Published:Updated:

வரலாறு காணாத வேலையிழப்பில் சிக்கித் தவிக்கும் இந்தியா!

வேலையிழப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வேலையிழப்பு

ஐ.டி துறையில் வேலையிழப்பு, மூத்த பணியாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.

படித்த இளைஞர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது என்பதே சவாலான விஷயமாக இருக்கும் நிலையில், வரலாறு காணாத வேலையிழப்பும் குடும்பஸ்தர்களை அச்சம்கொள்ளவைக்கிறது.

வேலையிழப்பில் முதல் இடத்தில் இருப்பது ஆட்டோமொபைல் துறைதான். 2019-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையில் மட்டும் பல லட்சம் பேர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, 2019 மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் வரை வேலை இழந்துள்ளனர்.

முன்னணி நிறுவனமான நிஸான், 1,700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம், 3,000 தற்காலிகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மஹேந்திரா&மஹேந்திரா நிறுவனம், 1,500 தற்காலிகப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோன்று பல நிறுவனங்களும் கணிசமான அளவில் பணியாளர்களை நீக்கியுள்ளன.

ஷான் கருப்பசாமி - வ.நாகப்பன் - ஜெயரஞ்சன்
ஷான் கருப்பசாமி - வ.நாகப்பன் - ஜெயரஞ்சன்

இந்தத் துறையில் தமிழ்நாட்டில் மட்டுமே 5000-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர். பொருளாதார மந்தநிலை காரணமாக நுகர்வு ஆர்வம் மக்களிடையே குறைந்ததால் வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம். புகை மாசுக் கட்டுப்பாடுக்காக மார்ச் 2020-க்குள் மக்கள் அனைவரும் பி.எஸ்-4 ரக வாகனங்களிலிருந்து பி.எஸ்-6 ரக வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதால், வாகனங்களை வாங்குவதைத் தள்ளிப்போடுவதும் இன்னொரு காரணம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதற்கேற்ற கட்டமைப்புக்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் மாறவேண்டியுள்ளதும் மற்றொரு காரணம். ஓலா, ஊபர் போன்ற வாடகை கார்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருகிவருவதும் ஒரு காரணம் என்று நிதி அமைச்சரே குறிப்பிட்டிருந்தார். இப்படிப் பல்வேறு காரணங்களால் வாகன விற்பனை குறைந்த காரணத்தால், வாகன விற்பனை முகவர்கள் பலரும் தங்களது ஷோரூம்களை மூடினர். அதன் காரணமாகவும் பலரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டது.

இதற்கு அடுத்ததாக, இளைஞர்கள் பணியாற்றும் ஐ.டி துறையிலும் பணிநீக்க நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இந்தத் துறையில், நடுத்தர மற்றும் மேல்மட்ட பதவிகளில் இருப்பவர்கள்தான் பெரும்பான்மையாகப் பணியிழப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த மட்டத்தில் இருக்கும் பணியாளர்கள் அதிக சம்பளம் பெறுபவர்களாகவும், அதற்கேற்ற திறனை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கும்போது, பணியிழப்புக்கு ஆளாகின் றனர். கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான பணியாளர் களை வேலைநீக்கம் செய்துள்ளன.

ஐ.டி துறையில் தொடரும் பணியிழப்புகள் குறித்து எழுத்தாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஷான் கருப்பசாமியிடம் கேட்டோம்.

வேலையிழப்பு
வேலையிழப்பு

‘‘ஐ.டி துறையில் வேலையிழப்பு, மூத்த பணியாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. இவர்களால் புது தொழில்நுட்பத்துக்கேற்ப செயல்பட முடியாதபட்சத்தில் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் இளைஞர்களையும் குறைந்த பணி அனுபவம் உள்ளவர்களையும் ஐ.டி நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொண்டுதான் இருக்கின்றன. தொழில்நுட்ப மாற்றத்துக்கேற்ப பணியாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளாதபட்சத்தில் வேலையிழப்பிலிருந்து தப்ப இயலாது’’ என்றார்.

