Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

20 கேள்விகள்.. ஈசியான விளக்கங்களுடன் அரசியலமைப்புச் சட்டம்! - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 11: இந்திய சாசனம்.

இந்திய அரசமைப்பு சட்டம். எல்லா சட்டங்களுக்கும் தாய்.  முகப்புரை (Preamble), பிரிவுகள் / உறுப்புகள் (Articles), அட்டவணைகள் (Schedules) திருத்தங்கள் (Amendments) என 4 பகுதிகள் உள்ளன. 

TNPSC Constitution

முகப்புரை. 

அரசமைப்பு சட்டத்தின் ‘ஆத்மா’ என்று இதனைக் கூறலாம். சிலருக்கு ஒரு கேள்வி எழுந்தது. ‘முகப்புரை’, சாசனத்தின் ஒரு பகுதியா இல்லையா என்பதுதான் அது. ’கேசவானந்த பாரதி’ வழக்கில் உச்ச நீதிமன்றம், முகப்புரை, சாசனத்தின் ஒரு பகுதிதான் என்று உறுதியாய்த் தெரிவித்தது. கேரளாவின் ‘கேசவானந்த பாரதி’, மற்றும் கர்நாடகாவின் ’எஸ்.ஆர்.பொம்மை’ ஆகிய இரண்டும் நமது அரசியல் சாசனம் தொடர்பான, முக்கிய வழக்குகள். இந்த இரண்டு பெயர்களையும் நினைவில் கொள்ளவும். வழக்கு பற்றிய விவரங்களை, சந்தர்ப்பம் வாய்த்தால், பிறகு பார்க்கலாம்; நீங்களாகவே கூட, தெரிந்துகொள்ளலாம். இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டாலே, ’கூகுள்’ மொத்த வரலாறையும் தந்து விடும். கவலை வேண்டாம். 

முகப்புரை என்ன சொல்கிறது…? 

1. இந்திய மக்களாகிய நாம், நமக்கு வழங்கிக்கொண்டது இது. அதாவது, இந்திய சாசனத்துக்கு, இந்திய மக்களே எஜமானர்கள். 

2. இந்தியா – ஒரு இறையாண்மை கொண்ட (Sovereign), சமதர்ம (Socialist), சமய சார்பற்ற (Secular) ஜனநாயக (Democratic) குடியரசு (Republic) நாடு. 

3. கீழ்க்கண்டவற்றை சாசனம், எல்லா இந்தியர்களுக்கும் உறுதி செய்கிறது: i) சமூக, பொருளாதார, அரசியல் நீதி; ii) எண்ணம், வெளிப்பாடு, நம்பிக்கை, சமயம் மற்றும் வழிப்பாட்டு சுதந்திரம்; iii) தகுதிநிலை (status) மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம்; iv) தனிமனித கண்ணியம் மற்றும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உறுதி செய்கிற சகோதரத்துவம். 

4. 1949 நவம்பர் 26 அன்று, இச்சட்டத்தை, நமக்கு நாமே வழங்கிக் கொண்டோம். 

மேலே சொல்லப்பட்டு இருக்கிற நான்கு அம்சங்களையும், ‘மனப்பாடம்’ செய்துகொள்ளுதல் நல்லது. முகப்புரையில் இருந்து ஏதேனும் ஓர் அம்சம், மிக நிச்சயமாக கேட்கப்படும். கவனம். முகப்புரையைத் தொடர்ந்து சாசனத்தின் ஷரத்துகள் (பிரிவுகள்) தொடங்குகின்றன. மொத்தம் 395 பிரிவுகள் உள்ளன. 395 பிரிவுகளும் 22 பாகங்களாகத் தரப்பட்டுள்ளன. இவற்றுள், முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம். 

பாகம் - I. ஷரத்து 1 முதல் 4 வரை கொண்டது. இதன் தலைப்பு: ‘ஒன்றியமும் அதன் எல்லைகளும்’  (THE UNION AND ITS TERRITORY). சாசனத்தின் முதல் ஷரத்து (Article – 1), ஒரு ஒற்றை வரி வாசகம். “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் ஆகும்.” இந்தியாவுக்கு நமது சாசனம் கூறும் இன்னொரு பெயர் என்ன…? நாமாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ‘பாரதம்’ என்கிற பெயர் நினைவில் நிற்கும். 

சரி… முதல் ஷரத்து சொல்கிற செய்தி என்ன…? 

