கப்படும். ஆக்ஸிலரேட்டரில் ஒரு சென்ஸார் பொருத்தப்பட்டு, ஓட்டுநரின் கால் அசைவுகளைப் பொருத்து இன்ஜினுக்குச் செல்லும் எரிபொருள் அளவு முடிவு செய்யப்படும். இந்த அமைப்பால் துல்லியமாகப் அளவைக் கணித்து எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

இதில் உள்ள ஒரு பலவீனம் ஐ.ஓ.டீ. (IoT) போன்ற தொலைத்தொடர்பு அம்சங்கள் இருக்கும் வாகனங்களில் இந்த அமைப்புகளைத் தப்பான எண்ணங்களுடன் ஊடுருவ (hacking) வாய்ப்பு உள்ளது. இவற்றின் ஸைபர் செக்யூரிடி மிகவும் முக்கியம்.

`டிரைவ் பை வயர்’-ல் வேலை செய்ய மின்னணு, மின்சார‌, கணினிப் பொறியாளர்கள் அவசியம் தேவை. அதனால் பரத் இதற்கு ஓபன் இன்னவேஷன் மூலம் யோசனைகள் திரட்டலாம் என்று முடிவு செய்தார்.

டிசைன் திங்கிங் என்றால் என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு