‘கணிதத்தை எதிர்கொள்வது எப்படி?’ - - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 5: கடினமானதா கணிதம்? 

எந்தவொரு இளைஞன் / இளைஞிக்கு, கணிதம் எளிமையாக இருக்கிறதோ, அவருக்குப் போட்டித் தேர்வுகள் பற்றிய அச்சமே தேவை இல்லை. இத்தனைக்கும் இரண்டாம் தாளில் (பொதுப் பாடம்,) நுண்ணறிவுத் திறன் (test of intelligence) பகுதியும் சேர்ந்து, 25 வினாக்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. இந்த 25 கேள்விகளிலும், கணிதப் பாடத்தில் இருந்து 10 முதல் 15 கேள்விகள் வந்தாலே அதிகம். பிறகு ஏன், கணிதம் கண்டு கலங்க வேண்டும்…? 

 

கணித வகுப்பு

 

இரண்டு கோணங்களில் இதனைப் பார்க்கலாம். 

முதலில் ‘அனுகூலம்’ (advantage) என்கிற கோணம். பிற பாடங்களில் சரியான விடை தருபவர்கள், மனதில் சற்றே சந்தேகத்துடன்தான் தேர்வு அரங்கை விட்டு வெளியே வருவார்கள். ஆனால், கணிதப் பகுதியில், எந்தக் குழப்பமும், ஐயமும் இன்றி, மதிப்பெண்களை உறுதி செய்து கொள்கிறார்கள். காரணம், கணிதப் பாடங்களில் ஒரு வினாவுக்கு ஒரே ஒரு தீர்மானமான விடைதான் இருக்க முடியும்.  கணித வினாக்களுக்கு சரியான விடை அளிப்பவர்கள், அதற்கான மதிப்பெண்களை சர்வ நிச்சயமாகப் பெறுகிறார்கள். வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்வது போன்றது, கணிதக் கேள்விகளுக்குப் பதில் தருவது. இந்த உறுதித் தன்மை, பிற பகுதிகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுகிறது. இந்த ஆதாயம், பிற பாடங்களில்  வாய்ப்பதில்லை.  

கணிதப் பிரிவில், இரண்டு வகைகள் உள்ளன. 

சதவிகிதம், சராசரி ஆகியன கொண்ட பொதுக் கணிதம் (‘அரித்மெடிக்’). சற்றே உயர்நிலைக் கணிதமான சூத்திரங்கள், கருத்துரு (’கான்செப்ட்’) அடிப்படையாகக் கொண்ட அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி & ட்ரிக்னாமெட்ரி. இவ்விரு வகைகளில் இருந்தும், வகைக்குக் குறைந்தது 7 (அ) 8 கேள்விகள் வரை எதிர்பார்க்கலாம். இரண்டில், பொதுக் கணிதம், எளிதானது; நன்கு பரிச்சயமானது. கணிதம் யாருக்கெல்லாம் கடினமானதாகத் தோன்றுகின்றதோ, அவர்கள் பொதுக் கணிதத்தில் சராசரி, சதவிகிதம் ஆகிய பகுதிகளில் நாட்டம் செலுத்தலாம். யாருடைய வழி காட்டுதலும் இல்லாமல் தானாகவே புரிந்துகொள்ள முடிகிற பகுதி இது. வழிமுறைகளை (‘steps’) ஒன்று விடாமல் சரியாகப் பின்பற்றி வந்தாலே, மொத்தக் கணக்கும் எளிதில் விளங்கி விடும். 

குரூப் 4 தேர்வில் பொதுவாக, குழப்பமான கணித வினாக்கள் வருவதில்லை. படித்தவுடன் புரிந்துகொள்கிற நேரடியான வினாக்கள்தாம் இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை பயிற்சி மேற்கொண்டால், இப்பகுதியில் விற்பன்னர் ஆகிவிடலாம். போட்டித் தேர்வுக்குத் தயார் ஆகிறவர்கள் மனம் தளராமல், மனம் நோகாமல் முயற்சிக்க வேண்டிய பகுதி இது. மிக நல்ல கல்வித் தகுதி உடையவர்கள்கூட, போட்டித் தேர்வு என்றாலே ஒரு வித பதற்றத்துடன் அணுகுவதற்குக் காரணமே, கணிதப் பகுதியில் போதிய பயிற்சி எடுத்துக்கொள்ளாததுதான். 

சரி. கணிதத்தை ‘எதிர் கொள்வது’ எப்படி…? 

வாய்ப்பாடு. கணிதத்தின் அரிச்சுவடி. இயன்றவரை வாய்ப்பாடுகளை சொல்லிப் பார்த்து, எழுதிப் பார்த்து பழக்கப் படுத்திக் கொள்ளலாம். மிகச் சாதாரணமான கூட்டல், கழித்தலில் கூட தவறு இழைப்பது, போட்டித் தேர்வுகளில் சர்வ சாதாரணம். படபடப்புதான் எல்லாவற்றையும் பாழாக்கி விடுகிறது. நிறுத்தி நிதானமாக போட்டுப் பார்த்தால் சரியாக செய்து முடிக்க இயலும். ’நேரமின்மை’, குரூப் 4 தேர்வைப் பொறுத்தமட்டில் ஒரு பிரச்னையே இல்லை. ஆகவே இதுகுறித்த கவலையே வேண்டாம். 

சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செய்யும்போது, எப்படித் தவறு வரலாம்…? மளிகைக் கடைகளில் பார்க்கிறோம். ஒரே சமயத்தில் பல பேர், பல பொருள்களை, பல அளவுகளில் வாங்குகிறார்கள். ஆனாலும், கடைக்காரர் ஒவ்வொருவருக்கும் சரியான தொகையை சில நொடிகளிலேயே கணக்கு போட்டு சொல்கிறாரே… அது எப்படி…? பயிற்சிதான். வேறு ஒன்றுமே இல்லை. இதைத்தான் குரூப் 4 தேர்வுக்கும் சொல்கிறோம். 

தினந்தோறும் குறைந்தது பத்து நிமிடங்களுக்காவது ஏதேனும் கூட்டல், கழித்தல் போட்டுப் பார்க்கலாம்; பெருக்கல், வகுத்தல் முயற்சித்துப் பழகலாம். பட்டம் முடித்துவிட்டு, பள்ளிப் பருவ கூட்டல், கழித்தலில் போய், மதிப்பெண்கள் இழக்கலாமா…? நல்ல சம்பளம், நிலையான வேலை… அரசுப் பணி வேண்டும் என்றால், அதற்காக சிறிது உழைக்கத்தான் வேண்டும். மெத்தனத்துடன் ஒரு காரியத்தில் இறங்குவது கூடாது; அதிலும் சுமார் 20 லட்சம் பேர், நம்முடன் போட்டியில் இருக்கிறபோது, கடுமையாக முயற்சித்தே ஆக வேண்டும். 

இரண்டு இலக்கம், மூன்று இலக்கம், நான்கு இலக்கம் என்று பெருக்கலில் மேலே மேலே பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதேபோன்றுதான் வகுத்தலிலும். சிலருக்கு, பின்னங்களைப் பெருக்குவதில், வகுப்பதில் சிரமம் இருக்கலாம். ஓரிரு கணக்குகளைப் போட்டுப் பார்த்தால், சிறிது சிறிதாக அச்சமும் ஐயமும் விலகுவதை நன்கு உணரலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, எந்தக் குறுக்கு வழியும் இல்லை. அதிலும் கணிதம் போன்ற அறிவு சார்ந்த பகுதியில், பயிற்சிதான், தேர்ச்சியை உறுதி செய்யும். சிறிய வகுப்பில் தொடங்கி, படிப்படியாக, உயர் வகுப்புக் கணக்குகளை முயற்சிக்கலாம். 

ஒரு அத்தியாயத்தில் உள்ள பயிற்சிக் கணக்குகள் அத்தனையும் போட்டு முடித்துவிட்டு, அடுத்த அத்தியாயம் போவது நல்லது. குறைந்த பட்சம், அந்த அத்தியாயம் தொடர்பான கேள்விக்கு சரியான பதில் தர முடியும் என்று உறுதிசெய்து கொள்ளலாம் அல்லவா…? அறவே புரியவில்லை என்கிற பகுதிகளை மட்டும், யார் மூலமாவது, அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். அவ்வப்போது, கடந்த காலத் தேர்வுகளில் இருந்து, கணிதம் தொடர்பான வினாக்களை முயற்சித்துப் பார்க்கலாம்.

கணிதப் பாடத்தில், மனப்பாடப் பகுதி உண்டு. அதுதான், சூத்திரங்கள். அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கலாம்; நேரம் கிடைக்கும் போது எழுதியும் பார்க்கலாம். சூத்திரங்களை அடிப்படையாய்க் கொண்டு தீர்க்க வேண்டிய கணக்குகள் தவறாமல் இடம் பெறுகின்றன. எந்தக் கணக்கிலே எந்த சூத்திரம் இடம் பெற்று இருக்கிறது என்பதை அறிவதுதான் சூட்சுமமே. இது தெரிந்துவிட்டால், பதில் கண்டுபிடிப்பது சிரமமே இல்லை. அதற்கு முதலில், சூத்திரங்கள் நன்கு மனதில் பதிந்து இருக்க வேண்டும்.

இது அத்தனையும், தேர்வின்போது, சரியான விடையை, விரைந்து கண்டுபிடிக்க உதவும். சராசரி, சதவிகிதம் தொடங்கி, ’ட்ரிக்னாமெட்ரி’ வரை, முடிந்த மட்டும், எல்லாப் பகுதிகளையும் விரிவாகப் பார்க்கத்தான் போகிறோம்.தக்க உதாரணங்களுடன் எளிமையாக விளக்கி, பயிற்சி வினாக்கள் தந்து, முயற்சி செய்யச் சொல்லி, முழுமையாகத் தயார் ஆவதற்கு, தேவையான அத்தனையும் இத்தொடரில் தரத்தான் போகிறோம். 

அதற்கு முன்னதாக, இன்றே, இப்போதே, 5 அல்லது 6-ம் வகுப்பு கணிதப் புத்தகத்தை யாரிடமாவது வாங்குவோம்; நமக்கு நன்கு பரிச்சயமான அத்தியாயத்தில் இருந்து கணக்குகளைப் போட்டுப் பார்ப்போம். எல்லாம், தானாகப் புரிந்துபோகும். நினைவில் கொள்வோம் - கணிதம் ஒன்றும் அத்தனை கடினம் அல்ல. நமது கடமையைச் சரியாக செய்தால், நமக்கு உரிமையான வெகுமதி, தானகவே வந்து சேரப் போகிறது. 

 

எளிமையோ எளிமை - மாதிரித் தேர்வு - 5

loading...

TNPSC Group IV ஜெயிக்கலாம் ஈசியா!

நாள் பாடம்
Day 1

க்ரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது? + Model Exam 1  [Click Here]

Day 2

மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம்? + Model Exam 2 [Click Here]

Day 3

சரியான விடை.. பொருத்தமான விடை.. எப்படி பதிலளிப்பது? + Model Exam 3 [Click Here]

Day 4

ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்..! + Model Exam 4 [Click Here]

Day 5

கணிதத்தை எதிர்கொள்வது எப்படி? + Model Exam 5 [Click Here]

Day 6

வரலாறு பாடத்தில் மிஸ் பண்ணக்கூடாத பகுதிகள் + Model Exam 6 [Click Here]

Day 7

எளிய பகுதி ஏராளமான மதிப்பெண் இந்திய அரசியலமைப்புச் சட்டம்

+ Model Exam 7 [Click Here]

Day 8

திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது?

+ Model Exam 8 [Click Here]

Do you like the story?

Please Appreciate the Author by clapping!