Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ச்சைக்குரிய கேள்விகள் வரும்போது இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்! - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 14 : நமக்கென்று சில கடமைகள்!

இந்திய அரசமைப்பு சட்டம் பாகம் IV-A, அடிப்படைக் கடமைகளைப் பட்டியல் இடுகிறது. ஒரு ஜனநாயகக் குடியரசு, மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும்; எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை தர வேண்டும் என்று பாகம் IV கூறுவதைப் பார்த்தோம். அரசுக்கு மட்டும்தான் பொறுப்புகள் இருக்க முடியுமா என்ன…? ஒவ்வொரு குடிமகனுக்கும் கூட இதே போன்று சில கடமைகளை வரையறுக்கிறது அரசியல் சாசனத்தின் பிரிவு (Article) 51A. அவை என்ன…? 

a) அரசமைப்பு சட்டம், தேசியக் கொடி, மற்றும் தேசிய கீதத்தை மதித்து நடத்தல்; 

b) நமது சுதந்திரப் போராட்டத்தின் உன்னத நோக்கங்களைப் பின்பற்றுதல்; 

c) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்;

d) தேசத்தைக் காக்க அழைப்பு விடுக்கப்படும்போது, தேசத்துக்காக சேவை ஆற்றுதல்; 

e) மதம், மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி, சகோதரத்துவம் வளர்த்தல்; மகளிரை சிறுமைப் படுத்தும் காரியங்களை விட்டொழித்தல்; 

f) நமது வளமான கலாச்சாரத்தைக் கட்டிக் காத்தல்; 

g) காடுகள், ஏரிகள், ஆறுகள், மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்; உயிரினங்களின் மீது கருணை காட்டுதல்; 

h) மனித நேயம், அறிவியல் அணுகுமுறை, சீர்திருத்த சிந்தனை ஆகியவற்றை வளர்த்தல்; 

i) வன்முறையை விட்டொழித்தல்; பொது சொத்துக்களைக் காத்தல்; 

j) தனிமனித, கூட்டுத் திறன்களை வளர்த்தல்; 

k) பெற்றோர் / காப்பாளராக, 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, கல்வி அளித்தல். 

மேற்சொன்ன 11 அம்சங்களும் அடிப்படைக் கடமைகள் ஆகும். ஒருமுறை படித்து வைத்துக் கொண்டால் போதும். அவ்வப்போது இந்தப் பகுதியில் இருந்து கேட்கப் படுகிறது. இதிலே நான்காவது அம்சம், ‘தேசத்தைக் காக்க அழைப்பு’ பற்றிச் சொல்கிறது. பொதுவாக இதைப் படிக்கிற யாருக்குமே, ஏதோ எல்லையில் இருந்து கொண்டு எதிரிகளுடன் சண்டை இடக் கூப்பிடுவார்கள் போல் இருக்கிறது என்றுதான் தோன்றும். உண்மையில் சாசனம் குறிப்பிடுகிற கடமை, அதையும் தாண்டிப் புனிதமானது. 

பொருளாதார அழைப்பாக ஏன் இருக்கக் கூடாது..? 

பண மதிப்பு நீக்கத்தின் போது பிரதமர், நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் அல்லவா…? ‘தற்காலிக சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னால், அதுவும் ஓர் அழைப்புதான். இதனை யாரும் அரசியலாகப் பார்க்க வேண்டாம். சாசனம் பட்டியல் இடுகிற கடமைகளில் இது வருமா…? போட்டித் தேர்வில் நாம் என்ன பதில் தர வேண்டும்..? இந்த நோக்கத்துக்காக மட்டுமே இந்த உதாரணம். மற்றபடி எவருடைய அபிப்பிராயம், கருத்தையும் மாற்றுவதற்காக அல்ல. 

அரசுப் பணிக்கான  போட்டித் தேர்வுகள் எழுதும் போது, அரசு சார்பு நிலை எடுப்பது, நல்லது. கவனிக்கவும்; அரசியல் சார்பு அல்ல. அரசு சார்பு. இதுதான் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். தேர்வராக இந்தக் கேள்விக்கு என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மட்டும் மனதில் கொண்டு விடை தரவும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தேர்வில் வெளிப்படுத்த வேண்டாம். இது அறிவுரை அல்ல; இதுதான் தேர்வு எழுதுகிற வழிமுறை.

பொதுவாக சர்ச்சைகளுக்கு இடம் தருகிற வினாக்கள், எந்தப் போட்டித் தேர்விலும் கேட்கப்படுவது இல்லை. ஒரு வேளை அப்படி எதுவும் வந்தால், அரசு நிர்வாகத்துக்கு சாதகமான பதிலைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித் தனம். சாதி, மதம், மொழி, இனப் பாகுபாடுகளை ஆதரித்து வினாவோ, விடையோ இருக்கவே இருக்காது. விடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது, இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 

உதாரணத்துக்கு, ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப் பட்டதற்கு காரணம் – அ) தெலங்கானா சுரண்டப் படுவதைத் தடுக்க; ஆ) ஆந்திராவின் கலாச்சாரம் தெலங்கானா மண்டலத்துக்கு மாறுபட்டது; இ) தெலங்கானாவின் வேலை வாய்ப்பு ஆந்திரப் பகுதிக்கே செல்வதால்; ஈ) தெலங்கானா உருவாவதால் இரு மண்டலங்களுக்கும் சிறந்த நிர்வாக வசதி கிடைக்கும். சரியான விடை என்று ஏதேனும் இருந்தாலும், இங்கே அது தேவை இல்லை; ஏற்றுக் கொள்ளக் கூடியது எது…? அதுதான் முக்கியம். முதலில் உள்ள மூன்றும் எதிர்மறைத் தகவல்களாக உள்ளன. கட்டாயம் நிராகரிக்கப் பட வேண்டும். ஆகவே, நான்காவதாய்ச் சொன்னதுதான் விடையாக இருக்க முடியும். 

பொதுப் பாடத் தாளில் கணிதம் அறிவியல், சரித்திரம், பூகோளம் ஆகிய பாடங்கள் இருந்தாலும், அரசமைப்பு சட்டம், நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) ஆகிய இரண்டு பிரிவுகள் மட்டும், இங்கே சற்றே விரிவாகத் தரப்படும். காரணம்..? இவ்விரு பிரிவுகளையும் அநேகம் பேர், பள்ளிப் பாடங்களிலே படித்து இருக்க வாய்ப்பு இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு,  ‘சாசனம்’, பாடத் திட்டத்தில் இடம் பெறவே இல்லையே…! பிறகு எப்படிப் படித்து இருக்க முடியும். நடப்பு நிகழ்வுகள், இன்னமும் கூட, பள்ளிப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. இவை புதிய பகுதிகள் என்பதால் சில அத்தியாயங்கள் ஒதுக்குகிறோம். இதனை வாசிக்கிற அதே நேரத்தில், பள்ளிப் பருவத்தில் ஏற்கனவே பயின்ற, நன்கு பரிச்சயமான, கணிதம், அறிவியல், வரலாறு, புவிய்இயல் மற்றும் மொழிப் பாடங்களைத் தவறாமல் படித்துக் கொண்டு வரவும். 

அரசியல் சாசனம் பகுதியில் அடுத்தடுத்து பல முக்கியமான பகுதிகளைப் பார்க்க இருக்கிறோம். அதனோடு தொடர்புடைய, அல்லது சற்றே விலகி நிற்கிற வினாக்கள் நாள்தோறும் தரப்படுகின்றன. எல்லாக் கேள்விகளையும் முயற்சிக்கவும். குரூப்4 தேர்வுக்குப் பயன்படுகிற, ‘எதிர்பார்க்கப்படுகிற’ கேள்விகளாகப் பார்த்துப் பார்த்து, வழங்கப்படுகின்றன. 

பயிற்சி – பயன் தரும். இனி…. மத்திய, மாநில அரசுகள். அதுகுறித்து நாளை பார்க்கலாம். இதற்கு முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க!

நீந்திப் பழகுவோம் - மாதிரித் தேர்வு 14

loading...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