Published:Updated:

2K kids: கற்றது தமிழ்... எத்தனை எத்தனை வாய்ப்புகள்!

தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்

ச.நாகலட்சுமி

முன்பு பழைமைக்குப் பழைமையாய் பின்பு புதுமைக்கும் புதுமையாய் விளங்குகின்ற மொழி நமது தமிழ் மொழி. ஆனால், ‘தமிழ் படிச்சா பெருசா என்ன வாய்ப்பிருக்கப்போகுது...’ என்ற தவறான எண்ணம் இங்குள்ளது. தமிழ் பட்டப்படிப்புத் தரவல்ல, பல தரப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறார் சென்னை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் தமிழ் இலக்கியத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜ.சிவகுமார்.

ஜ.சிவகுமார்
ஜ.சிவகுமார்

தமிழ்ப் பட்டப்படிப்பின் தனித்தன்மைகள் என்னென்ன?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வழக்கிலும் மக்கள் வழக்கிலும் இருக்கக் கூடியவை தமிழும் சீன மொழிகள்தாம். உலக அளவில் இத்தகைய சிறப்புடைய தமிழ் மொழியைத் தாய்மொழியாக நாம் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழியின், தமிழர் வரலாற்றின் பல்வேறு பரிணாமங் களை அறியவும், பல்வேறு புலங்களோடு தமிழ் கொண்டுள்ள உறவுகளை அறியவும், இன்றைய தலைமுறைக்கேற்ப தமிழால் நாமும், நம்மால் தமிழும் வளர்ச்சி பெறவும் தமிழ்ப் பட்டப்படிப்புகள் பயன்படும். ஆனால், தனக்குத் தெரியாத, விருப்பம் இல்லாத, வேலைவாய்ப்பு அருகிக் கிடக்கும் பிற துறைகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தமிழ்ப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தயக்கம் காட்டுவது வருத்தம்.

பி.லிட் (B.Lit‌) தமிழுக்கும் பி.ஏ தமிழுக்கும் என்ன வேறுபாடு..?

பி.ஏ தமிழ்ப் பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ், ஆங்கிலம், மென்திறன் ஆகிய பாடங்கள் நான்கு பருவங்களுக்கு இடம்பெறும். பி.லிட் படிப்பில் முழுக்க முழுக்கச் சிறப்புத் தமிழ்ப் பாடங்கள் மட்டுமே இடம்பெறும். மாணவர்கள் தங்களின் எதிர்காலக் குறிக்கோளுக்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

அரசுப் பணி வாய்ப்புகள்..?

இளங்கலை தமிழ் இலக்கியம் படித்த பிறகு, பி.எட் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் TET (Teacher Eligibility Test) தேர்ச்சி பெறுபவர்கள் பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் செல்லலாம்.

முதுநிலை தமிழ் இலக்கியம் படித்தவர்கள் SLET (State Level Eligibility Test), NET (National Eligibility Test) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் பேராசிரியர் பணிக்குச் செல்லலாம். பள்ளி, கல்லூரி ஆசிரியப் பணிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்குத்தான் பிற துறைப் படிப்புகளைவிட வேலைவாய்ப்புகள் அதிகம். மேலும், இன்றைய தமிழக அரசு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கும் (TNPSC Group Exams) தமிழ்த்தாளைக் கட்டாயமாக்கியுள்ளது. பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவிகிதம் சிறப்பு இட ஒதுக்கீடும் உள்ளது. இது, தமிழ்ப் பட்டப்படிப்பு படிப்பவர்கள் அரசுப்பணி பெறுவதை எளிதாக்கி யுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி (IAS) முதன்மைத் தேர்வில் கட்டாய இந்திய மொழித்தாள் வரிசையில் தமிழ் மொழித்தாள் இடம்பெற்றுள்ளது. இதற்குத் தமிழ்ப் பட்டப்படிப்பு உதவும். ஒடிசாவில் திறமையாகப் பணி செய்த பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தமிழில் முதுநிலைப் பட்டம் படித்து இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2K kids: கற்றது தமிழ்... எத்தனை எத்தனை வாய்ப்புகள்!

