Published:Updated:

‘‘தேர்வெழுதிய மூவாயிரம் பேரில் ஐந்து பேர்தான் பாஸ்!’’

ரயில்வே
பிரீமியம் ஸ்டோரி
News
ரயில்வே

ரயில்வே தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனரா?

தென்னக ரயில்வேயில் சரக்கு ரயில் கார்டு பதவிக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் 5,000 பேர் தேர்வு எழுதி, அவர்களில் 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் இந்தத் தேர்வை எழுதிய நிலையில், ஐந்து பேர் மட்டும் தேர்வாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலத்தவர் திணிக்கப்படுகின்றனர். இந்தத் திணிப்பு ரயில்வேயில் அதிக அளவு நடைபெறுகிறது. ரயில்வே கார்டு பணித் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது எனப் பலரும் கொந்தளிக்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘இந்தத் தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாகவே ரயில்வே தேர்வுகள் வட இந்தியர்களுக்குச் சாதகமாகவே நடத்தப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள புகாரைப் புறந்தள்ளாமல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். `மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறைகளிலுள்ள இடைநிலை, கடைநிலைப் பணியிடங்கள் அனைத்தையும் உள்ளூர் மக்களைக்கொண்டே நிரப்ப வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். சரக்கு வண்டி பாதுகாவலருக்கான துறைசார்ந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அந்தத் தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த வேண்டும்’’ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

‘‘தேர்வெழுதிய மூவாயிரம் பேரில் 
ஐந்து பேர்தான் பாஸ்!’’

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தேர்வை மறு ஆய்வு செய்து சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும்’’ என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

``சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் தொழிற்சங்கங்களால் இதை வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை’’ என்றவாறு நம்மிடம் பேசிய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், ‘‘தென்னக ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களில் குரூப்-டி பணியாளர்களுக்கான தேர்வையும், பதவி உயர்வுக்கான தேர்வையும் ரயில்வே தேர்வாணையம் நடத்தும்.

கடந்த வருடம் திருச்சி கோட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட 1,765 தொழிற்பழகுநர் பணியிடங்களுக்கு 1,600 வட மாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த வருடம் சரக்கு ரயில் கார்டு பணிக்கு நடத்தப்பட்ட தேர்விலும் வட மாநிலத்தவர்கள் மட்டும்தான் அதிக அளவில் தேர்வாகியுள்ளனர். இது தமிழர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது. தேர்வெழுதிய தமிழகத்தைச் சேர்ந்த குரூப்-டி தொழிலாளர்கள், நீதிமன்றத்துக்குச் செல்லலாமா என ஆலோசித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகளில் அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இதை நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏமாற்றுகின்றனர். தமிழகத் தொழிலாளர்கள் அதிகமுள்ள தென்னக ரயில்வேயில் இப்படித் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தென்னக ரயில்வேயிலேயே தமிழர்களுக்கு உரிமை இல்லையென்றால், வேறு எந்த ரயில்வேயில் உரிமை பெற முடியும்? தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் ஒருசேர வலுவாகக் குரல் கொடுத்தால்தான் இந்த அநீதியை நிறுத்த முடியும்’’ என்றார் கொந்தளிப்புடன்.

‘‘தேர்வெழுதிய மூவாயிரம் பேரில் 
ஐந்து பேர்தான் பாஸ்!’’

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘தென்னக ரயில்வேயில் சரக்கு வண்டிப் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வில் ரயிவேயில் பணியாற்றும் குரூப்-டி ஊழியர்கள் 5,000 பேர் கலந்துகொண்ட நிலையில், 96 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 91 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இதில் தேர்வாகவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில், ஐந்து பேர் மட்டுமே தேர்வாகியிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தென்னக ரயிவேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாகவே இது உள்ளது. அதனால், இந்தத் தேர்வு முடிவு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.

சு.வெங்கடேசன் - மஹாலட்சுமி
சு.வெங்கடேசன் - மஹாலட்சுமி

‘மத்திய அரசுப் பணிகளில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்களா?’ என்று பா.ஜ.க-வின் மாநில மகளிரணித் தலைவி மஹாலட்சுமியிடம் கேட்டோம். ‘‘பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துத் துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் ஒழிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும், மத்திய அரசுத் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இப்போது நடந்த ரயில்வே தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டிருப்பது உண்மையாக இருந்தால், அது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். அந்தந்த மாநில மக்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தில் புகார் செய்து நியாயம் பெறலாம். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்தை எங்கள் கட்சித் தலைமைக்குக் கொண்டுசெல்வோம்’’ என்றார்.