தொலைத்தொடர்புத் துறையில் 2,40,000 ஊழியர்களுக்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களில் பணியாற்றும் 90,000 ஊழியர்கள் கட்டாய வி.ஆர்.எஸ் மூலம் பணி ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். ஜியோவின் குறுகியகால பிரமாண்ட வளர்ச்சி காரணமாக, மற்ற நிறுவனங்களின் வளர்ச்சி பெரும்பாதிப்பைச் சந்தித்துள்ளது. சில நிறுவனங்கள் மூடப்பட்டன; சில நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தன. இத்தகைய மாற்றங்களால் பல பணியாளர்கள் வேலை யிழப்பைச் சந்தித்தனர். அதே சூழல்தான் 2019-லும் தொடர்ந்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், லைசென்ஸ் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் என மொத்தம் 1.33 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தன. இந்த நிலுவைத்தொகையை வசூலிப்பதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பெரிய நிதியிழப்புக்கு உள்ளாகியுள் ளன. இதன் காரணமாகவும் வேலையிழப்பு ஏற்படுகிறது.

தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையில், ஜவுளி உற்பத்தித் துறை இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய துறையாக உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே இந்தத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டபோது, மேலும் நலிவடைந்தது. நூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் மூடப்பட்டதால் பருத்தி நூல் ஏற்றுமதி பெரிதும் சரிவடைந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் குறு, சிறு தொழில் நிறுவனங்களே பெரிதும் பாதிப்புக் குள்ளாகின. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அமைப்புசாராமல் செயல்படுபவை. பெரும்பாலான குறு, சிறு தொழில் நிறுவனங்களில் தினசரி தொழிலாளர்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஜி.எஸ்.டி கொண்டுவந்தபோது நாடு முழுவதும் பெரும்பாலான நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூடப்பட்டன. அதன் காரணமாக, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை யிழப்பைச் சந்தித்தனர். தற்போது இ-வே பில் உள்ளிட்ட அதிரடிகளால் மேலும் சிரமத்துக் குள்ளாகிவருகிறார்கள். புதிதாக இந்தத் துறைக்குள் வந்து தொழில் தொடங்குவதும் சிரமமாக உள்ளது.

பொறியியல் துறை, கட்டுமானத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பொருளா தார மந்தநிலையின் தாக்கம் உள்ளது. இதன் காரணமாக, பணியாளர்களுக்கான வேலையிழப்பும் அதிக அளவில் உள்ளது.

வேலையிழப்புகளுக்கு என்னென்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ‘‘இந்தியாவில் வேலையிழப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. முதலாவதாக, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக் கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளாத பணியாளர்கள் வேலையை இழக்கின்றனர். அடுத்து, தொழில் துறையில் ஏற்பட்ட ஆட்டோமேஷன் காரணமாக சில பணியாளர்களுக்கு வேலை இல்லா மல் போய்விட்டது. இதற்கடுத்து, பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையிழப்பு ஏற்படுகிறது.

இப்படி வேலையிழந்தவர்கள் அடுத்த வேலையைத் தேடுவது என்பது, கடினமான ஒன்று தான். இந்தச் சமயத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திலோ அல்லது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்திலோ பயிற்சி பெற்று, வேறு துறை சார்ந்த வேலைகளுக்குச் செல்வதே வேலையிழப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி’’ என்றார்.

வேலையிழப்பு இன்னும் தொடருமா, இதனால் பாதிக்கப்பட்டோர் மீண்டுவருவார்களா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் பேசினோம்.

‘‘பொருளாதார தேக்கநிலை காரணமாக பல்வேறு தொழில்களில் வரலாறு காணாத வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய தொழில்களை மேற்கொள்ள யாரும் முன்வரவில்லை. பொருளாதார மந்தநிலை சரியாகாதவரை இந்த வேலையிழப்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்’’ என்றார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், இதுவரை 53,686 நபர்களுக்கு பயிற்சியளித்துப் பணியில் அமர்த்தியுள்ளதாக தங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம், தங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் 54.60 சதவிகிதப் பணியாட்களுக்கு வேலை பெற்றுத் தந்துள்ளதாக தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலையை சீர்செய்ய அரசு துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மறுபடியும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.