இந்தியா என்பது, பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இயங்குகிற ஒரு ஒன்றியம். அதாவது, மாநிலங்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்த தேசத்தை நிர்மாணிக்கின்றன. சாசனத்தின் முதல் வரியே இதுதான். இதில் இருந்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு நமது அரசமைப்புச் சட்டம் எத்தனை முக்கியத்துவம் தருகிறது என்பது தெளிவாகிறது. எந்தப் பாடம் படித்தாலும், அவ்வப்போது, அதில் இருந்து என்ன கேள்வி வரும் என்று சுயமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம் மட்டும் வந்துவிட்டால் பிறகு, கடைகளில் விற்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள் பக்கம் போகவே மாட்டோம். 2-வது, 3-வது பிரிவுகள், புதிதாக ஒரு மாநிலத்தை தோற்றுவிப்பது பற்றிப் பேசுகின்றன. இதில் இருந்து என்ன தெரிகிறது…? புதிது புதிதாக, எங்களுக்குத்  ‘தனி மாநிலம் வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழுகின்றன அல்லவா…? இவை யெல்லாம், தேச விரோத முழக்கங்கள் அல்ல; அரசமைப்புச் சட்டமே, சிறு மாநிலங்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. ஒரு சிலர்தாம், தமது அதிகார பலம் குறைந்துபோய் விடக் கூடாது என்பதற்காக, அதிகாரப் பரவலுக்கு எதிராக, ’தனி மாநிலம்’ கோரிக்கையை ஆபத்தானதாகப் பார்க்கின்றனர். இதற்கு மேல் போனால் அரசியல் ஆகி விடும். நமக்கு அது வேண்டாம். 

சமீபத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து ‘தெலங்கானா’ பிறந்தது. இது, சாசனத்தின் பிரிவு 2 & 3-ன் படியே சாத்தியம் ஆனது. பிரிவு 4, புதிய மாநிலம் தோன்றியதை ஒட்டி,  இந்திய மாநிலங்களின் பட்டியலில் அதாவது அட்டவணையில் மாற்றம் செய்ய அதிகாரம் வழங்குகிறது.  இத்துடன் பாகம் I நிறைவடைந்து விட்டது. 

அடுத்து, பாகம் II.  தலைப்பு – ’குடியுரிமை’. (CITIZENSHIP) இதில், பிரிவு 5 முதல் 11 வரை, 7 பிரிவுகள் உள்ளன. ஒருவன், இந்தியன் என்கிற குடியுரிமை எவ்வாறு பெறுகிறான்…? சாசனத்தின் இரண்டாம் பாகம் விளக்குகிறது. பிரிவு 5-ன் படி, இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே. அதாவது, பிறப்பின் மூலம் (by birth) ஒருவருக்கு, இந்தியக் குடியுரிமை கிடைக்கிறது. ஒருவரின் தாயோ தந்தையோ இந்தியக் குடிமகனாக இருந்தாலும் இந்தியக் குடிமகன் ஆகலாம். அதாவது, ஒருவர் பிறந்தது, இந்தியாவுக்கு வெளியே. ஆனால், அவரது தாய் (அ) தந்தை (அ) இருவருமே இந்தியர் எனில், இவரும் இந்தியக் குடிமகன் ஆவார். இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு சாசனம் அனுமதிக்கவில்லை. அதாவது, ஒருவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை, தானாக விரும்பி, கேட்டுப் பெற்றால், இந்தியக் குடிமகன் என்கிற தகுதியை இழந்து விடுவார். (பிரிவு 9) குடியுரிமைப் பற்றி அடிக்கடி கேட்கப்படுகிறது. ஆகவே, நன்கு மனதில் பதிய வைத்துக்கொள்ளவும். 

தொடர்ந்து வருவது – பாகம் III. இந்திய அரசமைப்பு சட்டத்தின் இதயம் – பாகம் 3 தான். எல்லா மேடைகளிலும் எல்லாத் தளங்களிலும் எல்லா மட்டங்களிலும் காரசாரமாக விவாதிக்கப்படுகிற விஷயம் – பாகம் 3. பிரிவு 12 தொடங்கி பிரிவு 35 வரை, 24 பிரிவுகள் கொண்ட, அதிமுக்கியமான இந்த மூன்றாம் பாகத்தின் தலைப்பு….?  “அடிப்படை உரிமைகள்”! இது பற்றி நாளை பார்க்கலாம்.  கடந்த பத்து நாள்களாக தினமும் 10 கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தீர்கள்.. இன்று முதல் ஒவ்வொரு பாடத்தையும் விரிவாகப் படிப்பதால் இனி 20 கேள்விகளுக்குப் பதிலளிக்க இருக்கிறீர்கள். ரெடி ஸ்டார்ட்!

எளிமையோ எளிமை : மாதிரித் தேர்வு 11

 

loading...

 

இந்தத் தொடரின் மற்ற பாகங்களைப் படிக்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement