மக்களவை.. மாநிலங்களவை.. அரசியலமைப்புச் சட்டம் எப்படி வரையறுக்கிறது? - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 17: நாடாளுமன்றம்

இந்திய அரசமைப்பு சட்டம். பாகம் V அத்தியாயம் II :நாடாளுமன்றம். 

பிரிவு 79: குடியரசுத் தலைவர், மற்றும், மாநிலங்களவை & மக்களவை என இரண்டு அவைகளை உள்ளடக்கியது நாடாளுமன்றம். 

பிரிவு 80: மாநிலங்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுக்கிறது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறவர்கள் 12 பேர் (நியமன உறுப்பினர்கள் – nominated members); மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக 238 பேர்; (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - elected members) ஆக மொத்தம் 250 பேர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை உறுப்பினர்கள் என்பதை, நான்காவது அட்டவணை (Fourth Schedule) குறிப்பிடுகிறது. இதன்படி, தமிழ்நாட்டுக்கு 18 உறுப்பினர்கள், மக்களவையில் உள்ளனர். அதிகபட்சமாக, உத்தரப் பிரதேசத்துக்கு 31 உறுப்பினர்கள். 

Parliment

நியமன உறுப்பினர்கள்: பிரிவு 80 (3) இன் படி,  குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக ( Rajya Sabha M.P.) நியமனம் செய்யப் படுபவர்கள், இந்த 4 துறைகளில் ஏதெனும் ஒன்றில், சிறப்பு அறிவு அல்லது செயல்முறை அறிவு பெற்றிருக்க வேண்டும்: இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை. கவனித்தீர்களா…? ‘விளையாட்டு’ இதில் இடம் பெறவில்லை. பிறகு எப்படி சச்சின் டெண்டுல்கர், ராஜ்ய சபா எம்.பி. ஆக முடிந்தது? ‘சமூகசேவை’ – அனைத்தையும் உள்ளடக்கியது. மக்களவை (Lok Sabha) உறுப்பினர் எண்ணிக்கை குறித்து சொல்கிறது பிரிவு 81. இதன்படி, மாநிலங்களில் இருந்து 530; யூனியன் பிரதேசங்கள் மூலம் 20; ஆக மொத்தம் 550 (மிகாமல்) மக்களவை உறுப்பினர்கள் இருக்கலாம். மாநிலங்களின் சட்டசபையைப் போன்றே, மக்களவையும் கலைக்கப்படலாம்(Dissolution). ஆனால், மாநிலங்களவையை (Rajya Sabha) கலைக்க முடியாது. அது தொடர்ந்து இயங்கும். மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம் – 6 ஆண்டுகள். மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பதவி ஓய்வு பெறுவர். மக்களவை உறுப்பினரின் பதவிக் காலம் – 5 ஆண்டுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு

1) இந்தியக் குடிமகனாக,                 

2) மாநிலங்களவைக்கு 30 வயது; மக்களவைக்கு 25 வயது, நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 

நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்துக்கும் அடுத்ததற்கும், 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. (பிரிவு 85) கூட்டத்தின் நிறைவு நாளில் இருந்து இது கணக்கிடப்படுகிறது. பொதுத் தேர்தலை அடுத்து வருகிற முதல் கூட்டம், ஓர் ஆண்டின் முதல் கூட்டம் ஆகியன, குடியரசுத் தலைவரின் உரையுடன்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின், கூட்டுக் கூட்டமாகத்தான் தொடங்கும். (Joint Session of both Houses of Parliament) (பிரிவு 87) அமைச்சராக இருக்கிறவர் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (Attorney – General) ஆகியோர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே பேசுவதற்கு உரிமை உண்டு. சாதாரணமாக, ஓர் அவையின் உறுப்பினர், அந்த அவையில்தான் பேசலாம்; ஆனால் ஓர் அமைச்சர், இரு அவைகளிலும் பேசலாம். அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமலும்கூட, அரசின் தலைமை வழக்கறிஞர், அவையில் பேச உரிமை உண்டு.

துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவையின் தலைவராகப் பதவி வகிப்பார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு, குடியரசுத் தலைவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். (பிரிவு 99) பொதுவாக, நாடாளுமன்றத் தீர்மானங்கள், பெரும்பான்மை ஓட்டு மூலம் நிறைவேற்றப்படும். ஓட்டுகள் சமமாகப் பிரியும்போது (மட்டும்) சபாநாயகர் வாக்களிப்பார். (பிரிவு 100) கூட்டம் நடத்துவதற்கான குறைந்தபட்ச வருகை (attendance) மொத்த உறுப்பினர்களில் 10-ல் ஒரு பாகம். (“the quorum to constitute a meeting of either House of Parliament shall be one-tenth of the total number of members of the House”) பிரிவு 100 (3). ஒரு வேளை அவையில் ‘கோரம்’ இல்லை என்றால், தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் அவைக்கு வரும் வரையில்,  சபாநாயகர் தற்காலிகமாக அவையைத் தள்ளி வைப்பார். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசும் எந்தப் பேச்சுக்காகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. 105 (2). இதுவே ஆங்கிலத்தில் ‘immunity of the member’ எனப்படுகிறது.

இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்தது எல்லாமே, தேர்வுக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். எல்லாத் தேர்வுகளிலும், தவறாமல் இடம் பிடிக்கிறது. ஆகவே, ஓரிரு முறை மீண்டும் படித்துப் பார்த்து, நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவும். ஆகவே… இப்போதைக்கு இது போதும். 

(முக்கிய குறிப்பு: i) பயிற்சிக் கேள்விகளில் முதல் பத்து, இந்த அத்தியாயத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை; ii) தமிழக அரசியல் சார்ந்த வினாக்கள், குரூப்-4 தேர்வை மனதில் கொண்டு தரப்பட்டுள்ளன. அகில இந்தியத் தேர்வுக்கு, பயன்படாமல் போகலாம்.)

நாளை பார்ப்போம். இந்த தொடரின் மற்ற பாடங்களைப் படிக்க விரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 17

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!