நாடு முழுவதும் பலர் வேலை இல்லாமல் இருந்து வருகிறார்கள். கொரோனா சூழல் வேலைவாய்ப்பு இன்மையை இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களே, கையில் எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மே 8-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் சார்பாக மூன்று மாதத்துக்கு ஒரு முறை தனியார் நிறுவனங்களுடன் கைகோத்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு தொடங்கி, பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த முகாம் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனங்களுக்கானது. இதில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்றால், அரசின் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் உங்களின் பதிவு நீக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் வேண்டாம். நிச்சயம் பதிவு எண்கள் நீக்கப்படமாட்டாது" என்று கூறியுள்ளார்.
இதே போன்று சென்னை திருவொற்றியூரில் மே 5-ம் தேதி காலை ஜெயகோபால் கரோடியா பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு தேவைப்படுபவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். வேலைவாய்ப்பு முகாமுக்குச் செல்லும்போது, உங்களின் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பட்டதாரி என்றால் ரெஸ்யூம் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். இது தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம். அரசு வேலை வாங்கித்தருவதாக யாரேனும் கூறினால் நம்பி ஏமாற வேண்டாம்.