Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்’ - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 4:  ஊரைத் தெரிஞ்சிக்குவோம்!

‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்; உலகம் தெரிஞ்சிக்கிட்டேன்…’ என்று யாரால் உரக்கச் சொல்ல முடிகிறதோ அவருக்கு, போட்டித் தேர்வுகளில் சுமார் 10 மதிப்பெண்கள் உறுதி ஆகி விட்டது. ஆம். பூகோள அறிவு நிரம்ப உள்ளவர்கள், 4 (அ) 5 கேள்விகளுக்கு ‘கண்ணை மூடிக் கொண்டு’ பதில் சொல்லி, மதிப்பெண்களை அள்ளலாம். 

வரலாறு பகுதியைப் போலவேதான், பூகோளமும். உலகம், இந்தியா, தமிழ்நாடு என்று மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். புவியியலைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் சற்றே, ‘உலகளாவிய’ பார்வையும் தேவைப் படுகிறது. இந்திய அளவில் நின்று விடுவதில்லை. 

TNPSC Group IV

இளைஞர்களுக்கு ஒரு யோசனை: 

உலக வரைபடம், இந்திய வரைபடம், தமிழக வரைபடம் ஆகிய மூன்றையும் வாங்கி, நன்கு கண்ணில் படும்படி, வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துக் கொள்ளவும். நாள்தோறும் சில மணித் துளிகள், வரைபடத்தைப் பார்த்து வந்தாலே போதும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லி விட முடியும். ‘மேப் ரீடிங்’, அறிவு வளர்ச்சிக்கு, மிகவும் ஆரோக்கியமான பயிற்சி. பொது அறிவு மேம்பட வேண்டும் என்று கருதுபவர்கள் எல்லாரும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். 

இது எந்த அளவுக்கு, போட்டித் தேர்வுகளில் பயன் தரும்?

‘காவிரி ஆறு, தமிழ்நாட்டில் எவ்வெந்த மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது?’ 

இந்தக் கேள்விக்கு உரிய பதிலை, ‘மனப்பாடம்’ செய்து வைத்துக் கொள்ளலாம். அல்லது, தமிழக வரைபடம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரண்டாவதுதான் மிக எளிய வழி. காரணம், காணொளியாக (visual) ஒரு விஷயத்தைப் பார்க்கிற போது, நன்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். வரைபடம் பார்க்கிற வழக்கம் இருந்தால், இதுபோன்ற கேள்விகள், எத்தனை எளிதாக இருக்கும்…? (’காவிரி’ கேள்விக்கு என்ன பதில்..? மன்னிக்கவும். வரைபடம் பாருங்கள்). தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், மலைகள், காடுகள், ஏரிகள், குளங்கள், கோயில்கள், தொழிற்சாலைகள்… பட்டியலை ஒருமுறை படித்து, வரைபடத்திலும் பார்த்து வைத்துக் கொண்டால், பிரசினையே இல்லை. 

இதே போல், மற்றொரு பகுதி, பருவ காலங்கள். வட கிழக்கு, தென் மேற்குப் பருவம் பற்றிய தகவல்கள் மிக முக்கியம். மே, ஜூன், ஜூலை மாதங்களில், கேரளாவை ஒட்டிய, மேற்கு மாவட்டங்களில் தென் மேற்குப் பருவம்; அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாவட்டங்களில் வட கிழக்குப் பருவம். இதுதான் தமிழ் நாட்டுக்கான இரண்டு, பருவ மழைக்காலம். நெல், பருத்தி, கரும்பு, நிலக்கடலை, மலர்கள், கனிகள்… எங்கெங்கு அதிகம் விளைகின்றன…. தமிழகத்தில் உள்ள அணைக்கட்டுகள், நீர்ப்பாசன வசதிகள், மண் வகைகள் தொடர்பான தகவல்கள்.

தமிழக விவசாயம் பற்றி போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப் படுகின்றன. இவையும் அன்றி, பல்வேறு தொழில்கள், சந்தைகள் பற்றிய பூகோள செய்திகள்.உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில், எவ்வெத் தொழில்கள் எங்கெல்லாம் அதிகம் காணப் படுகின்றன…? ’tannery’ எனப்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் (வேலூர் மாவட்டம்); நெசவுத் தொழில் (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள்); பட்டு நெசவு (காஞ்சிபுரம்) மீன்பிடித்தல், உப்பளங்கள் (கடலோர மாவட்டங்கள்) போன்ற, புவியியல் சார்ந்த பொருளாதார மண்டலங்கள்.

2014ஆம் ஆண்டு குரூப்4 தேர்வில், இந்திய அளவில் பயிர் உற்பத்தி பற்றி, கேட்கப் பட்ட வினா இது - 

சரியாகப் பொருத்துக:

(a) அரிசி உற்பத்தி   -       1. பஞ்சாப் & அரியானா

(b) கோதுமை உற்பத்தி –    2. கூர்க் & நீலகிரி.

(c) சணல் உற்பத்தி   -      3. உத்தரப் பிரதேசம் & மேற்கு வங்கம்.

(d) காப்பி தோட்டங்கள்  -   4. மேற்கு வங்கம் & அசாம்.  

மேலோட்டமான பூகோள அறிவு இருந்தாலே இக்கேள்விக்கு பதில் சொல்லி விடலாம். காப்பித் தோட்டங்கள், கூர்க் & நீலகிரியில் அதிகம்; சணல் என்றாலே, மேற்கு வங்கமும், அசாமும்தான்; உ.பி.யில் அரிசியும்; பஞ்சாபில் கோதுமையும்.  

இதே ஆண்டில் வந்த இன்னொரு கேள்வி – 

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்

(A) கொச்சி

(B) கொல்கத்தா

(C) மும்பை

(D) விசாகப்பட்டினம்.   

(விடை – D)

மற்றொரு வினா – சரியான விடையைப் பொருத்துக:-

(a) மொகஞ்சதோரா       -    1. குஜராத்.

(b) காளிபங்கன்           -    2. பஞ்சாப். 

(c) லோத்தல்              -    3. இராஜஸ்தான்

(d) ஹரப்பா                -    4. சிந்து. 

(விடை:  a - 4 b - 3 c - 1  d – 2) 

க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?

(A) ஜியார்ஜியா

(B) பெளாரஸ் 

(C) ரஷ்யா

(D) லத்வியா.

(விடை- ரஷ்யா)  

பெரிய ஏரிகளில் (Great Lakes) கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது? (2014 குரூப்4)

(A) சுப்பீரியர் ஏரி.

(B) மிச்சிகன் ஏரி.

(C) ஒன்டாரியோ ஏரி.

(D) ஹரான் ஏரி.   

(விடை – C)

பொதுப் பாடத்தில் உள்ள 100 கேள்விகளில், 4 (அ) 5 வினாக்கள் பூகோளப் பாடத்தில் இருந்து இடம் பெறலாம். ஓரிரு மணி நேரம் செலவிட்டால் போதும்; புரிந்து கொள்ளாத முடியாதபடி எதுவும் இல்லை; பூகோளத் தகவல்களும் எளிதில் கிடைக்கும். இது போன்ற ஆதாயம் வேறு எந்தப் பகுதிக்கும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற வகையில் சில கேள்விகள் இடம் பெறுவது அதிகரித்து வருகிறது. வரவேற்கத்தக்க ஆரோக்கியமான மாற்றம்தானே…? 

சமீப காலமாக பள்ளிப் புத்தகங்களில், ’சுற்றுச் சூழல்’ தனியான பாடமாகவே கூட தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. இந்தப் பகுதிகளை ஒருமுறை படித்தாலும் போதும். குரூப்4 தேர்வுக்குப் பயன்படும். தேசிய நெடுஞ் சாலைகள், ரெயில்வே இருப்புப் பாதைகள் ஆகியனவும், பல ஆண்டுகளாக, கேள்விக்குரிய பகுதியாக இருந்து வருகிறது.  

ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை? (2014 குரூப் 4) 

(A) சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்.

(B) சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி.

(C) மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி. 

(D) சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா. (விடை – D)

இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள், அதற்கான காரணங்கள், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அரசின் பார்வையில் இருந்து, தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை குறித்த எதிர்மறைச் செய்திகள், போட்டித் தேர்வு, குறிப்பாக குரூப்4க்குத் தேவையில்லை. மிக அதிக பட்சம் போனால், 8 முதல் 10 மணி நேரம்; பூகோளத்தில் தேவையான அளவுக்கு தயாராகி விடலாம். 

அடுத்து நாம் பயணிப்பது…. 

‘கணிதம்’!  

எளிமையோ எளிமை - TNPSC Model Test - 4

 

loading...

TNPSC Group IV ஜெயிக்கலாம் ஈசியா!

நாள் பாடம்
Day 1

க்ரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது? + Model Exam 1  [Click Here]

Day 2

மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம்? + Model Exam 2 [Click Here]

Day 3

சரியான விடை.. பொருத்தமான விடை.. எப்படி பதிலளிப்பது? + Model Exam 3 [Click Here]

Day 4

ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்..! + Model Exam 4 [Click Here]

Day 5

கணிதத்தை எதிர்கொள்வது எப்படி? + Model Exam 5 [Click Here]

Day 6

வரலாறு பாடத்தில் மிஸ் பண்ணக்கூடாத பகுதிகள் + Model Exam 6 [Click Here]

Day 7

எளிய பகுதி ஏராளமான மதிப்பெண் இந்திய அரசியலமைப்புச் சட்டம்

+ Model Exam 7 [Click Here]

Day 8

திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது?

+ Model Exam 8 [Click Here]

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement