கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்!

தமிழ்நாட்டில் 1 கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு நல்லதொரு எதிர்காலத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அதில் 52 சதவிகிதம் பேர் பெண்கள்.
"வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் தரமான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பற்றிச் சொல்லுங்களேன்" என்று விகடனின் #DoubtOfcommonMan பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் வாசகர் செந்தில்குமார்.

தமிழ்நாட்டில் விவசாயம், இரும்புப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், நூற்பாலைகள், ரெடிமேட் துணி தயாரிப்பு, கம்பயூட்டர் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தோல் பொருள்கள் தயாரிப்பு என்று பல துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுமட்டுமன்றி, வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வோருக்கு பயிற்சிகள் தருவது, பாஸ்போர்ட் எடுத்து தருவது, விசாவோடு வேலையும் வாங்கித் தருவது, இன்ஷூரன்ஸ், விமான டிக்கெட் வரை எடுத்துக்கொடுத்து உதவுவதுவரை சேவையாற்றுவதற்கென்றே பல மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இருக்கின்றன. சுயதொழில் செய்வதற்கு பயிற்சியும் கடனும் வழங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பெரும்பாலானோர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை.
மத்திய அரசு
National Rural Livelihood Mission
இந்த நிறுவனம் உலக வங்கி உதவியுடன், கிராமப்புறங்களில் பயிற்சி கொடுத்து, கடன் தந்து, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. படிப்பைத் தடையாகக் கருதாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கம். தொடர்புக்கு: https://aajeevika.gov.in/

National Carrer Service
வேலை தேடுவோரையும் வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோர் தங்களைப் பற்றிய தகவல்களைக் கட்டணமின்றி www.ncs.gov.in இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். வேலை கொடுக்கும் நிறுவனங்களும் இதில் இடம்பெறும். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்கள் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று இந்தத் தளத்தில் பதிவுசெய்துகொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் இடங்கள், போட்டித் தேர்வுகள் பற்றிய தகவல்களையும் இந்த இணையதளத்தில் பெறமுடியும். இதில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளனர். 6,550 நிறுவனங்கள் 3,77,493 பேருக்கு வேலை தரத் தயாராக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48,797 அரசு வேலைகள் உள்ளன. வேலையில்லாதவர்கள் பதிவு செய்து பயன்பெறலாம். தொடர்புக்கு : www.ncs.gov.in
Micro Small and medium Enterprises Development institute
புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, சரியான தொழில் ஆலோசனைகளைத் தந்து, பயிற்சிகளையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம். டுல் ரூம் பயிற்சி நிறுவனம், மத்திய தோல் காலணிகள் பயிற்சி மையம் என இதற்கு ஏராளமான துணை நிறுவனங்கள் உள்ளன. பல பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி அதன்மூலமும் பயிற்சி வழங்குகிறார்கள். இவர்களிடம் இல்லாத பயிற்சிகளே இல்லை. வேலை வாய்ப்புக்கு மட்டுமல்லாமல், தொழில் தொடங்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. தொடர்புக்கு: www.nimsme.org

Board of apprenticeship (Southern region)
தேசிய வேலை பழகுநர் சட்டப்படி, படித்தவர்களுக்கு பெரிய தொழிலகங்கள் ஊக்கத்தொகை கொடுத்து வேலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பல லட்சம் பேருக்கு இதன் மூலம் வேலை பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு தேர்வு எழுதி, அரசுச் சான்று பெற்று வேறு வேலைகளில் சேர முடியும். தவிர, இந்த வாரியம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல்லாயிரம் பேர் அதன் மூலம் பயன் பெறுகின்றனர். தொடர்புக்கு: https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenu!registermenu.action
SKILL India
பல நிறுவனங்களைக் கொண்ட இந்த அமைப்பு, பல தனியார் பயிற்சி மையங்களையும் அங்கீகரித்து இலவசமாக பயிற்சியளித்து உதவித்தொகையும் அளிக்கிறது. பயிற்சி கொடுக்கும் நிறுவனமே வேலையையும் வாங்கித்தரும். இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சம் பேர் வேலை பெறுகின்றனர்; சுயதொழிலும் தொடங்குகின்றனர். தொடர்புக்கு: www.nsdcindia.org

Rural Self Employment Training Institute- RSETI
அரசு வங்கிகள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் சுயதொழில் பயிற்சி மையங்களை உருவாக்கியுள்ளன. பயிற்சி, புத்தகம், உணவு அனைத்தும் இலவசம். இலவச விடுதி வசதியும் உண்டு. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்றவர்களுக்கு உடன் வேலையும் கிடைத்துவிடும். தொழில் தொடங்கவும் ஆலோசனை வழங்கப்படும். கடனும் பெற்றுத் தருவார்கள். தொடர்புக்கு: http://nirdpr.org.in/rseti/
Rajiv Gandhi National Institute of Youth Development
இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு ஆலோசனை, வழங்கி வழிகாட்டுகிறது இந்த அமைப்பு. தொடர்புக்கு: www.rgniyd.gov.in
தமிழக அரசு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறையுடன் இணைந்து மெகா வேலை வாய்ப்பு முகாம்களை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறது. பல லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். 'ஸ்டடி சென்டர்' எனும் மையங்களை உருவாக்கி போட்டித் தேர்வுகளுக்குச் செல்வோருக்கு உதவுகிறது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மையம் (Student Advisory Bureau), அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர் கல்வி மையம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அண்ணா நூற்றாண்டு சிவில் சர்வீஸ் கோச்சிங் அகாடமி, மதுரை மீனாட்சி கல்லூரியிலுள்ள அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கோச்சிங் சென்டர், சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள பெண்களுக்கான சிவில் சர்வீஸ் பயிற்சி மையம், பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் தமிழ்நாடு அரசு உதவியுடன் இயங்கும் பின்ஸ்டியா, எப்.என்.எப் சென்டர் (கிண்டி) எனப் பலநூறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு உதவியுடன், தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தந்துகொண்டிருக்கின்றன.
Entrepreneurship Development And Innovation Institute
சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிறைய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வேலை பெறவும், தொழில் தொடங்கவும் உதவுகிறார்கள். தொடர்புக்கு: www.editn.in
Tamilnadu Skill Development Corporation

சென்னை கிண்டியில் இந்த வாரியம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், தமிழ்நாடு முழுவதுமுள்ள தரமான திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அங்கீகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகளை நடத்தி, சான்றிதழ் வழங்குவதோடு வேலையும் வாங்கித் தருகிறது. வேலை கொடுப்போரை சந்திக்கவும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். தொடர்புக்கு: https://www.tnskill.tn.gov.in/
Commissionerate of Industries and Commerce
இத்துறையின் கீழ், சென்னை கிண்டியில் பாலிடெக்னிக் இயங்குகிறது. விருத்தாச்சலத்தில் கண்ணாடி பீங்கான் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி, கோவையில் பலவகை தொழில் பயிற்சிகள், கள்ளக்குறிச்சியில் மரவேலை சிற்பப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெறுபவர்களுக்கு உடனுக்குடன் வேலையும் கிடைக்கிறது. தொடர்புக்கு : www.indcom.tn.gov.in
Tamil Nadu Khadi And Village Industries Board

சென்னை குறளகத்தில் இயங்குகிற, தமிழ்நாடு காதி கிராமத் தொழில் வாரியம், கிராமப்புறங்களில் பல துறைகளில் பல பயிற்சிகளை வழங்கிவருகிறது. இதன் மூலம் பலர் வேலை பெற்றுள்ளனர். பலர் தொழில் தொடங்கியுள்ளனர். தொடர்புக்கு: www.tn.gov.in/hhtk/khadi/khadi-home.htm
Poompuhar

காதிகிராம நிறுவனமும் பூம்புகார் நிறுவனமும் இணைந்து கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி,கடன் மற்றும் மானியம் தருகின்றன. தயாரித்த பொருள்களை விற்றும் தருகிறார்கள். தொடர்புக்கு : http://tnpoompuhar.org
வெளிநாட்டு வேலை
Oveseas workers resource centre)
டெல்லி அருகேயுள்ள குர்கானில் உள்ளது இந்த நிறுவனம். வெளிநாட்டு வேலைபெற, இன்ஷூரன்ஸ் பெற, விசாவின் உண்மைத் தன்மையை விசாரிக்க, சான்றிதழ் அட்ஜஸ்ட் செய்ய எனப் பல பணிகளைச் செய்கிறது. இந்த நிறுவனத்தின் சென்னை கிளை எழிலகத்தில் உள்ளது. தொடர்புக்கு: www.owrc.in/contact_us.html

Overseas Manpower Corporation Limited

சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருதல், சான்றிதழ் அட்டஸ்ட்டேஷன், இன்ஷூரன்ஸ், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் தொடர்புகொண்டு உதவி கோருதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது. தொடர்புக்கு: www.omcmanpower.com