Published:Updated:

``சிங்கப்பூரில் வேலை... ஒரு லட்சம் சம்பளம்!'' - உதறிய புதுக்கோட்டை சுண்டல் வியாபாரி

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

"அந்த நேரத்துல, வாடிக்கையாளர்கள்தான் ரொம்பவே உதவி செஞ்சிருக்காங்க. அதனால, வாடிக்கையாளர்களை நம்ம எப்பவும் அன்போட நடத்தணும்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு."

Sudharshan selling Sundal
Sudharshan selling Sundal ( ஆர்.வெங்கடேஷ் )

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்திலிருக்கும், தேங்காய், மாங்காய்ப் பட்டாணி சுண்டல் தள்ளுவண்டிக் கடையைத் தெரியாத புதுக்கோட்டைவாசிகளே இருக்க முடியாது. அந்தளவுக்கு இந்தக் கடை ரொம்பவே பிரபலம். புதுக்கோட்டையில் மூன்றாவது தலைமுறையாக சுதர்சனின் குடும்பம் பட்டாணி சுண்டல் வியாபாரம் செய்துவருகிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கடையின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

Sudharshan selling Sundal
Sudharshan selling Sundal
ஆர்.வெங்கடேஷ்

பெரிய அண்டா முழுவதும் பட்டாணிச் சுண்டல் நிறைந்து இருக்கிறது. சுமார் 4 மணி நேரம் வரையிலும் அங்கு அந்தத் தள்ளுவண்டிக் கடை இருக்கும். அந்தச் சமயத்தில் சுண்டல் வியாபாரம் பரபரக்கிறது. இந்தப் பட்டாணி சுண்டல்தான் பேருந்து நிலைய பயணிகள் பலருக்கும் மதியச் சாப்பாடு. பாரம்பர்யம் மாறாமல் ஒரே சுவை இருப்பதால், 50 வருஷமாக இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பலர் இருக்கின்றனர்.

மூன்றாவது தலைமுறையாகப் பட்டாணி சுண்டல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சுதர்சன், வாடிக்கையாளர்களுக்குப் பட்டாணி சுண்டலை மடித்துக் கொடுத்தபடி பேசினார்.

"எங்க தாத்தா ராஜகோபால்தான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சு வச்சாரு. தாத்தாவுக்கு அப்புறம் அப்பா இந்தத் தொழிலுக்கு வந்தாரு. தாத்தா இறந்தப்ப ரொம்பவே குடும்பத்துல கஷ்டம். அப்பாவால இந்தத் தொழிலைத் தொடர முடியாத நிலைதான் இருந்திருக்கு. அந்த நேரத்துல, வாடிக்கையாளர்கள்தான் ரொம்பவே உதவி செஞ்சிருக்காங்க. அதனால, வாடிக்கையாளர்களை நம்ம எப்பவும் அன்போட நடத்தணும்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.

Sudharshan selling Sundal
Sudharshan selling Sundal
ஆர்.வெங்கடேஷ்

எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து நானும் அப்பாவுக்கு ரொம்பவே உதவியாக இருந்தேன். வியாபாரமும் பார்ப்பேன். கொஞ்ச நாளில் எனக்குக் கல்யாணம் ஆச்சு. அந்த நேரத்துலதான் சிங்கப்பூர் வேலை கிடைச்சிச்சு. மொதல்ல அப்பாவுக்கு அனுப்ப பெருசா விருப்பமில்லே. அதற்கப்புறம் மாமனார், மனைவின்னு எல்லாரும் சொன்னதுக்குப் பிறகு அப்பாவும் சரின்னாரு. அங்க போய் டிரைவராக வேலை பார்த்தேன். மாசம் 1 லட்சம் ரூபா சம்பளம். நல்லபடியாத்தான் வேலை போயிட்டு இருந்துச்சு. ஒருநாள், வீட்டிலிருந்து அழைப்பு வந்துச்சு. மெல்லிய குரலில் பேசிய அக்கா, 'திடீர்னு அப்பா இறந்து போயிட்டாருடா தம்பி'ன்னு சொல்லி அழுதுச்சு. எனக்கு கை, கால் எதுவும் ஓடலை.

எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு, ஊருக்கு வந்துட்டேன். அந்த நேரத்துல மனைவிக்கு ரொம்பவே உடம்பு சரியில்லாம போச்சு. அப்போவோட திடீர் இறப்பு, மனைவிக்கு உடம்பு சரியில்லாம போனது என்னோட மனசை ரொம்பவே பாதிச்சிருச்சு. எத்தனை பிரச்னை வந்தாலும், அப்பா ஒருநாள்கூடச் சுண்டல் வியாபாரம் செய்யப்போகாம வீட்டுல சும்மா இருந்ததில்லை. அவர் இறப்புக்கு அப்புறம் 2 மாசத்துக்கும் மேலாக சுண்டல் வியாபாரமும் நின்னுப்போச்சு. கொஞ்ச நாள் வீட்டிலேயே இருந்து மனைவியையும் அம்மாவையும் பார்த்துக்கிட்டேன். அந்த நேரத்துல சிங்கப்பூரிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு.

Sundal Stall
Sundal Stall
ஆர்.வெங்கடேஷ்

மீண்டும் நான் சிங்கப்பூர் சென்றுவிட்டால், பட்டாணி சுண்டல் வியாபாரம் அப்பாவோட முடிஞ்சிபோயிடும்னு மட்டும் தோணுச்சு. `அவருக்கு அப்புறம் இந்தத் தொழிலை எப்படியாவது தொடர்ந்து நடத்தணும்'னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு `தம்பி... இந்தத் தொழிலை விட்றாதேய்யா'னு அம்மா சொன்னுச்சு. அப்பாவோட ஆசையும் அதுதான். அதற்கப்புறம் எதைப்பத்தியும் நான் யோசிக்கலை. சிங்கப்பூர் வேலை வேண்டாம்னு சொல்லி விசாவை ரத்து செஞ்சிட்டேன். இப்ப முழு நேரமும் பட்டாணி சுண்டல் விற்பனை செய்றேன். சிங்கப்பூர் வேலையை விட்டுவிட்டு சுண்டல் விற்கப்போறோம். கேலி, கிண்டல் பண்ணுவாங்கன்னுதான் மொதல்ல நெனச்சேன்.

ஆனா, கிண்டல் ஏதும் செய்யலை. அனைவரும் என்னை ரொம்பவே பாராட்டினாங்க. அப்பாவுக்கு மாதிரி எனக்கும் ரொம்பவே வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தாங்க. மனைவி சுண்டல் வேகவைத்தால், அம்மா வெங்காயம் வெட்டுவாங்க. நான் மாங்காய் நறுக்குவேன். இப்படி, குடும்பத்தோட சேர்ந்து வேலையைப் பிரிச்சுக்குவோம். வியாபாரத்துல மாங்காய் ரொம்பவே முக்கியம். மாங்காய் சீஸன் இல்லாதபோதும், அது எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கி வந்துடுவோம். ஆனாலும், முன்னமாதிரி இப்போ வருமானம் பெரிசா இல்லை.

Sundal Preparation
Sundal Preparation
ஆர்.வெங்கடேஷ்
அப்பாவைத்தான், நாம பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள முடியலை. அம்மா, மனைவியையாவது பக்கத்துல இருந்து பார்த்துக்குறேன். குறைவாகச் சம்பாதிச்சாலும், நிறைவா வாழ்கிறேன்.
சுதர்சன்

முன்னாடி எல்லாம் காலையில 10 மணிக்கு வந்தா, மதியம் 2 மணிக்கெல்லாம் வியாபாரம் முடிஞ்சிடும். இப்போ சில நேரங்கள்ல மாலை 5 மணி ஆகிவிடுகிறது. பல நாள்கள் சுண்டல் மிச்சப்பட்டும் போகிறது. திரும்ப, சிங்கப்பூர் போயிடுவோம்னுகூடச் சில நேரங்கள்ல தோணும். ஆனா, ஒருநாளும் தவறாம நம்ம சுண்டலைச் சாப்பிட்டு மதிய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் பத்து, பதினெஞ்சு பேர் இருக்காங்க. அவங்களுக்காவது, நம்ம கடையை நடத்தணும்னு நெனச்சுக்குவேன்.

Sudharshan selling Sundal
Sudharshan selling Sundal
ஆர்.வெங்கடேஷ்

மொதல்ல பைசாவில்தான் வித்துக்கிட்டு இருந்திருக்காங்க. இப்போ விலைவாசி உயர்வால், ஒரு சுண்டல் 15 ரூபாய்க்கு விற்கிறோம். ரொம்ப கஷ்டப்படுறவங்க வந்து கேட்டால், அவங்களைப் பார்த்து காசு எல்லாம் வாங்காம சுண்டல் கொடுத்துடுவேன். இப்பவுள்ள பெரும்பாலான இளைஞர்கள் பாஸ்ட் ஃபுட்தான் அதிகம் விரும்புறாங்க. அதுல உள்ள ஆபத்து அவங்களுக்குத் தெரிவது இல்லை.

உங்களோட தேங்காய் மாங்காய் சுண்டல்தான் எங்களோட மதியச் சாப்பாடு என்று வாடிக்கையாளர்களே என்கிட்ட அடிக்கடிச் சொல்வாங்க!
சுதர்சன்
"என்னைப்போல யாரும் மதுவால் பாதிக்கப்படக்கூடாது!" - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்

அவங்க நம்ம சுண்டலையும் விரும்பிச் சாப்பிடணும். அப்பத்தானே எங்கள் பிழைப்பு ஓடும். லாபம் கிடைக்குதோ... இல்லையோ, மூணாவது தலைமுறையாக இந்தத் தொழிலை விடாமல் செஞ்சிக்கிட்டு இருக்கேன். எனக்கப்புறம் என் பைனும் இந்தத் தொழிலுக்கு வரணும்னுதான் எனக்கு ஆசை. ஆனா, அந்த முடிவு அவன் கையிலதான் இருக்கு" என்று முடித்துக்கொண்டார்.