டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா! - சரியானதும் பொருத்தமானதும்

Day 3. சரியானதும் பொருத்தமானதும்

முதன் முறையாகப் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது என்ன….? சில கேள்விகளுக்கு, சரியான பதில் கேட்கிறார்கள்; சிலவற்றுக்கு ஆனால், பொருத்தமான விடை தரச் சொல்கிறார்கள்.  ஏன் இப்படி…? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்…?

இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் எது? இக்கேள்விக்கு ‘சரியான’ பதில், நம் எல்லாருக்கும் தெரியும் – 15 ஆகஸ்ட் 1947

இதுவே, மகாத்மா காந்தியின் ஆகச் சிறந்த குண நலம் எது?

1) சுறுசுறுப்பு 2) கடின உழைப்பு 3) தலைமைத்துவம்  4) அகிம்சையில் நாட்டம்.

இந்த வினாவுக்கு ‘பொருத்தமான’ விடை – அகிம்சையில் நாட்டம். எல்லாமே சிறந்த குணநலன்கள் என்றாலும், அவற்றுள் எது மிகச் சிறந்தது என்று கூறுதல். அதாவது தரப்பட்டு இருக்கும் நான்கு விடைகளுமே சரியானதுதான்; அவற்றுள் ஒன்றை, சீர் தூக்கிப் பார்த்து, நம்முடைய கருத்துப்படி எது மிகப் பொருத்தமாகத் தோன்றுகின்றதோ, அதனைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு இரு வகை வினாக்களில், பொருத்தமானதைத் தேர்வு செய்வது எளிமையானது. காரணம், எதையும் நினைவில் வைத்துக் கொண்டு, பதில் தர வேண்டியது இல்லை. கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல், நடுநிலையுடன் சிந்தித்தாலே போதும்; பொருத்தமானதைத் தேர்வு செய்து விட முடியும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு, இந்த குணம்தான் மிக இன்றியமையாதது. யாரையும் ‘வேண்டியவர்’, ‘வேண்டாதவர்’ என்று பாகுபடுத்திப் பார்க்காமல், விதிமுறைகளின் படி கடமை ஆற்ற வேண்டும். இத்தகைய அணுகுமுறை வளர்வதற்கு, ‘பொருத்தமானதை’ தேர்வு செய்கிற பயிற்சி, நன்கு துணை புரியும். சரிதானே..? பொருத்தமானதுதானே…? 

TNPSC

இனி நாம், மொழித் தாளுக்குள் நுழைவோம். தமிழ் அல்லது ஆங்கிலம் எதுவாக இருந்தாலும், மொழித் தாள் என்றாலே, பாடம், செய்யுள், இலக்கணம் என்று மூன்று பகுதிகள் இருக்கவே செய்யும். இம்மூன்று பகுதிகளுக்குமே, தெளிவாக வரையறுக்கப்பட்ட, பாடத் திட்டம், தரப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் நாம் நம்மைத் தயார் செய்து கொள்கிறபோது, குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது என்ன…?  பள்ளி வகுப்புகளில், தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள், இயல்பாகவே, போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில்தான் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட முடிவிலும், நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, அருஞ்சொற்பொருள், மனப்பாடப் பகுதி ஆகியன இடம் பெற்று இருக்கும். இதில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப் படுகின்றன. 

இதிலே, அருஞ்சொற்பொருள் பகுதியில், பாடத்தில் இடம் பெற்ற கடினமான சொற்களுக்கு பொருள் / விளக்கம் தரப் பட்டு இருக்கும். இது, மிக முக்கியம். இதே போலத்தான் நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு உள்ளிட்ட, பிற நான்கு பகுதிகளும். ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் படித்து வைத்துக் கொண்டால் தேர்வின் போது வசதியாக இருக்கும். 

எந்த மொழியிலுமே பிழையின்றி பேசுதல், எழுதுதல் – மிக முக்கியம். போட்டித் தேர்வுகளில், ‘பிழை நீக்கம்’ – மதிப்பெண்களை அள்ளித் தருகிற ஒரு பகுதி. ஒருமை, பன்மை வேறுபாடு, கால நிலை (அதாவது, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) குறிக்கும் சரியான வினைச் சொற்கள், கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்புடன் ஒலிக்கும் வெவ்வேறு சொற்கள் (உ-ம்: வேழம்; வேடம்) பிறமொழிக் கலப்பு (இன்று ’ஸ்கூல்’ இருக்கிறதா..?) போன்றவை இவற்றில் சில இனங்கள்.  

ஆங்கில மொழித் தாளிலும், முதலில் சொன்ன இரு இனங்கள் இருக்கும். பொதுவாக, ஆங்கிலத்தில் பிறமொழிக் கலப்பு இடம் பெறுவதில்லை! ஆங்கிலத்தில் இல்லாத, தமிழில் மட்டுமே இருக்கும் இன்னொரு அம்சம் – பாலின வினைச் சொற்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறி வருகிற வினைச் சொற்கள். 

‘அவன் சென்றான்’; ’அவள் சென்றாள்’. 

இந்த வேறுபாடு மிக எளிமையானதுதான். ஆனால் இதன் மீதும் குரூப்4 தேர்வில் கேள்விகள் வருவது உண்டு. பிரபலமான பழமொழிகளும் மேற்கோள்களும் மொழித் தாளில் அதிகம் இடம் பெறுகின்றன. ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா…?’, ‘பட்ட காலிலே படும்’ போன்று பல நூறு பழமொழிகள் தமிழிலே உண்டு. இவை எல்லாவற்றையும் ‘மனப்பாடம்’ செய்து கொண்டு இருக்க வேண்டாம். இயல்பாக இம்மொழிகளை அவ்வப்போது பயன்படுத்தி வந்தாலே, மொழி வளம் தானாக வந்து விடும். அதற்கெல்லாம், இப்போது எங்கே நேரம் இருக்கிறது…?

குரூப்4 தேர்வுக்கு முன்னதாக இந்த ஒரு மாதத்தில் என்ன செய்யலாம்…? 

கவலைப்பட வேண்டாம். கேள்வித்தாளில் ஒரு பழமொழி கொடுத்து, அதற்கான பொருள் கேட்கிறார்கள். இதிலே இரண்டு வகைகள் உண்டு. ஒன்று – பழமொழி வாசகம் மட்டும் தந்து, அதற்கு அர்த்தம் வினவுவது. ‘ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா…?’ கீழ்க்கண்டவற்றுள் இதன் பொருளை சரியாக உணர்த்துவது எது…? நான்கு விடைகள் தரப்பட்டு இருக்கும். இது ஒருவகை. இரண்டாவது, பழமொழி இடம் பெற்ற முழு வாசகமும் தந்து, பொருள் கேட்பது. ’வாராது போல் வந்த மாமணியாய்’ நமக்கு வாய்த்தார் பாரதி.  ‘அபூர்வமாய்’ என்கிற பொருளை உணர்த்துகிற மேற்கோளைக் கொண்ட, முழு வாசகமும் இடம் பெற்று இருக்கிறது. 

இவ்விரு வகைகளில் சரியான விடை காண என்ன செய்யலாம்…? 

முதல் வகையில், தரப்பட்டு இருக்கும் பழமொழியைக் கொண்டு நாமாக ஒரு வாக்கியம் அமைத்துப் பார்க்கலாம். ‘அரண்டவன் கண்ணுக்கு’ என்று மட்டும் இருக்கிறது. இந்த மொழியை முழுவதுமாகச் சொல்லிப் பார்த்தால், பொருள் தானாக விளங்கி விடும். ‘மிரள’ வேண்டிய அவசியம் இருக்காது. அடிப்படையற்ற அச்சம் எழாது. இரண்டாவது வகையா…? இன்னும் சுலபம். பழமொழி / மேற்கோள் இருக்கும் இடத்தில், அதனை நீக்கி விட்டு, நான்கு விடைகளையும் பொருத்திப் பார்த்தால், சரியானது எதுவென்று சட்டென்று புரிந்து விடும். முயற்சி செய்து பாருங்கள்; ’சூட்சுமம்’ விளங்கும். 

தமிழில் மிகப் புகழ் பெற்ற புலவர்கள், அவர்களின் படைப்புகளில் பிரபலமான படைப்புகளில் இருந்து, ஓரிரு வினாக்களை எதிர்பார்க்கலாம். உதாரணத்துக்கு, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்…’ என்று பாடிய கவிஞர் யார்…? (இதே கேள்வி, மீண்டும் மீண்டும் பலமுறை, பல தேர்வுகளில் இடம் பெற்று இருக்கிறது). திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், பாரதியார் / பாரதிதாசன் பாடல்கள் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் தவறாமல் இடம் பெறுகின்றன. ஒருமுறை சற்றே ’பார்த்து விட்டு’ செல்வது நல்லது. மொழித் தாளின் கடினமான பகுதிகளுக்குப் பிறகு வருவோம். 

எளிமையோ எளிமை– 3

 

 

 

அட… வரலாறு அழைக்கிறது! (தேடுவோம்) 

 

TNPSC Group IV ஜெயிக்கலாம் ஈசியா!

நாள் பாடம்
Day 1

க்ரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது? + Model Exam 1  [Click Here]

Day 2

மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம்? + Model Exam 2 [Click Here]

Day 3

சரியான விடை.. பொருத்தமான விடை.. எப்படி பதிலளிப்பது? + Model Exam 3 [Click Here]

Day 4

ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்..! + Model Exam 4 [Click Here]

Day 5

கணிதத்தை எதிர்கொள்வது எப்படி? + Model Exam 5 [Click Here]

Day 6

வரலாறு பாடத்தில் மிஸ் பண்ணக்கூடாத பகுதிகள் + Model Exam 6 [Click Here]

Day 7

எளிய பகுதி ஏராளமான மதிப்பெண் இந்திய அரசியலமைப்புச் சட்டம்

+ Model Exam 7 [Click Here]

Day 8

திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது?

+ Model Exam 8 [Click Here]

Do you like the story?

Please Appreciate the Author by clapping!