Published:Updated:

உதவிப் பேராசிரியர், இளம் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கு தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தேர்வு (UGC-National Eligibility Test) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

National Eligibility Test
National Eligibility Test

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும், தேசியச் சோதனை நிறுவனம் (National Testing Agency) வழியாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் (Junior Research Fellowship (JRF) and Assistant Professor) பணிகளில் சேர்க்கை பெறுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தேர்வு (UGC-National Eligibility Test) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

National Eligibility Test
National Eligibility Test

பாடப்பிரிவுகள்

இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் குறித்த பாடங்கள், கலை மற்றும் பண்பாட்டுப் பாடங்கள், நூலகத் தகவலியல், சமயம், உடற்கல்வியியல், இதழியல், புவியியல், சமூக மருத்துவம், தடயவியல், மின்னணு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், மனித உரிமை மற்றும் செயல்பாடுகள், நாடகம் மற்றும் அரங்கம், காட்சிக்கலை, நாட்டுப்புற இலக்கியம், சட்டம் என்று மொத்தம் 81 வகையான பாடங்களுக்குத் தேசியத் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.  

கல்வித்தகுதி

இத்தேர்வுக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் பொது மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமலும்,

ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் (PWD) மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.

சில பாடப்பிரிவுகளுக்குத் தொடர்புடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தவிர்த்த இணையான வேறு சில பாடப்பிரிவுகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களைத் தேசியச் சோதனை நிறுவனம் தகவல் குறிப்பேட்டில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

National Eligibility Test
National Eligibility Test

மேற்காணும் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படித்துவரும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அது தற்காலிகமானதாகவே கருதப்படும். அவர்களுடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின்பு, மேற்காணும் தகுதி மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அது தகுதியுடையதாகக் கொள்ளப்படும்.

வயது வரம்பு

இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் (Junior Research Fellowship (JRF) and Assistant Professor) தகுதிக்கு (JRF-NET) விண்ணப்பிப்பவர்கள் 1-12-2019 அன்று 30 வயதுக்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

உதவிப் பேராசிரியர் தகுதிக்கு (Eligibility for Lectureship) விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பிற சலுகை குறித்த விவரங்களைத் தகவல் குறிப்பேட்டைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.

National Eligibility Test
National Eligibility Test

விண்ணப்பப் படிவம் :

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.nta.ac.in/ அல்லது https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx எனும் இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ 1000/-, ஈடபிள்யூஎஸ், ஓபிசி பிரிவினர் ரூ 500/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தினர் ரூ 250/ என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 9-10-2019.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 10-10-2019.

அதன் பின்னர், விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதும் செய்துகொள்ள வேண்டியிருப்பின் 18-10-2019 முதல் 25-10-2019 வரை இணையதளத்தின் வழியாகத் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

தேசியத் தகுதித் தேர்வு :

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி / நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் ஆகிய 15 மையங்கள் உட்பட இந்தியா முழுவதும் 224 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டினை மேற்காணும் இணையதளத்திலிருந்து 9-11-2019 முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

eligibility test
eligibility test

தேர்வுகள்

தேசியத் தகுதித் தேர்வு 2-12-2019 மற்றும் 6-12-2019 ஆகிய இரு நாள்களில் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை என்று இரு வேளைகளில் கணினி வழித் தேர்வாக நடத்தப்பெறும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் (மூன்று மணி நேரத்திற்குள்) தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரு தாள்களையும் ஒரே வேளையில் எழுதிட வேண்டும். அதன் பிறகு, இத்தேர்வு முடிவுகள் 31-12-2019 அன்று மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும் .

கூடுதல் தகவல்கள் :

இத்தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள், மேற்காணும் இணைய முகவரியில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து படித்து தெரிந்துகொள்ளலாம் அல்லது வேலை நாள்களில் காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை தேசியத் தகுதித் தேர்வுப் பிரிவின் உதவி மேசைக்கான 0120-6895200 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.        

ஒன்று இரண்டு இல்லை... இந்த தேர்வு எழுத பல காரணம் உண்டு #GATE2020