Published:Updated:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க! #EmploymentNews

தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத் துணைச் சேவை அமைப்பின் (Tamil Nadu Public Health subordinate Service) கீழ் செயல்படும் பொதுச் சுகாதார மையங்களில் காலியாக இருக்கும் 1,234 கிராமச் சுகாதாரச் செவிலியர் மற்றும் துணைச் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

செவிலியர்
செவிலியர்

தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத் துணைச் சேவை அமைப்பின் (Tamil Nadu Public Health subordinate Service) கீழ் செயல்படும் பொதுச் சுகாதார மையங்களில் காலியாக இருக்கும் 1,234 கிராமச் சுகாதாரச் செவிலியர் (Village Health Nurse) மற்றும் துணைச் செவிலியர் மருத்துவச்சி (Auxiliary Nurse Midwife) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டிருக்கிறது.

செவிலியர்
செவிலியர்
அரசுக் கல்லூரியில் பேராசிரியராகணுமா... 2,331 பணியிடங்கள் காலி... உடனே அப்ளை பண்ணுங்க!

கல்வித் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

1. அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட துணைச் செவிலியர் மருத்துவச்சி (Auxiliary Nurse Midwife) பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் இந்தியச் செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட துணைச் செவிலியர் மருத்துவச்சி படிப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தமிழ்நாடு செவிலியர் குழுவில் பதிவு செய்யப்பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

3. முகாமில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

செவிலியர்
செவிலியர்

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 1.7.2019 அன்று 18 வயதுக்குக் குறையாமலும் பொதுப்பிரிவினருக்கு 40 வயதுக்கு அதிகமாகாமலும் மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 57 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளாயிருப்பின் 50 வயதுக்கு அதிகமாகாமலும் ஆதரவற்ற விதவைகளாயிருப்பின் 57 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மருத்துவச் சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர் / பட்டியலினத்தவர் (அருந்ததியர்) / பழங்குடியினர் / மாற்றுத் திறனாளிகள் / ஆதரவற்ற விதவை பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ 300, மற்றவர்கள் ரூ. 600 செலுத்த வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பிக்கவும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும் கடைசி நாள்: 13.11.2019. விண்ணப்பக் கட்டணத்தை இந்தியன் வங்கி வழியாகச் செலுத்த கடைசி நாள்: 15.11.2019

செவிலியர்
செவிலியர்

தேர்வு முறை

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

2012-ம் ஆண்டு வரையிலிருந்த பத்தாம் வகுப்பு தகுதியுடனான துணைச் செவிலியர் மருத்துவச்சி படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்குப் பயிற்சி சான்றிதழ் / பட்டயச் சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 50%, மேல்நிலைத் தேர்வு (PUC/HSC) மதிப்பெண்களுக்கு 30%, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 20% எனக் கொண்டு கணக்கிடப்படும். இங்கு, பத்தாம் வகுப்பை அடிப்படையாகக் கொண்ட 18 மாத கால அளவிலான கிராமச் சுகாதாரச் செவிலியர் மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்கள்) (Multipurpose Health Workers (Female)) படிப்பு முடித்திருப்பவர்களுக்கு, இந்தப் படிப்புகளுக்கான சான்றிதழ் மதிப்பெண்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சில படிப்புகளுக்கு மேல்நிலைத் தேர்வு (PUC/HSC) அடிப்படைத் தகுதியாக இருந்தால், மேல்நிலைத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2012-ம் ஆண்டுக்குப் பின்பான சான்றிதழ்/பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 50%, மேல்நிலைத் தேர்வு (PUC/HSC) மதிப்பெண்களுக்கு 30%, பத்தாம் வகுப்பு (SSLC) மதிப்பெண்களுக்கு 20% எனக் கொண்டு கணக்கிடப்படும்.

இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிலை 8-க்கான பணிகளுக்குரிய ரூ.19,500 – 62,000 எனும் சம்பளம் ஏற்ற முறையிலான சம்பளம் வழங்கப்படும்.

ஏர் இந்தியாவில் இன்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாமா?

கூடுதல் தகவல்கள்

இந்தத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு மருத்துவச் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.