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்..?

ஏன் இல்லை... இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே அவர்களுக்கான தமிழ் அச்சு ஊடகம், கேட்பு ஊடகம், காட்சி ஊடகம், வலையொளி ஊடகம், மின் ஊடகம் போன்றவையும் பல்கிப் பெருகி யுள்ளன. இத்தகைய ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், விவாத அரங்க ஒருங்கிணைப்பாளர், பேச்சாளர், செய்தியின் உள்ளடக்கத்தையும் வாக்கிய அமைப்பையும் செப்பனிடுபவர் என இன்னும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பணியாற்றத் தமிழ் மொழியைத் திறம்படக் கையாளத் தெரிந்திருத்தல் அவசியம். இதற்குத் தமிழ்ப் படிப்பு உதவும். ஆனால், வெறும் பட்டம் மட்டும் போதாது. அந்தத்துறை சார்ந்த தேடலும் அதன்வழிப் பெறும் திறனும் அவசியம். அதேபோல் காட்சி ஊடகவியல் (Vis.com) துறையை எடுத்தால் மட்டுமே ஊடகத் துறையில் சாதிக்க முடியும் என்பது இல்லை. தமிழ்த்துறை மாணவர்களும் ஊடகத்துறையில் சாதிக்க முடியும். அதற்கு இயக்குநர்கள் ராம், பாலா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா.முத்துக்குமார் எனப் பெரும் பட்டியலே போடலாம்.

தமிழ்க் கணினியியம் - கலைச்சொல் உருவாக்கம், பிழைத்திருத்த மென்பொருள் உருவாக்கம், செயலிகளில் தமிழ்ப் பயன்பாடு போன்ற பல தொழில்நுட்பப் பணி வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்கள் தட்டச்சகம் (DTP Centre) வைத்துத் தொழில்முனைவராவதோடு பிறருக்கும் வேலைவாய்ப்பை வழங்கலாம். அமேசான், கூகுள், ஸொமேட்டோ போன்ற நிறு வனங்களும் பல சேவை நிறுவனங்களும் வட்டார மொழிகளில் தங்களுடைய பயன்பாட்டைத் தருவதற் காகத் தமிழைப் பிழையின்றி பேச, எழுதத் தெரிந்தவர்களைப் பணியில் அமர்த்துகின்றன.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் இருக்கிறதா..?

தமிழர்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா, பிஜி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன; தொடர்ச்சி யாகத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தமிழாசிரியர்கள் செல்கிறார்கள். உலகப் பல் கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலும், மொழிப்பெயர்ப்புத்துறையிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மேல்படிப்பு அவசியமா?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கும் பணிக்கும் ஏற்ப மேற்படிப்பு அவசியமா, இல்லையா என்பது அமையும். பள்ளி ஆசிரியராக பி.ஏ உடன் B.Ed பட்டம், கல்லூரிப் பேராசிரியராக எம்.ஏ உடன் SLET (State Level Eligibility Test), NET (National Eligibility Test) தகுதித் தேர்வுகள், அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல எம்.ஃபில், பிஹெச்.டி எனத் தேவைப்படும்.

யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்கு இளங்கலைப் பட்டம் மட்டும் பெற்றால் போதும். படைப்பாளராகவோ, ஊடகவியலாளராகவோ ஆக வேண்டும் என்றால் இளங்கலைப் பட்டத்துடன் அத்துறையில் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம். மேற்படிப்பு படித்தால் நம் அறிவை விசால மாக்க உதவும்.

கணினி இன்று அனைத்துத்துறைகளிலும் அவசியம் என்பதனால் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலம், இந்தி போன்று ஏதேனும் ஒரு பிற மொழியை அறிந்துகொள்வது நலம்.

ஊதியம், வேலைவாய்ப்பு தவிர மனதுக்கு அறிவூட்டல், அறம் ஊட்டல், பணத்தை முதன்மைப் படுத்தாத நிறைவான வாழ்வு வாழும் பக்குவம் ஆகியவற்றையும் தமிழ்ப் படிப்பு தரும்.’’