திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 8: அறிவியல் தெரிஞ்சுக்கலாமா?

அறிவியல்.. போட்டித் தேர்வுகளில் பலரைத் திணறடிக்கிற பகுதி இதுதான். கடினம் என்பதல்ல; சுவை / சுவாரஸ்யம் குறைவு. அதுதான் பிரச்னை. நமக்கு நன்றாகத் தெரியும். அறிவியலில் மூன்று பிரிவுகள் உள்ளன. 1. இயற்பியல் (Physics)  2. வேதியியல் (Chemistry) 3. உயிரியல். (Biology).  இதில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு: 1) தாவரவியல் (Botany) 2) விலங்கியல். (Zoology). 

கடந்த சில ஆண்டுகளின் வினாத் தாட்களைப் பார்க்கிறபோது, உயிரியல் பகுதிதான் மிக முக்கிய இடம் பிடிக்கிறது. அடுத்ததாக, இயற்பியல். மூன்றாவதாகத்தான் வேதியியல். இந்தப் பகுதியில் அதிகம் கேட்பது இல்லை. உயிரியல் பாகத்தில், தாவரவியல், உயிரியல் இரண்டுக்குமே சம முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. ஆனாலும் உயிரியல் சற்றே அதிக அளவில் சாதியங்கள் கொண்டதாகத் தெரிகிறது. உடற் கூறு, ரத்த வகைகள், ரத்த ஓட்டம், விட்டமின்கள், உடலின் வெவ்வேறு உறுப்புகளின் செயல்பாடுகள், விட்டமின்கள், நோய்கள் அதற்கான மருந்துகள் / சிகிச்சைகள், உணவுச் சத்துக்கள் போன்ற பல அத்தியாயங்கள், எல்லாப் போட்டித் தேர்வுகளிலுமே முக்கிய இடம் வகிக்கின்றன. 

TNPSC

அறிவியல் பாடத்தில் மிக நல்ல, சாதகமான அம்சம் இருக்கிறது. தேர்வாணையம், அறிவியல் பகுதிக்கான பாடத் திட்டத்தை வெகு தெளிவாக வரையறுத்துத் தந்து இருக்கிறது. அநேகமாக எல்லாக் கேள்விகளுமே, இந்தப் பாடத் திட்டத்துக்குள் அடங்கியே உள்ளன. என்ன தெரிகிறது…? எங்கிருந்து என்ன கேள்வி வரும் என்றே தெரியாமல் தேர்வுக்குத் தயாராகிற சூழல், அறிவியலைப் பொறுத்தவரை இல்லை. பள்ளி (அ) கல்லூரித் தேர்வைப் போலவே, போட்டித் தேர்வுக்கும் தயார் செய்ய முடியும் என்றால், நமக்கு சாதகம்தானே..? 

சரி. எப்படி நம்மைத் தயாரித்துக் கொள்வது…? 

அறிவியல் பாடத் திட்டம் மொத்தமும், ஆறாவது முதல் பத்தாவது வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் அடங்கி விடுகிறது. கடந்த ஆண்டுகளில், அறிவியல் தொடர்பாகக் கேட்கப்பட்ட எந்த வினாவாக இருந்தாலும், எந்தத் தேர்வாக இருந்தாலும், நேரடியாக, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கின்றன. உதாரணத்துக்கு, 2011 குரூப் 4 தேர்வின், முதல் கேள்வி இது.

‘மனிதனின் இயல்பு வெப்ப நிலை என்ன..?’

இதே தேர்வில் இன்னொரு கேள்வி, ‘உண்ணக் கூடிய காளான்கள்’ பற்றியது. இவை எல்லாம், அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ளவை; பள்ளி வகுப்புகளில் ஏற்கெனவே நாம் படித்தவை. 

எத்தனை வினாக்கள் அறிவியல் பாடத்தில் இருந்து வரலாம்..? 

ஒவ்வோர் ஆண்டும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. 2011-ம் ஆண்டு க்ரூப் 4 தேர்வில், சுமார் 20 வினாக்கள் வரை இருந்தன. அது என்ன ‘சுமார்’ 20 வினாக்கள்…? சில வினாக்களை, ‘அறிவியல்’ என்கிற பாடப் பகுதிக்குள் சிக்க வைக்க முடியாது. பொதுவாக எல்லாருக்கும் தெரிந்ததாக இருக்கும். நாம் அதனை, அறிவியல் பகுதிக்குள் வைத்துப் பார்க்கிறோம். 

‘உடலின் சீரான ரத்த ஒட்டத்துக்குக் காரணமான உறுப்பு எது?’ 

a) மூளை  b) இதயம்  c) நுரையீரல் d) சிறுநீரகம்.

இந்தக் கேள்வி அறிவியல் தொடர்பானதுதான். ஆனாலும், பாடப் புத்தகங்களில் படிக்காமலே, பொதுவாக யாராலும் பதில் கூற முடியும்தானே…? இவ்வாறான வினாக்களை, குரூப் 4 தேர்வில் அதிகம் எதிர்பார்க்கலாம். இனி, நாம் செய்ய வேண்டியது என்ன…? சிறிது கூட சோர்வு அடையாமல், சிரமம் பார்க்காமல், உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்; ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகங்களை, ஒரு முறை, முழுவதுமாகப் படிப்போம். ஒருவேளை ஏதேனும் புரியவில்லை; அல்லது நினைவில் கொள்ள இயலவில்லை எனில் கவலைப் பட வேண்டாம். 

கொள்குறி வகை (objective type) வினாக்களில் இருக்கிற ஒரு வசதியே, நாம் மறந்து போய் விட்டாலும் கூடப் பரவாயில்லை; கேள்வித் தாளில் தரப் பட்டு இருக்கும் நான்கு சாத்தியங்களையும் படிக்கும்போதே, சரியான விடை நமக்கு நினைவுக்கு வந்து விடும். ஆனால் இதற்கு, அந்தப் பகுதியை நாம் ஒருமுறையேனும், சமீபத்தில் படித்து இருக்க வேண்டும். 

குரூப் 4 தேர்வுக்குத் தயார் செய்துகொள்ளும் ஒவ்வொருவரும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டியது – புதிதாக எதையும் கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முயற்சிக்க வேண்டாம். ஏற்கெனவே கற்றதை, புரிந்ததை, தேர்வுக்கு முன்னர், படித்து, ஒரு நினைவூட்டல் மட்டும் செய்து கொள்ளுங்கள் போதும். அறிவியல் பகுதிக்கு இது மிகவுமே பொருந்தும். விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் என்று, இந்த வரிசையில் படிக்கவும்.

அறிவியல் பாடங்களைப் படிக்கத் தயக்கம் உள்ளவர்களுக்காக – மேலும், இரண்டு சாதகமான விஷயங்கள்: கடந்த ஆண்டுகளில் வந்த வினாக்களைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். பல சமயங்களில், சில வினாக்கள் மட்டுமே திரும்பத் திரும்பக் கேட்கப் படுகின்றன. (உதாரணத்துக்கு, தாவரவியலில் - ஒளிச் சேர்க்கை; விலங்கியலில், விட்டமின்கள் போன்றவை, தவறாமல் இடம் பெறுகின்றன.) இரண்டாவது சாதகமான அம்சம் – அறிவியல் பகுதிக்கு மட்டும், நன்றாக கவனத்தில் கொள்ளவும் – இந்தப் பகுதிக்கு மட்டும், ஏதேனும் தரமான வழிகாட்டிப் புத்தகம் படிக்கலாம். 

‘தரமானது’ என்று எப்படி அறிந்து கொள்வது…? கேள்வி – பதில் வடிவில் இருந்தால், அது வேண்டாம். பாட வடிவில் ( text form) இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். ஆயிரம் கேள்வி - பதில்கள் இருந்தாலும், அது நமக்கு உதவாது. இதுவே, அரைப் பக்கத்தில் ஒரே ஒரு விஷயத்தை சொன்னாலும், அது முழுமையான செய்தியாக இருந்தால், தேர்வுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு, மகரந்த சேர்க்கை என்றால் என்ன..? அது எவ்வாறு நடைபெறுகிறது..? இதனால் என்ன விளைவுகள் / பயன்கள் ஏற்படுகின்றன..? இவை யெல்லாம், சுமார் பத்து வரிகளில், ஒரே இடத்தில் கோர்வையாகத் தரப்பட்டு இருந்தால், படித்ததும் நமக்கு மனதில் பதியும். இதுவே, இவையெல்லாம் வெவ்வேறு பக்கங்களில், வெறும் கேள்விகளாக, நான்கு சாத்தியங்களுடன் (options) தரப்பட்டு இருந்தால் அது, அறிவாற்றலை அல்லது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள சற்றும் உதவாது. நமது நேரத்தை வீண் ஆக்கவே செய்யும். பல்வேறு நாளிதழ்களில் வருகிற, போட்டித் தேர்வுக்கான கேள்வி – பதில்கள், மன்னிக்கவும், இந்த வகையில்தான் அமைந்து உள்ளன. நமது ’தேவை’யை இது பூர்த்தி செய்யாது.  

சரி. நிறைவாக என்னவெல்லாம் அறிவியல் பாடப் பகுதியில் உள்ளன…? 

விலங்கியல்: ரத்தம், ரத்த ஓட்டம்; சுற்றுச்சூழல், சுகாதாரம், மனித நோய்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள், உள்ளிட்டவை.

தாவரவியல்: உயிர் அறிவியலின் அடிப்படைக் கருத்துருக்கள் (concepts) உணவுச் சத்துகள்; சுவாசம் முதலியன.

இயற்பியல்: பிரபஞ்சம்; பொதுவான அறிவியல் விதிகள்; கண்டுபிடிப்புகள்; விசை, இயக்கம், சக்தி; காந்தம், மின்சாரம் மற்றும் மின்னணு; வெப்பம், ஒளி, ஒலி; முதலியன.

வேதியியல்: கூறுகள், கூட்டுகள்; அமிலங்கள், காரங்கள்; ரசாயன உரங்கள்; பூச்சிக் கொல்லிகள் ஆகியன.

தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில், முழுப் பாடத் திட்டமும் தெளிவாகத் தரப் பட்டுள்ளது. பார்த்து வைத்துக் கொள்ளவும். 

எளிமையோ எளிமை : மாதிரித் தேர்வு 8 

loading...

TNPSC Group IV ஜெயிக்கலாம் ஈசியா!

நாள் பாடம்
Day 1

க்ரூப் 4 தேர்வுக்கு எப்படி தயாராவது? + Model Exam 1  [Click Here]

Day 2

மொழிப் பாடங்களை எப்படி படிக்கலாம்? + Model Exam 2 [Click Here]

Day 3

சரியான விடை.. பொருத்தமான விடை.. எப்படி பதிலளிப்பது? + Model Exam 3 [Click Here]

Day 4

ஊரைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக்..! + Model Exam 4 [Click Here]

Day 5

கணிதத்தை எதிர்கொள்வது எப்படி? + Model Exam 5 [Click Here]

Day 6

வரலாறு பாடத்தில் மிஸ் பண்ணக்கூடாத பகுதிகள் + Model Exam 6 [Click Here]

Day 7

எளிய பகுதி ஏராளமான மதிப்பெண் இந்திய அரசியலமைப்புச் சட்டம்

+ Model Exam 7 [Click Here]

Day 8

திணறடிக்கும் அறிவியல்.. எத்தனை வினாக்கள் வரும்? எப்படிப் படிப்பது?

+ Model Exam 8 [Click Here]

Do you like the story?

Please Appreciate the Author by clapping!