இன்று பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஆஃபர்களை வழங்குகிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கிற வாய்ப்பை நிறுவனங்கள் ஏன் தருகின்றன? இதனால் நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் இருக்கிற சாதக - பாதகங்கள் என்ன? வீட்டில் வேலை பார்க்கும்போது நிறுவனங்களும் ஊழியர்களும் எப்படிப் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
பணியாளர்களுக்குச் சாதகமான விஷயங்கள்:
* வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் ஊழியர்கள் ஆபீஸ்-வீடு என்று அலையத் தேவையில்லை. இதனால் அலுவலகம் சென்று வரும் நேரம் குறையும். ஆபீஸ் போகவர செலவாகும் நேரத்தை வேலை செய்யப் பயன்படுத்தலாம். வேலையைத் தவிர படிப்பதற்கும், எக்ஸ்ட்ரா விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம்.
* வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், அலுவலகம் சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவு மிச்சமாகும். பேருந்துகளிலோ அல்லது டிராஃபிக் நெரிசல்களிலோ சிக்கி சின்னாபின்னமாகத் தேவையில்லை.
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது அசெளகர்யங்களைத் தவிர செளகர்யங்கள் நிறைய இருக்கும். இதனால் வேலையில் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

* வீட்டில் இருந்து வேலை செய்வதில் நேரக் கட்டுப்பாடு அதிகம் இருக்காது என்பதால், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடமுடியும்.
* சத்தான உணவைச் சாப்பிடலாம். பெண்களுக்கு, முக்கியமாகத் தாய்மார்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் குழந்தைகளை கவனித்துக்கொண்டே அலுவலக வேலைகளையும் செய்துவிடமுடியும்.
பாதகங்கள்:
* வீட்டில் இருந்து வேலை செய்வதால் கவனச்சிதறல்கள் இருக்கும். இதனால் வேலையில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
* குடும்ப உறுப்பினர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் அலுவலக வேலைகளில் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது.
* நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு இல்லாததால், அங்கு நடக்கும் முக்கியமான விஷயங்கள்கூட தெரியாமல் போகலாம். சக ஊழியர்களுடன் நேரடியாகப் பேசி நட்பு பாராட்ட முடியாது.
* குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து செய்யும் வேலைகளை தனித்தே செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.
* சில வேலைகளுக்கு டாக்குமென்ட்கள் அல்லது தரவுகளை ஜெராக்ஸ் அல்லது பிரின்ட் அவுட் எடுத்து வேலை செய்ய வேண்டி இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இந்தச் செயல்பாடுகளில் தொய்வும், செலவுகளும் அதிகரிக்கலாம்.
நிறுவனங்களுக்கான சாதகங்கள்:
* நேரடி வாடிக்கையாளர்கள் தொடர்பு இல்லாத நிறுவனங்களுக்கு இம்முறை மிகவும் ஏற்றது.
* ஊழியர்களுக்குப் பிடித்த சூழலில் வேலை செய்ய அனுமதிப்பதால், அவர்கள் மனநிறைவுடன் வேலை செய்வார்கள். இதனால் நிறுவனத்தின் மீதான பிடிப்பு அதிகரிப்பதோடு, உற்பத்தித் திறனும் வெகுவாக அதிகரிக்கும்.
* பேப்பர், மின்சாரம், கம்ப்யூட்டர் பராமரிப்பு போன்ற செலவுகள் குறையும்.

பாதகங்கள்!
* ஊழியர்கள் முழு நேரமும் அலுவலக வேலையைத்தான் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க நேரிடும். இது எக்ஸ்ட்ரா வேலைகளில் ஒன்று.
* அலுவலக வேலைகள் மற்றும் அலுவலகம் சார்ந்த ரகசியங்கள் போட்டி நிறுவனத்துக்கு எளிதில் கிடைக்க வாய்ப்புண்டு.
* ஒவ்வொரு ஊழியருக்கும் தனியாக இன்டர்நெட் கட்டணம், மின்சாரக் கட்டணம் தருவதால் செலவு அதிகரிக்கலாம். இன்னோவேஷனுக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்.
பணியாளர்களின் கடமை!
* நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்கும்பட்சத்தில் தன்னொழுக்கத்துடனும், நிறுவனத்துக்கு நேர்மையாகவும் நடந்துகொள்வது அவசியம்.
* நிறுவனம் தரும் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போது, வேலைகளைக் காலம் தாழ்த்தாமல் முடித்துத் தருவது அவசியம்.
* தானுண்டு, தன் வேலையுண்டு என்றில்லாமல் தலைமை அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவேண்டும்.
* செய்யும் வேலைகளையும் அதற்காக எடுக்கும் முயற்சிகளையும் உடனுக்குடன் தலைமைக்குத் தெரியப்படுத்துவது அவசியம்.
நிறுவனங்களின் பொறுப்பு!
* வீட்டில் இருந்து வேலைசெய்யும் ஊழியர்கள், இணையம் வாயிலாக அல்லது இதர தொழில்நுட்பம் வாயிலாக இணைப்பிலேயே இருக்கும்படி செய்வது அவசியம்.

* பணியாளர்களுக்குத் தேவையான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களைக் கட்டாயம் அளிக்கவேண்டும்.
* வேலைக்கான கால அவகாசத்தைச் சரிவர அமைத்துத் தரவேண்டும்.
நிறுவனங்களில் நடக்கும் முக்கியமான விஷயங்களை ஊழியர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்துவது அவசியம்.
* வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களைக் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை, அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங்கில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும். அல்லது அவர்களுக்காக பிரத்யேக மீட்டிங்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடமை உணர்ந்து செயல்பட்டால், 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' மட்டுமல்ல, வேலை விஷயங்களில் அனைத்தும் சுகமே!
நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவரா...? உங்களுடைய அனுபவங்களை கீழே கமென்ட் செய்யுங்கள்.