அமைச்சர் முதல் அட்டர்னி ஜெனரல் வரை.. பதவிகள் குறித்து அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 16 : தொடர்கிறது தில்லி தர்பார்! 

‘அரசமைப்பு சட்டம் பற்றி இத்தனை விஸ்தாரமாகப் படிக்க வேண்டுமா..? அவசியம்தானா…? ‘பயன்’ தருமா…? ஆமாம். ஆமாம். ஆமாம். 

போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்கிற ஒவ்வொருவரும் நன்கு படித்து, மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய பகுதி – அரசியல் சாசனம்.  குரூப்4 தேர்வுக்கு ‘அப்பாலும்’ மிகுந்த பயன் தருகிற ஒரு சில பகுதிகளில் இதுவும் ஒன்று. பாடப் புத்தகங்கள், வழிகாட்டிப் புத்தகங்கள், நாளிதழ்களின் ‘கேள்வி - பதில்’ பாணி குறிப்புகள், அரசமைப்பு சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ள உதவாது. பிரிவு (Article) வாரியாக ஒவ்வொரு பாகமாகப் பார்த்தே ஆக வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். தேர்வுக்கு முன்னதாக (பிப் 11) சாசனம் முழுவதையும் படித்து முடித்து விடலாம். 

Rastrapthi bhavan

சரி. பாகம் V. அத்தியாயம் I. நிர்வாகம் (The Executive). தொடர்ந்து, முக்கியமான சில பிரிவுகளைப் பார்ப்போம்.  பிரிவு 65 முதல் 71 வரை – துணைக் குடியரசுத் தலைவர் பற்றியது. துணைக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? பிரிவு 66 விளக்குகிறது. 

1) நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களால், 

2) விகிதாச்சார பிரதிநிதித்துவ (Proportionsl Representation) அடிப்படையில்,

3) ஒற்றை மாற்றத்தக்க வாக்கு (single transferable vote) மூலம்,

4) ரகசிய வாக்கெடுப்பு (secret ballot) முறையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார். 

துணைக் குடியரசுத் தலைவர்தான், மாநிலங்களவையின் தலைவர். இது, ex-officio பதவி ஆகும். அதாவது, பதவியை வைத்துதான் இந்தப் பொறுப்பு. அந்த நேரத்தில், துணைக் குடியரசுத் தலைவராக யார் இருக்கிறாரோ, அவரே மாநிலங்களவை (Rajya Sabha) தலைவர் ஆவார். குடியரசுத் தலைவர் அல்லது அவரால் நியமிக்கப் படும் ஒருவர் முன்பாக, துணைக் குடியரசுத் தலைவர் பதவி ஏற்றுக் கொள்வார். சென்ற அத்தியாயத்தில் சொன்னதுதான். இன்னார் ‘முன்னிலையில்’ பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்றுதான் சாசனம் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில், யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்? என்றுதான் கேட்கப் படுகிறது. நினைவிருக்கட்டும். 

நீதிமன்றத்தால் (மரண) தண்டனை வழங்கப்பட்டருக்கு, கருணை அடிப்படையில் தணடனைக் குறைப்பு செய்கிற அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. (பிரிவு 72). அமைச்சரவை குறித்துச் சொல்கிறது பிரிவு 74. அமைச்சரவையை சாசனம், ‘அமைச்சர் குழு’ (Council of Ministers) என்றுதான் விளிக்கிறது. ‘கேபினெட்’ (Cabinet) என்கிற சொல் அல்ல. பிரதமர் தலைமையில் அமைச்சர் குழு, குடியரசுத் தலைவருக்கு அறிவுரை தந்து உதவும். பொதுவாக, அமைச்சரவை கூறுவதைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வார். சமயங்களில், அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, குடியரசுத் தலைவர் கேட்கலாம். மறுபரிசீலனைக்குப் பிறகும், தனது முடிவில் அமைச்சரவை தீர்மானமாக இருந்தால், குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தந்து விடுவார். 

பிரிவு 75, அமைச்சரவை குறித்த பல விவரங்களைக் குறிப்பிடுகிறது.பிரதமர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார். (The Prime Minister shall be appointed by the President.) பிரதமரின் ஆலோசனையின் பேரில், பிற அமைச்சர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார்கள். மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், 15%க்கு மிகாமல் அமைச்சரவை இருக்கும். மக்களவையில், அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அதாவது ஓர் அமைச்சர் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று சொல்ல இயலாது. ‘அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு’ (collective responsibility of Council of Ministers) இந்திய அரசின் சிறந்த அம்சம். 

ஒரு அமைச்சர், சேர்ந்தாற்போல் 6 மாதங்களுக்கு, நாடாளுமன்றத்தில் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லையென்றால், அவர் அமைச்சராக நீடிக்க முடியாது. இதையே இப்படியும் சொல்லலாம். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமலே கூட அமைச்சர் ஆகலாம். ஆனால் பதவி ஏற்ற 6 மாதங்களுக்கு உள்ளாக, மக்களவை (அ) மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக வேண்டும்.  

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (‘அட்டர்னி ஜெனரல்’) பற்றிப் பேசுகிறது பிரிவு 76. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கத் தகுதி உள்ளவர், தலைமை வழக்கறிஞராக, குடியரசுத் தலைவரால், நியமிக்கப் படுவார். இந்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவது இவரது பணி. இவர், இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்ற நடவடிக்கையிலும் பார்வை இடலாம். (‘shall have right of audience’) அதாவது, ‘ஆடியன்ஸ்’ஆக கலந்து கொள்ளலாம். பிரிவு 78இன் படி, அமைச்சரவையின் முடிவுகளை, குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்பது, பிரதமரின் கடமை ஆகும். 

இத்துடன் பாகம் V, அத்தியாயம் I நிறைவுறுகிறது. அத்தியாயம் II – நாடாளுமன்றம். (Parliament) அதுகுறித்து நாளை விரிவாகப் பார்க்கலாம். இதுவரை வந்த பாடங்களில் எதையும் மிஸ் பண்ணலைதானே? TNPSC Group 4 பாடங்களின் மொத்த லிஸ்ட் இந்த லிங்க்கில் உள்ளது.

நீந்திப் பழகுவோம் - மாதிரித் தேர்வு 16

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!