Published:Updated:

தட்டிப்பறிக்கப்பட்ட தபால் துறை வேலைவாய்ப்பு...

மத்திய அரசுப் பணி
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசுப் பணி

தேர்வான 946 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 46 பேர் மட்டுமே!

தட்டிப்பறிக்கப்பட்ட தபால் துறை வேலைவாய்ப்பு...

தேர்வான 946 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 46 பேர் மட்டுமே!

Published:Updated:
மத்திய அரசுப் பணி
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசுப் பணி

தமிழகத்தில் தபால்துறை, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழர்களைவிட வட மாநிலத்தினரே அதிக அளவில் தேர்வுசெய்யப்படும் அநீதி தொடர்கிறது. சமீபத்தில் தபால்துறை பணிகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது!

தபால்துறையில் தமிழகத்தில் பணியாற்ற தபால் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 946 பேர்கொண்ட தேர்வுப் பட்டியல், பிப்ரவரி 10-ம் தேதி வெளியிடப்பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்று, வெளியிடப்பட்ட தேர்வுப் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்களே நிறைந்துள்ளன. தமிழே தெரியாத நிலையில், இவர்கள் எப்படித் தமிழில் எழுதப்பட்டிருக்கும் முகவரிகளை வாசித்து, தபால்களைப் பிரிப்பார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க... மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறது என்பது தீவிரமான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.

தட்டிப்பறிக்கப்பட்ட தபால் துறை வேலைவாய்ப்பு...

இப்படி நடப்பது இது முதன்முறை அல்ல. 2016-ல் நடைபெற்ற நேரடி தபால்காரர் பணிக்கான தேர்வில் நடந்த மோசடி அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களை ஹரியானாவைச் சேர்ந்தவர்களே பிடித்தனர். தமிழ்த் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகபட்சமாக 19 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் 24, 22 என மதிப்பெண்களைப் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக மாணவர்கள், ஹரியானா மாணவர்களின் செல்போன் எண்களைக் கண்டறிந்து, அவர்களிடம் பேசியபோது, அவர்களுக்குத் தமிழே தெரியவில்லை; மோசடி செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது அம்பலமானது. அன்றைய தி.மு.க எம்.பி-க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியதைத் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டு, தேர்வு ரத்துசெய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம். “தமிழகத்தில் தபால்துறையின் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை 2014-க்கு முன்புவரை தபால்துறையே செய்துவந்தது. அதுவரை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களே பணியில் சேர்ந்தனர். ஆனால், தேர்வு செய்யும் பணி 2014-லிருந்து மத்திய பணியாளர் தேர்வாணையத் திடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம். ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் கேள்வித்தாள் இருக்கும். இது போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று தெரிந்துதான், தேர்வுப் பணியை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். நாம் அச்சப்பட்டதுபோல இன்றைக்குத் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப்பறிக்கப்படும் சூழல் தொடர்கிறது. தமிழகத்தில் அனைவருமே ஆங்கிலத்தில் முகவரியை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழில் எழுதப்பட்ட முகவரிகளைப் படித்து, தபால்களைப் பிரிக்க வேண்டும். தமிழ் தெரியாத வட மாநிலத்தவர் எப்படி இந்த வேலையைச் செய்வார்கள்? இதனால், மக்கள்தான் பாதிப்படைவார்கள்” என்றார் கவலையுடன்!

ரயில்வேதுறையிலும் இதே அநீதிதான் நடந்தது... 2020-ல், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தேர்வுசெய்யப்பட்ட 581 தொழில்நுட்பப் பணியாளர்களில் 12 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. 2012-ல், சென்னை மத்திய மண்டல ரயில்வேயில் நிரப்பப்பட்ட 884 காலிப் பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர். 2013-ல், ரயில்வே குரூப் 4 பதவிகளுக்கு நிரப்பப்பட்ட 2,361 காலிப் பணியிடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 74 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர்.

சீனிவாசன் - ராமமூர்த்தி
சீனிவாசன் - ராமமூர்த்தி

இப்படி மத்திய அரசின் துறைகளில் மட்டுமல்லாமல், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வெளி மாநிலத்தவர் நியமிக்கப்பட்ட சூழலையும் தமிழகம் கண்டது. 2019-ல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவிப் பொறியாளர்கள் பதவிகளுக்குத் தேர்வு நடைபெற்றதில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 38 பேர் தேர்வாகினர். தமிழகத்திலேயே ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கும் சூழலில், அவர்களின் வாய்ப்பு வெளி மாநிலத்தவருக்குப் போனது. இது போன்ற பிரச்னைகளில் தீர்வு காண்பதற்காகத்தான் தற்போது தமிழக அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ்த் தாளில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்கிற விதிமுறையைத் தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம். “தபால்துறை, ரயில்வே ஆகியவை மத்திய அரசுத் துறைகள் என்பதால், நாடு முழுவதுமிருந்து விண்ணப்பங்கள் வருவது இயல்பானது. அதேநேரம், தபால்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மாநில மொழி தெரியவில்லையென்றால், பிரச்னைகள் வரும் என்பதும் உண்மைதான். இந்தப் பணியைச் செய்வதற்கு தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். எனவே, இது போன்ற பதவிகளுக்கு அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத்தான் தேர்வுசெய்ய வேண்டும் என்கிற கருத்தொற்றுமையை அனைத்துக் கட்சிகளும் ஏற்படுத்த வேண்டும். மாநில எம்.பி-க்களும் இது பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என்றார்.

மத்திய அரசுத் துறைகளுக்கான பணியாளர் தேர்வு, மையப்படுத்தப்பட்ட தேர்வாக இல்லாமல் மாநில அளவில் நடத்தப்படுகிற தேர்வாகவும், தமிழில் எழுதக்கூடிய வகையிலும் இருப்பதே இதற்கான தீர்வு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism