Published:Updated:

10-ம் வகுப்பு படித்தவர்கள் மாலுமியாகலாம் - உடனே அப்ளை பண்ணுங்க!

ஆங்கில மொழியைப் பயிற்சி மொழியாகக்கொண்ட இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன.

மாலுமிகள்
மாலுமிகள்

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டுவருவது, `தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம்’ (Tamilnadu Maritime Academy). இந்த நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆறு மாதகால அளவிலான பொது மாலுமிப் பயிற்சி (Pre-Sea Course for General Purpose Rating) அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருக்கிறது.

கப்பல்
கப்பல்

யாரெல்லாம் பயிற்சி பெறலாம்?

மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்துக்கான பொது இயக்குநரகம் (Directorate General of Shipping) அங்கீகரித்திருக்கும் ஆறு மாதகால (25 வாரங்கள்) அளவிலான இந்த இருப்பிடப் பயிற்சிக்கு (Residential Course) திருமணமாகாத ஆண்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கல்வித் தகுதி

ஆங்கில வழியில் அளிக்கப்படும் இந்தப் பயிற்சிக்குக் கீழ்க் கண்ட கல்வித்தகுதிகள் தேவைப்படும்.

1. பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன் மொத்தம் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும். அல்லது,

2. பன்னிரண்டாம் வகுப்பில் (+2) ஏதாவதொரு பிரிவில் மொத்தம் 40% மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது,

மாலுமி பயிற்சி
மாலுமி பயிற்சி

3. தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டு வருடகால அளவிலான Fitter / Machinist / Mechanic / Welder / Turner பிரிவுகளில் ஏதாவதொரு பயிற்சியை முடித்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சிக்கான இறுதியாண்டுத் தேர்வில் மொத்தம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தப் பயிற்சியில் சேர்பவர்களுக்கு 2-1-2020 அன்று 17½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், பட்டம் (Degree) அல்லது பட்டயப்படிப்பு (Diploma) முடித்தவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. வயதை உறுதிப்படுத்தப் பிறப்புப் பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

மாலுமி பயிற்சி
மாலுமி பயிற்சி

கடவுச்சீட்டு

இந்தப் பயிற்சியின் நிறைவில் தேர்ச்சிக்குப் பின்னர் தரப்படும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழைப் (Continuous Discharge Certificate - CDC) பெறுவதற்குக் கடவுச்சீட்டு அவசியம். எனவே, விண்ணப்பதாரர் செல்லுபடியாகக்கூடிய கடவுச்சீட்டை (Valid Passport) வைத்திருக்க வேண்டும். அதன் நகலும் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் கடவுச்சீட்டு நகலையும் இணைக்க வேண்டும்.

மருத்துவத் தகுதி

பயிற்சிக்குத் தேர்வுசெய்யப்படுபவர்கள், `வணிகக் கப்பல் சட்டம் - 2000’ குறிப்பிட்டிருக்கும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது. நிறப் பார்வைக் குறைபாடுடையவர்களாக இருக்கக் கூடாது. கண்களில் எந்தக் குறைபாடுமில்லாமல் இருக்க வேண்டும்.

மாலுமிகள்
மாலுமிகள்

விண்ணப்பம்

www.tn.gov.in/tnma/ எனும் இணையதளத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, அதன் பின்பகுதியிலிருக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக `Tamil Nadu Maritime Academy’ எனும் பெயரில் தூத்துக்குடியில் மாற்றிக்கொள்ளக்கூடியதாக (Payable at Thoothukudi) ரூ.750/-க்கான வரவோலையை (Demand Draft) இணைத்து, உறையின் மேல் `Application for admission to GPR Course to be commenced from 02.01.2020’ என்று குறிப்பிட்டு, `Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi - 628001, Tamil Nadu’ எனும் முகவரிக்கு 8-11-2019ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

மாணவர் தேர்வு

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றைக்கொண்டு 40 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். தூத்துக்குடியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்குத் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனியாக அழைப்புகள் அனுப்பிவைக்கப்படும். பின்னர், மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தகுதியுடையவர்கள் மட்டும் பயிற்சிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 2-1-2020 முதல் பயிற்சிகள் தொடங்கும்.

மாலுமி பயிற்சி
மாலுமி பயிற்சி
ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏன் இவ்வளவு பேர் ஃபெயிலானார்கள்? #Education

பயிற்சிக் கட்டணம்

ஆங்கில மொழியைப் பயிற்சி மொழியாகக்கொண்ட இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் இருக்கின்றன. பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், சேர்க்கையின் போது பயிற்சிக் கட்டணமாக ரூ.1,50,000/- ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.

பயிற்சியின் சிறப்புகள்

இந்தப் பயிற்சிக்குத் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்குத் தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் (Poompuhar Shipping Corporation Marine Workshop) தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மும்பையிலுள்ள கப்பல் வணிகத்துக்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General of Shipping) கீழ் இயங்கும் கடற்படைகளுக்கான தேர்வு வாரியம் (Board of Examinations for Seafarers) நடத்தும், அகில இந்திய பொது நோக்க மதிப்பீட்டுப் பயிற்சிக்கான வெளியேற்றப் பயிற்சித் (All India Exit Examination for General Purpose Rating Course) தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைப் பயிற்சி நிறுவனமே செய்து தரும்.

மாலுமி பயிற்சி
மாலுமி பயிற்சி

தேர்ச்சி பெற்றவர்கள், தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Continuous Discharge Certificate - CDC) எனும் தகுதிச் சான்றிதழையும் பெற முடியும். இந்தச் சான்றிதழைக்கொண்டு கடல்வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிகக் கடற்படைப் பணிகளை எளிதில் பெற முடியும். இந்தப் பயிற்சி நிறுவனம், இந்தியத் தேசிய கடற்பணியாளர் தரவுதள எண் மற்றும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian National Database of Seafarers (INDOs) Number and CDC) பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துதரும். இதற்காகத் தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

பயிற்சி நிறைவுக்குப் பின்னர் 36 மாதங்கள் கடல்சார் பணியில் அனுபவம் பெற்ற பின்னர் வெளிநாடு செல்லும் கப்பலில், `இரண்டாம் துணைப் பணியாளர்’ எனும் அலுவலர் நிலைக்கான தேர்வுகளை எழுத முடியும். வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெற முடியும்.

மாலுமிகள்
மாலுமிகள்
முதுநிலை பட்டப்படிப்பை இங்கிலாந்தில் படிக்கலாம்! விண்ணப்பிக்க வழிகாட்டல் #Education

கூடுதல் தகவல்களுக்கு...

மேற்காணும் இணையதளத்திலிருந்து இந்தப் பயிற்சிக்கான தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம் அல்லது

`Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach Road, Thoothukudi- 628001, Tamil Nadu’

எனும் முகவரிக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் அல்லது தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவன அலுவலகத்தின் 0461 - 2320075, 2320076, 2330076 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.