Published:Updated:

பணியாளர்களுக்கான பத்து குழப்பங்களும் பளிச் தீர்வுகளும்! அசாதாரண வெற்றிக்கு அசத்தல் வழிகாட்டல்

S E L F I M P R O V E M E N T

பிரீமியம் ஸ்டோரி

நாம் பார்க்கும் வேலையானது வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்ததாகவே இருக் கின்றன. நமது தொழில் வாழ்க்கையை இப்படித்தான் நிர்வகித்துக்கொள்ள வேண்டுமென்று எந்தவித சூத்திரமும் இல்லை. என்றாலும், நாம் வேலை செய்யும் பணியானது காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கக்கூடியது; சிலர் அதற்கேற்ப தங்களையும் மாற்றிக் கொண்டு அதனால் ஏற்படக்கூடிய சவால்களை வாய்ப்புகளாக எண்ணிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பலர் அந்த சூட்சுமம் தெரியாமல் போராடு கிறார்கள். இது புதிதாகப் பணியில் சேர்பவர்களிலிருந்து மிகவும் உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய அனை வருக்கும் பொருந்தும்.

ஷிவ் ஷிவக்குமார்
ஷிவ் ஷிவக்குமார்

ஒரு நிறுவனத்தில் கத்துக் குட்டியாகச் சேருபவரிலிருந்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வரை அனைவருக்கும் ஏதாவதொரு நிலையில் அவர்களது பணி சம்பந்தமாகக் குழப்பங்கள் ஏற்படக் கூடும். அப்படி ஏற்படக்கூடியவை களில் முக்கியமான பத்து குழப்பங் களைக் குறிப்பிட்டு, அவற்றைச் சமாளித்து எப்படி அசாதரணமாக வெற்றி பெறுவது என்பது பற்றி ஆதித்ய பிர்லா குழுமத்தில் குழு நிர்வாகத் தலைவராக (Group Executive President) பணியாற்றி வரும் ஷிவ் ஷிவக்குமார் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் `தி ரைட் சாய்ஸ் – ரிசால்விங் 10 கேரியர் டைலமாஸ் ஃபார் எக்ஸ்ட்ராடினரி சக்சஸ்’ (The Right Choice – Resolving 10 Career Dilemmas for Extraordinary Success) ஆகும். இவர் இதற்கு முன்பாக நோக்கியா, பெப்சிகோ ஆகிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

தனது அனுபவங்களுடன் 11 சி.இ.ஓ-க்கள் ஆறு தொழில்முனை வோர்கள், மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ஆறு பேர்களின் அனுபவங்களும், அவர்களது கருத்துகளும் நிஜ தொழில் வாழ்க்கை யில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உதாரணங் களுடன் புத்தகம் எழுதிய ஆசிரிய ரான ஷிவ் ஷிவக்குமார் பதிவு செய்திருப் பது இதை வாசிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக உதவியாக இருக்கும். இதற்கு முன்னுரை எழுதியிருக்கும் பெப்சிகோவின் மேனாள் தலைவர் இந்திரா நூயி, ‘‘இந்த நூல் எனது பணிவாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் கிடைத்திருந்தால் எவ்வளவு பலனுள் ளதாக இருந்திருக்கும்’’ என தனது ஆதங்கத்தை முன்னுரையில் வெளிப் படுத்தியிருக்கிறார்.

தொழில் வாழ்க்கை அனுபவத்தில் ஷிவ் கற்றுக்கொண்ட ஐந்து படிப் பினைகளுடன் இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது.

1. வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கென்று 101 வழிகாட்டிகள் கொண்ட கையேடு எதுவுமில்லை. தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைய பல விஷயங்கள் தேவை. அவற்றில் முக்கியமானவை திறமை, தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வது, சரியான நேரத்தில் சரியான வாய்ப்புகள் கிடைப்பது, அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டம்.

2. பெரும்பாலான விண்ணப்ப தாரர்களிடையே அவர்களுக்கிருக்கும் திறமைகள் பொதுவாக இருந்தாலும் இரண்டு பணிகள் ஒரே மாதிரி இருப்ப தில்லை.

3. நல்லதொரு தொழில் வாழ்க்கைக்கு நேரமென்பது மிக முக்கியமானதாகும் (right time).

4. தொழில் வாழ்க்கையில் உங்களது பங்களிப்பானது செய்யும் தொழிலுக்கான வரையறைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

5. விரக்தி ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு முதிர்ச்சி வேண்டும்.

பணியாளர்களுக்கான பத்து குழப்பங்களும் பளிச் தீர்வுகளும்! அசாதாரண வெற்றிக்கு அசத்தல் 
வழிகாட்டல்

சரி, இனி தொழில் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் பொதுவாக நாம் எதிர்கொள்ளக்கூடிய பத்து குழப்பங்கள் என்ன?

1. தொழில் வாழ்க்கையில் பணமே பிரதானமா?

2. மேலாண்மைக் கல்வியை ஏற்கெனவே ஒரு கல்வி நிலையத்தில் முடித்து விட்டேன். இருந்தாலும் நல்ல தொழில் வாழ்க்கை அமைய மிகவும் புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் (இந்தியா அல்லது வெளிநாடு) இன்னொரு எம்.பி.ஏ பண்ணலாமா?

3.வேலை காரணமாக தம்பதியர் இரண்டு வேறு இடங்களில் இருப்பதை எதிர்கொள்வது எப்படி? இன்றைய உலகில் பலரும் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான குழப்பம் இது.

4. வேறெங்காவது வேலை செய்துவிட்டு முதலில் வேலை பார்த்துவந்த நிறுவனத்திலேயே மீண்டும் சேரலாமா?

5. பணி செய்துவரும் காலத்தில் இடையே குடும்பச் சூழ்நிலை அல்லது பிடித்தமான ஒன்றைச் செய்வதற்கு அல்லது மேல் படிப்பு படிப்பதற்கு என ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் பணியிலிருந்து ஓய்வு (sabbatical) பெற்றுக்கொண்டு மீண்டும் வேலைக்குச் சேரலாமா?

6. செய்துவரும் பணியிலிருந்து முற்றிலும் புதிதான தொழில் துறைக்கு மாறலாமா? (அதாவது, நுகர்வோர் பொருள்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனத்தில் இருந்து இன்ஷூரன்ஸ் நிறுவனத் துக்கு)

7. வெளிநாட்டு வேலையை ஏற்றுக்கொள்ளலாமா?

8. தொழில்முனை வோராக மாறலாமா?

9. ஒரு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி கள் மட்டுமே பங்கு வகிக்கும் `போர்டில்’ சேரலாமா, வேண் டாமா?

10. தலைமை நிர்வாக அதிகாரிக்கும் குழப்பம் ஏற்படுமா?

பணியாளர்களுக்கான பத்து குழப்பங்களும் பளிச் தீர்வுகளும்! அசாதாரண வெற்றிக்கு அசத்தல் 
வழிகாட்டல்

மேலே குறிப்பிடப்பட்ட குழப்பங்களில் சிலவற்றை நாமும் நம் தொழில் வாழ்க்கையில் எதிர் கொண்டிருப்போம். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் திருமணமானவுடன் அல்லது குழந்தைப் பேறுகாலத்தின்போது வேலையைத் தொடர்வதா அல்லது குழந்தை ஓரளவுக்கு வளரும் வரை விடுமுறையில் (தற்காலிக ஓய்வில் செல்வது) செல்வதா என்ற குழப்பம் கண்டிப்பாக ஏற்படும்.

ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் அந்தந்தத் துறை சார்ந்த அனுபவஸ்தர்களின் கருத்துகளைக் கேள்வி, பதில்களாகக் கொடுத்திருப் பதுடன், அந்தக் குறிப்பிட்ட குழப்பம் குறித்து நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு ஐந்து விஷயங்களை நூலாசிரியர் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

உதாரணமாக, தொழில் வாழ்க்கையில் பணம் முக்கியம் தான். தற்போது வேலை பார்த்து வரும் நிறுவனம் கொடுப்பதை விட சிறிதளவு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக வேறொரு நிறுவனத்துக்கு பலர் தாங்கள் பார்த்துவருகிற வேலையை விட்டுவிட்டு அங்கே செல்கிறார்கள். ஆனால், தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்கையில் முதலில் சேரும் நிறுவனத்தில் சில வருடங்களாவது தொடர்ந்து வேலை பார்த்து அனைத் தையும் கற்றுக் கொள்ளும் பட்சத் தில் அதனால் ஏற்படும் பயன் பிற்காலத்தில் பிரதானமானதாக இருக்கும் என தன் அனுபவத்தைச் சொல்கிறார் ஆசிரியர்.

‘‘குறிப்பாக, இந்த கோவிட் காலத்தில் சம்பளம் மற்றும் சலுகைகளைவிட பாதுகாப்பான வேலைக்கே மக்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதனால்தான் கோவிட் காலத்துக்கு முன்பு வாங்கிய சம்பளத்தை விட 20% குறைவாகக் கொடுத்தாலும் தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணிபுரிய மக்கள் விரும்புகிறார்கள்.

அதுபோல, கடன் வாங்கும் போது அது தேவையா, எந்த அளவுக்கு அதில் ரிஸ்க் இருக்கிறது, நாம் பார்த்துவரும் வேலையில் எந்த அளவுக்கு வருமானம் அதிகரிக்கும் என்பது போன்ற விஷயங்களையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப முடிவு களை எடுக்க வேண்டுமென நூலாசிரியர் கூறுகிறார்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சமூகமானது முன்னெப்பதும் இல்லாத அளவுக்கு ஒரு நெருக்கடியில் இருந்துவருகிறது. அனைவரும் இந்தக் காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையை விட ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதுடன், இந்தக் கடுமை யான காலகட்டம் விரைவில் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள்.

இந்தக் காலகட்டம் எழுப்பியிருக்கும் முக்கியமான சில கேள்விகள்: நாம் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாமா இல்லை, அலுவலகத்திலிருந்து வேலை பார்க்கலாமா இல்லை, இரண்டும் கலந்த மாதிரியான ஓர் ஏற்பாடு சரிபட்டு வருமா என்பதாகும். முன்பெல்லாம் நிறுவனத்துக்கு நிறுவனம் கலாசாரம் மாறுபடும் ஆனால், இன்றைக்கு வேலை செய்யுமிடமே ஒரு சவாலாக நம் முன் நிற்கிறது.

குறிப்பாக, புதிதாகப் பணியில் சேர்பவர்கள் அல்லது கோவிட் கால சம்பளக் குறைவால் இப்போது வேலை பார்த்துவரும் நிறுவனத்திலிருந்து அதிக சம்பளம் கொடுப்பதாகச் சொல்லக்கூடிய நிறுவனங்களில் சேர விரும்புபவர்கள் போன்றோருக்கு எதிர்காலம் அச்சுறுத் தலாகத் தோன்றக்கூடும். அவர்களுக்கு இந்த நூலில் அனுபவ ரீதியாகச் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும், கண்ணோட்டங்களும் கண்டிப்பாக உதவும்’’ என தான் நம்புவதாக ஆசிரியர் நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான் என்பது இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அனைவரும் அவசியம் உணர்வார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு