வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (13/01/2018)

கடைசி தொடர்பு:12:02 (13/01/2018)

மாநில அரசின் அதிகாரங்கள் என்னென்ன? பொதுப்பட்டியலில் என்னென்ன இருக்கிறது? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 19 : மாநில அரசின் அதிகாரங்கள்!

இந்தத் தொடரை முறையாகத் தொடர்ந்து படித்து வருகிறவர்களுக்கு, ஒரு கேள்வி நிச்சயம் எழுந்து இருக்கும். சாசனத்தின் 5ஆம் பாகம் முடிந்த பிறகு பாகம் VI, ‘மாநிலங்கள்’ அல்லவா வந்து இருக்க வேண்டும்…? அதை அப்படியே விட்டு விட்டு, அட்டவணைகள் ஏன் படிக்க வேண்டும்…? காரணம் இருக்கிறது. சாசனத்தின் பாகம் V முதல் XI முடிய (5 to 11) அத்தனையும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பற்றியது. இவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள, அட்டவணைகள் தந்துள்ள அதிகாரங்கள் என்னவென்று தெரிந்து இருந்தால் நல்லது. அவ்வளவுதான்.

இந்திய அரசமைப்பு சட்டத்துடன் இணைந்து 12 அட்டவணைகள் (Schedules) உள்ளன. இவற்றில் ஏழாவது அட்டவணை (Seventh Schedule), குரூப்4 தேர்வுக்கு, மிகவும் முக்கியமானது.அரசுத் துறைகள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன. இராணுவம், ரெயில்வே, விமான சேவை, அஞ்சல் சேவை ஆகியன மக்கள் சேவை (Public Service) செய்கிற துறைகள். வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆகியன மக்களிடம் இருந்து வரி வசூலித்து அரசுக்கு வருமானம் ஈட்டித் தருபவை. நெடுஞ்சாலைத் துறை, தகவல் தொடர்புத் துறை போன்ற ‘வ்அசதி நல்கும்’ (Facilitators) துறைகளும் உண்டு. 

தலைமைச் செயலகம்

மத்திய அரசின் கீழ் வரும் இத் துறைகளின் பட்டியலை ஏற்கனவே பார்த்தோம். இதே போன்று, மாநில அரசின் அதிகாரங்கள் / துறைகள் அடங்கிய பட்டியல்தான், 7ஆவது அட்டவணையின் பாகம் – II. முக்கியமான சில துறைகள் மட்டும் பார்ப்போம்: பொது அமைதி. அதாவது, சமூகக் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதும், சமுதாயத்தில் அமைதியை நிலை நாட்டுதலும், மாநில அரசின் பொறுப்பு. (To maintain public order and social harmony is the responsibility of the State Govt).இதனால், காவல்துறை, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதே போன்றே சிறைத் துறையும். (Police and Prisons come under the control of the State Govts.) உள்ளாட்சி அமைப்புகள் – கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை.  பொது சுகாதாரம். அரசு மருத்துவ மனைகள், இதன் கீழ் வரும்.

மதுபானத் தயாரிப்பு, கொள்முதல், விற்பனை. அதாவது, ‘டாஸ்மாக்’,  மாநில அரசின் கீழ் வருகிறது. அதனால்தான், மதுக் கடைகளை மூடுங்கள் என்று மாநில அரசைக் கோருகிறார்கள். இடுகாடு, சுடுகாடு முதலியன. பாலங்கள், உள்நாட்டு நீர் வழிகள், சாலைகள், தெருக்கள் முதலியன. (தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) இதில் வராது; மத்திய அரசுப் பட்டியலில் ஏற்கனவே பார்த்துள்ளோம்.) நூலகங்கள், அருங்காட்சியகங்கள் (Museums) முதலியன. சென்னையில், கன்னிமாரா நூலகமும் அருங்காட்சியகமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இரண்டுமே, மாநில அரசின் கீழ் வருவனதாம். விவசாயம். வேளாண் கல்வி, ஆராய்ச்சி, தாவரங்களைப் பூச்சிகளிடம் இருந்து காத்தல் ஆகியன. 

வாகன வரி. (நினைவிருக்கட்டும். வருமான வரி – மத்திய அரசு;  வாகன வரி – மாநில அரசு.)  தொழில் வரி. திரைப்படங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றின் மீதான கேளிக்கை வரி. முன்னர் விற்பனை வரி, மாநில அரசு வசம் இருந்தது. ‘ஜி.எஸ்.டி.’ வந்த பிறகு, மத்திய அரசின் கைக்குச் சென்று விட்டது.

பொதுப் பட்டியல்:

சில அதிகாரங்கள் / துறைகள், மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டின் கீழும் வரும். இந்தத் துறைகள் அடங்கிய பட்டியலே, ‘பொதுப் பட்டியல்’. (Concurrent List) இது, ஏழாம் அட்டவணையின் பாகம் – III என்னவெல்லாம் இருக்கின்றன..? 

குற்றவியல் சட்டம் (Criminal Law).  முன்னெச்சரிக்கைக் கைது (Preventive detention) யாராவது,பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துவார் என்று அரசு (காவல்துறை) கருதினால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யலாம். இந்த அதிகாரம், மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. விவசாய நிலமல்லாத பிற சொத்துகளை மாற்றுதல்; உணவுக் கலப்படத்துக்கு எதிரான நடவடிக்கை; (மத்திய. மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு) தொழிற்சங்கங்கள்; கல்வி; தொழிற்கல்வி, சட்டக் கல்வி, மருத்துவக் கல்வி. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். விலைவாசி கட்டுப்படுத்துதல்; மின்சாரம். காடுகள், காட்டு விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு.

பொதுப் பட்டியலில் உள்ளவை மத்திய அரசுத் துறையாகவோ அல்லது மாநில அரசுக் கட்டுப்பாட்டிலோ இருக்கலாம். உதாரணத்துக்கு, கல்வி. இது, பொதுப் பட்டியலில் உள்ளது. என்ன பொருள்…? மாநில அரசின் கீழும் படிக்கலாம்; (State Board) மத்திய அரசின் கீழும் படிக்கலாம். (Central Board) புரிந்ததுதானே…? சுகாதாரம் இப்படித்தான். மத்திய அரசும் மருத்துவ மனைகள் (CGHS) நடத்தலாம்; மாநில அரசும் வைத்து இருக்கலாம். நம் மாநிலத்தில் உள்ள பொது மருத்துவ மனைகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.

அன்றாடம் நாம் பார்க்கும் பல அரசு அலுவலகங்களில் எவையெவை மாநில அரசு அலுவலகங்கள்…? எவையெல்லாம் மத்திய அரசுத் துறைகள்…? தெளிவாகப் பட்டியல் இடுகிறது – அட்டவணை 7. மூன்று பட்டியல்களையும் ஓரிரு முறை நன்கு படித்து வைத்துக் கொள்ளவும்.  குரூப்4 தேர்வில் ‘எதிர்பார்க்கப்படும்’ பகுதிகளில் இதுவும் ஒன்று. 

அட்டவணை – 8.- மொழிகள். 

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் – 22. இவற்றைப் பட்டியல் இடுகிறது எட்டாவது அட்டவணை. (Eighth Schedule).  ஆங்கில அகர வரிசைப் படி (in the alphabetical order) மொழிகள், இப்பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றன. அட்டவணை காட்டும் 22 மொழிகள் என்னென்ன…? அசாமீஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மிரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா. பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சன்தாலி, சிந்தி, தமிழ், தெலுகு மற்றும் உருது. இதன் பிறகு வருகிற 9,10,11 மற்றும் 12ஆவது அட்டவணை, குரூப்4 தேர்வுக்கு முக்கியமில்லை. 

அட்டவணைகள் பார்த்து விட்டோம். நாளை மீண்டும், அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்குச் செல்வோம். பாகம் – VI. மாநிலங்கள்!. இதற்கு முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.

(குறிப்பு: சிலருக்கு ஓர் ஐயம் வரலாம். மாதிரி வினாக்களில் சில, மிகவும் எளிமையாக இருக்கின்றனவே… அதுவும் ஒருவரைப் பற்றிய கேள்விகளே மீண்டும் மீண்டும் வருகின்றனவே… இது சரிதானா…? ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். குரூப்4 தேர்வில், எளிமையான வினாக்கள், கணிசமாகக் கேட்கப் படுகின்றன. எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணா போன்ற சிலரைப் பற்றி, மாதிரி வினாக்கள் அதிகம் வருவதற்குக் காரணம் – வரவிருக்கும் குரூப்4 தேர்வில், இவை கட்டாயம் இடம் பிடிக்கும் என்கிற எதிர்பார்ப்புதான். மற்றபடி, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டுப் படிக்கவும்.) 

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 19

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்