Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசுத் தலைவர் பதவி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 15:  தில்லி தர்பார்! 

அரசியலமைப்பு சட்டத்தின் பாகம் V – மத்திய அரசு பற்றியது. சாசனத்தின் மிக நீண்ட பாகம் இதுதான். பிரிவு (Article) 52 முதல் 151 வரை 100 பிரிவுகள் கொண்டது. இந்த பாகத்துக்குள் 5 அத்தியாயங்கள் உள்ளன.

பாகம் V அத்தியாயம் I. நிர்வாகம் (The Executive)

பிரிவு 52 – ”இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் இருப்பார்” என்கிறது. “There shall be a President of India.” இதற்கு என்ன பொருள்…? பிரதமர் என்று ஒருவர், சிறிது காலத்துக்கு, இல்லாமற் போகலாம்; ஆனால், குடியரசுத் தலைவர் எந்நாளும் இருந்தே ஆக வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழ்நிலையில், மைய அரசில் குழப்பமான சூழல் காரணமாக, பிரதமர் பதவி காலியாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி, அமலுக்கு வரலாம். அது போன்ற சமயங்களில், குடியரசுத் தலைவர் வசமே அரசு நிர்வாகம் மொத்தமும் இருக்கும்; இயங்கும். அதாவது பிரதமரின் பணிகள், பொறுப்புகள், அதிகாரங்களை (தற்காலிகமாக) குடியரசுத் தலைவர் வகிக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் பொறுப்புகளை, ஒரு குடியரசுத் தலைவர்தான் வகிக்க முடியும். அசாதாரண சூழலில், ‘உடனடியாக’, அப்போதே, அன்றைக்கே, யாரேனும் ஒருவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டாக வேண்டும். நாட்டின் நிர்வாக அதிகாரம், குடியரசுத்தலைவர் வசமே இருக்கும். “The executive power of the Union shall be vested in the President.” இந்த அதிகாரத்தை அவர் நேரடியாகவோ, அலுவலர்கள் மூலமாகவோ, அரசமைப்பு சட்டத்தின் படி, பயன்படுத்துவார். [பிரிவு 53 (1)]ஒன்றியத்தின் (தேசத்தின்) பாதுகாப்புப் படைகள் (ராணுவம்) மீதான ‘சுப்ரீம் கமாண்ட்’ (Supreme Command) குடியரசுத் தலைவருக்கே உண்டு. {பிரிவு 53 (2)}

Rastrapathi Bhavan

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்து எடுக்கப் படுகிறார்? பிரிவு 54 விளக்குகிறது. தேர்தல் குழுமம் (electoral college) குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. இக்குழுமத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்…? நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். (elected members of both Houses of Parliament); மற்றும்            மாநில சட்டசபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். (elected members of the Legislative Assemblies of the States). நாடாளுமன்றத்தின் இரு அவைகள் – மக்களவை & மாநிலங்களவை. (Lok Sabha & Rajya Sabha). தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ‘மட்டுமே’ வாக்களிக்கலாம். அதாவது, நியமன உறுப்பினர்கள் (nominated members) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இயலாது. 

நன்றாக நினைவில் கொள்ள வேண்டியது – அமெரிக்க ஜனாதிபதி போன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவது இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள மக்கள் பிரதிநிதிகள்தாம் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்து எடுக்கிறார்கள். அதாவது, மறைமுகத் தேர்தல் (indirect election) மூலம் நமது ஜனாதிபதி தேர்வாகிறார். 

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறையை இன்னும் விளக்கமாக சொல்கிறது பிரிவு 55.வாக்குரிமையில் அனைத்து மாநிலங்களுக்கும் இயன்றவரையில் சீர்மை (uniformity) இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை மீண்டும் 1000ஆல் வகுத்தால் கிடைப்பதுதான் அந்த உறுப்பினரின் வாக்கு மதிப்பு. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகள் – 234. நமது மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 10 கோடி என்று கொள்வோம். 10 கோடியை, 234ஆல் வகுத்து, வருவதை 1000ஆல் வகுத்து வருவதுதான், தமிழக சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு. சட்டமன்றத்தின் மொத்த 234 உறுப்பினர்களின் வாக்கு மதிப்பை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான், நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு. குழப்பமாக இருந்தால், ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளவும். 

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். (பிரிவு 56) ஒருமுறை இப்பதவி வகித்தவர், மீண்டும் தேர்ந்தெடுக்கப் படலாம். பிரிவு 57 இதனை அனுமதிக்கிறது. குடியரசுத் தலைவர் ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்…? மூன்று தகுதிகளை, பிரிவு 58 பட்டியல் இடுகிறது. 

a) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். (citizen of India)

b) 35 வயது நிறைவு அடைந்து இருக்க வேண்டும்;

c) மக்களவைக்கு (House of the People) தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்று இருக்க வேண்டும். 

கவனத்தில் கொள்ளவும் – மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்க வேண்டியது இல்லை; தேர்ந்தெடுக்கப் படுவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும். குடியுரிமை, வயது ஆகிய இரு தகுதிகள்தான் இதற்கும் முக்கியமானவை. எந்த அவையிலும் உறுப்பினராக இருப்பவர், குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிக்க முடியாது. அப்படி ஏதும் உறுப்பினராக இருந்தால், குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கு முன்பாக, உறுப்பினர் பதவியை விட்டு விட வேண்டும். (பிரிவு 59) 

குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அல்லது அவர் இல்லாத போது, உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த (senior most) நீதிபதி  ‘முன்னிலையில்’ பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார். (“make and subscribe in the presence of the Chief Justice of India or, in his absence, the seniormost Judge of the Supreme Court available”) பல புத்தகங்களில், ’குடியரசுத் தலைவருக்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்?’ என்று கேட்டு, பதிலும் தரப் பட்டு இருக்கிறது. அரசமைப்பு சட்டம் பிரிவு 60இன் படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது மிக மூத்த நீதிபதி ‘முன்னிலையில்’ (in the presence of) என்றுதான் தரப்பட்டு இருக்கிறது. அதாவது அவருக்கு அவரே எடுத்துக் கொள்வார் என்று பொருள். இது பற்றிய கேள்வியை நாமும் (தவறுதலாக) தந்து இருக்கிறோம். ஏன்….? வேறொன்றுமில்லை. தேர்வுகளில் கூட பல முறை தவறாகத்தான் கேட்கப் படுகிறது!!! அதுதான் காரணம்.

குரூப்4 தேர்வுக்கு மிகவும் முக்கியமான பகுதி இது. ஆழமாகப் படித்து வைத்துக் கொள்ளவும். பாகம் V - நாளையும் தொடரும். முந்தைய பாடங்களை படிக்க இந்த லிங்க்கைக் க்ளிக் பண்ணுங்க!

நீந்திப் பழகுவோம்!

loading...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement