Published:Updated:

சைபர் பாதுகாப்பு நிபுணருக்கு ஆஹா ஓஹோ சம்பளம்... என்ன படிக்க வேண்டும்? #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஷார்ஜா அரசு வங்கியில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் தமிழர் விமலாதித்தன், சைபர் பாதுகாப்புத் துறையில் கொட்டி கிடக்கும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்கிறார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

சைபர் பாதுகாப்புத் துறையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் கொண்ட நிபுணர்களை இன்று பல நிறுவனங்களும் வலை வீசித் தேடுகின்றன. ஆனால், தகுதியும் திறமையும் உள்ள நபர்களை அடையாளம் காணுவது என்பது இந்த நிறுவனங்களுக்கு குதிரைக்கொம்பாகவே இருக்கிறது.

Cyber Expert
Cyber Expert
freestocks on Unsplash

நாளுக்கு நாள் பெருகி வரும் சைபர் குற்றங்கள் பெருத்த பொருள் சேதத்தையும் புகழ் சேதத்தையும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி, தீராத தலைவலியாகவே மாறியிருக்கிறது. முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை உடைத்து நொறுக்கி உள்ளே எட்டிப் பார்த்து ரஜினி ஸ்டைலில் 'வந்துட்டேன்... திரும்ப வந்துட்டேன்'னு நம்மை திகிலடைய வைப்பது சைபர் குற்றவாளிகளின் புத்திசாலித்தனம்.

நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போனால் நம் நண்பர்கள் மற்றும் உறவினர் எவரும் அந்த வங்கியில் கணக்கு வைக்க பரிந்துரை செய்வோமா? இது அந்த வங்கியின் வியாபாரத்தைப் படுக்க வைத்துவிடாதா? இதை மனதில் கொண்டுதான் உலகளாவிய வங்கிகள் அனைத்தும் தங்கள் வங்கியின் எலெக்ட்ரானிக் பாதுகாப்பை உறுதி செய்வதற்கென்றே திறமை வாய்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்களை சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்துப் பணியில் அமர்த்துகின்றன.

Hacking
Hacking
Setyaki Irham on Unsplash

வங்கியில் மட்டுமன்றி இதர பிற தொழில்துறையினரும் தங்கள் நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள அவர்களுடைய வருடாந்தர பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்குகின்றனர்.

சைபர் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற என்ன படிக்கலாம் என்று கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

ஒரு நிறுவனத்தின் பல்லடுக்கு சைபர் பாதுகாப்பை நிர்மாணிப்பதிலிருந்து, சைபர் பாதுகாப்பைத் தணிக்கை செய்வது, பாதுகாப்பான முறையில் கணினி நிரல்களை எழுதுவது, க்ளவுட் மூலம் பாதுகாக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சைபர் குற்றங்களை ஆய்வு செய்வது, சைபர் பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகளை ஆராய்வது என்று ஒவ்வொரு பிரிவுக்கும் பிரத்தியேகப் பட்டயப் படிப்புகள் தனித்தனியாக உள்ளன. அவை என்னவென்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்:

Hacking
Hacking
Pixabay

CISSP (Certified Information Systems Security Professional )

செல்லமாக 'சிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்தப் பட்டயப் படிப்புதான் இன்று மார்க்கெட்டில் இருக்கும் சைபர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்புகளில் முதன்மையானது. கிட்டத்தட்ட சைபர் பாதுகாப்பின் ஆதி முதல் அந்தம் வரை அக்கு அக்காகப் பிரித்து அலசும் இந்தப் பட்டயப் படிப்பு சைபர் பாதுகாப்புத் துறையில் நுழைய முயல்வோர்களுக்கு அது பற்றிய ஒரு நிறைவான புரிதலைக் கொடுத்து அவர்களை ஆரம்ப நிலை சைபர் பாதுகாப்பு நிபுணராகப் பணியில் சேர உதவும்.

SSCP (Systems Security Certified Practitioner)

எலெட்ரானிக் பொருள்கள் மற்றும் கணினி நிரல்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் பொருள்கள் (Products) மற்றும் பல்வேறு கணினி உபகரணங்களின் பாதுகாப்பைப் பற்றிக் கற்றுத்தருகிறது இந்தப் பட்டயப் படிப்பு. இது கணினி சம்பந்தப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் நிபுணராக (Product Security Expert) வேலையில் சேர உதவும்.

Representational Image
Representational Image
Pixabay

ISSMP (Information Security System Management Professional)

சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நிறுவனம் பயன்படுத்தும் சைபர் பாதுகாப்பு உபகரணங்களைக் கையாள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கும் இந்தப் பட்டயப் படிப்பு, சைபர் பாதுகாப்பு உபகரணங்களை விற்கும் சிமாண்டேக், மேக்கபீ போன்ற உலகளாவிய நிறுவனங்களில் நிபுணராக வேலையில் சேர உதவும்.

ISSEP (Information Systems Security Engineering Professional)

ஒரு நிறுவனத்தின் பல்லடுக்கு சைபர் பாதுகாப்பை நிர்மாணிக்கத் தேவையான சைபர் செக்யூரிட்டி என்ஜினீயரிங் யுக்திகளை இந்தப் பட்டயப் படிப்பு கற்றுத்தரும். இதன் மூலம் ஒரு நிறுவனத்துக்குத் தேவையான பல்லடுக்கு சைபர் பாதுகாப்பை நிர்மாணிக்கும் அணியில் ஒரு முக்கியமான நபராக உள்ளே நுழையலாம்.

ISSAP (Information Systems Security Architecture Professional)

ஒரு நிறுவனத்தின் பல்லடுக்கு சைபர் பாதுகாப்பை நிர்மாணிக்கத் தேவையான சிக்கலான சைபர் செக்யூரிட்டி என்ஜினீயரிங் யுக்திகளை வடிவமைக்க இந்தப் பட்டயப் படிப்பு கற்றுத் தரும். இதைப் படிப்பதன் மூலம் ஒரு நிறுவனத்திற்குத் தேவையான பல்லடுக்கு சைபர் பாதுகாப்பை நிர்மாணிக்கும் அணியில் ஒரு முக்கியமான நபராக சேரலாம்.

Corporate Office
Corporate Office
Razvan Chisu on Unsplash

CSSLP (Certified Secure Software Lifecycle Professional)

சைபர் குற்றவாளிகளால் தாக்கிச் சீரழிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பான கணினி நிரல்களை வடிவமைக்கத் தேவையான யுக்திகளை இந்தப் பட்டயப் படிப்பு கற்றுத்தரும். கணினி நிரல்களை எழுதுவதில் விருப்பம் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நுழைய முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டது இந்தப் பட்டயப் படிப்பு.

HCISSP (HealthCare Information Security and Privacy Practitioner)

மருத்துவத் துறையில் கையாளப்படும் நோயாளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறுபட்ட தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் யுக்திகளுக்கான படிப்பு இது. மருத்துவத் துறையில் சைபர் பாதுகாப்புப் பணியில் சேர இந்தப் பட்டயப் படிப்பு உதவும்.

CCFP (Certified Cyber Forensics Professional)

சைபர் குற்றங்கள் நடந்து முடிந்த பிறகு, அந்தக் குற்றங்களை அலசி ஆராய்ந்து ஆதியோடு அந்தமாக அதன் சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பது சம்பந்தப்பட்ட யுக்திகளைக் கற்பதற்கான படிப்பு இது. காவல் துறையில் உள்ள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் வேலை பெற இது உதவும்.

Hacking
Hacking
methodshop from Pixabay

CEH (Certified Ethical Hacking)

சைபர் பாதுகாப்பு நிபுணராக, சைபர் குற்றவாளிகளின் தில்லாலங்கடிகளைக் கற்று தேர்வது ரொம்பவும் அவசியம். ஒரு நிறுவனத்தை ஹேக்கர்கள் எப்படி எல்லாம் தாக்குவார்கள் என்பதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து அலசும் இந்தப் பட்டயப் படிப்பு சைபர் பாதுகாப்புத் துறையில் ஆரம்ப நிலை என்ஜினீயராகப் பணியில் சேர உதவும்.

CISA (Certified Information Systems Auditor)

இது கணினித் துறையில் தணிக்கையாளராக (Auditor) வேலையில் அமர நினைக்கும் ஒவ்வொருவரும் கற்றுத் தேர்வடைய வேண்டிய ஒன்று. இதைக் கற்றுத் தேர்வதன் மூலம், ஒரு நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பைத் தணிக்கை செய்யும் அணியின் உறுப்பினராகப் பணியில் சேரலாம்.

CISM (Certified Information Security Manager)

ஒரு நிறுவனத்தின் ஒட்டு மொத்த சைபர் பாதுகாப்பு மேலாண்மையும் இந்தப் பட்டயப் படிப்பைக் கற்றுத் தேர்பவர்கள் கையில் வந்து சேரும். ஒரு நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு அணியின் முகமாக இருக்கக்கூடிய அளவு ரொம்பவும் பொறுப்பு வாய்ந்த சைபர் பாதுகாப்பு அணித் தலைவர் வேலைக்கு, மற்ற போட்டியாளர்களின் போட்டிக்கு நடுவே உங்கள் சார்பாக ஒரு சீட்டு போட இந்தப் பட்டயப் படிப்பு உதவும்.

மேற்கண்ட படிப்புகளைத் தவிர காம்ப்ட்டியா (Comptia), ஜீஸேக் (GSEC), சென்ஸ் (SANS) போன்ற உலகளாவிய நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்த சைபர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பட்டயப் படிப்புகளை நடத்துகின்றன.

Studies
Studies
Dylan Gillis on Unsplash

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகம் MSc (Cyber Security) என்னும் இரண்டு வருடப் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படிப் பல்வேறு பட்டயப் படிப்புகள் இருப்பதால் மாணவர்களும் பணியாளர்களும் ரொம்பவும் குழம்பாமல் தங்கள் தேவைக்குத் தகுந்த சைபர் பாதுகாப்புப் பட்டயப் படிப்பைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற்ற பிறகு தாங்கள் படிக்க விரும்பும் பட்டயப் படிப்பைப் பற்றிய முடிவை எடுத்தல் நலம். இப்படிப்பட்ட படிப்புடன், கார்ப்பரேட் உலகில் நீடித்து நிற்கத் தேவையான இதர பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்வது ரொம்பவும் அவசியம்.

இதை எல்லாம் மனதில்கொண்டு, சரியான திட்டமிடலுடனும் தயாரிப்புடனும் களத்தில் இறங்கினால் நானும் ஒரு சைபர் பாதுகாப்பு நிபுணர்தான் என்று கெத்தாக உங்கள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

- விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு