வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (16/01/2018)

கடைசி தொடர்பு:12:25 (16/01/2018)

மசோதாக்கள் நிறைவேற்றுவதில் நாடாளுமன்ற நடைமுறைகள் என்ன? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 20 : நாடாளுமன்றம்

அரசமைப்புச் சட்டத்தின் பாகம் V மிக நீண்டது.  இப்பகுதி, குடியரசுத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை, நாடாளுமன்ற விதிகள்... என்று பலவற்றை வரையறுத்துச் சொல்கிறது.  நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்த மட்டில், சில பிரிவுகளை முன்பின்னாகப் படித்தால்தான் எளிதில் புரியும். 

‘நாடாளுமன்றத்தில் பண மசோதா’ (Money Bill in the Parliament) குறித்து அடிக்கடி கேட்கப்படுகிறது. சரி, பண மசோதா என்பது எது? பிரிவு 110 சொல்கிறது: 

a) வரி விதிப்பு, வரி நீக்கம், வரியில் மாற்றம், வரிச் சீர்திருத்தம்

b) இந்திய அரசு வாங்குகிற கடன் தொடர்பானவை

c) இந்திய அரசின் தொகுப்பு நிதியம் (Consolidated Fund) தொடர்பானவை. 

பண மசோதா, நாடாளுமன்றத்தில் மக்களவையில் மட்டுமே கொண்டுவர முடியும். மாநிலங்களவையில், ‘பண மசோதா அறிமுகப் படுத்தப்படாது’ என்கிறது, பிரிவு 109 (1). ஒரு மசோதா, பண மசோதாவா இல்லையா என்கிற கேள்வி எழுகிறபோது, மக்களவை சபாநாயகர் எடுக்கிற முடிவே இறுதியானது. 109 (3) மாநிலங்களவைக்கு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பண மசோதாவிலும், ‘இது பண மசோதான்’ என்று மக்களவை சபாநாயகர் சான்றிதழ் அளிக்க வேண்டும். 109 (4). (நினைவிருக்கட்டும். பிரிவு 110-க்குப் பிறகு 109-க்கு வந்துள்ளோம்.) 

மக்களவையில் (Lok Sabha) நிறைவேற்றப்படும் பண மசோதா, மாநிலங்களவைக்கு (Rajya Sabha) அனுப்பப்படுகிறது. அங்கு, மசோதா பெறப்பட்ட 14 நாள்களுக்கு உள்ளாக, தனது பரிந்துரைகளுடன் மக்களவைக்கு திருப்பி அனுப்பியாக வேண்டும். பண மசோதாமீது மாநிலங்களவை கூறும் பரிந்துரைகளை மக்களவை ஏற்கலாம்; ஏற்காமலும் போகலாம். 109 (2) ஒருவேளை பண மசோதாவை 14 நாள்களுக்குள் மாநிலங்களவை, திருப்பி அனுப்பாவிட்டால், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாகக் கொள்ளப்படும். பிரிவு – 109 (5) பண மசோதா அல்லாத பிற மசோதாக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எந்த அவையிலும் கொண்டுவரப்படலாம். பிரிவு – 107 (1)

எந்தவொரு மசோதாவையும், நாடாளுமன்றம் நிறைவேற்றியாக வேண்டும்; ‘நிறைவேற்றப்பட்டதாக’க் ‘கருத’ முடியாது. (shall be passed; shall not be deemed to have been passed) அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு (அ) ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அன்றி, நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. (இது, நாம் தருகிற விளக்கம்; சாசனத்தில் இல்லை) ஒரு மசோதா, மக்களவையில் நிறைவேறவில்லை; மாநிலங்களவையிலும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஒரு வேளை மக்களவை கலைக்கப்பட்டுவிட்டால்? மாநிலங்களவையில் உள்ள மசோதா உயிரோடே இருக்கும்; காலாவதி ஆகாது. பிரிவு 107 (4).

இதுவே, ஓர் அவையில் நிறைவேறிவிட்டது; மற்றோர் அவையில் நிறைவேறவில்லை. அல்லது, ஆறு மாதங்களுக்கும் மேலாக,  நிலுவையில் இருக்கிறது. அப்போது?  குடியரசுத் தலைவர், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்கு (Joint sitting of both the Houses) அழைப்பு விடுப்பார். இங்கு, மசோதா ஓட்டுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். பிரிவு 108 (1) பண மசோதாவுக்கு இது பொருந்தாது. மாநிலங்களவை, தனது பரிந்துரைகளை மட்டுமே மக்களவைக்கு அளிக்க முடியும்; அவற்றை முற்றிலுமாக நிராகரித்தும்கூட, மக்களவை பண மசோதாவை நிறைவேற்றி அனுப்பலாம். என்ன புரிகிறது..? மாநிலங்களவை, ‘அறிவுரை’ மட்டுமே கூற முடியும். இந்தப் பரிந்துரைகள், மக்களவையைக் கட்டுப்படுத்தாது. (ஒரு குடும்பத்தில், மூத்தவர்கள் / முதியவர்கள், இளையவர்களைப் பார்த்துக் கூறுவது போலத்தான் இது. இதனால்தான், மக்களவையை ‘House of Elders’ என்கிறோமோ?)

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, குடியரசுத்தலைவரின் அனுமதிக்கு, முன் வைக்கப்படுகிறது. அவர், அதற்கு அனுமதி அளிக்கலாம்; அல்லது, தன் அனுமதியை நிறுத்தியும் வைக்கலாம். பிரிவு 111.  ஒரு மசோதாமீது, குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க, அரசமைப்புச் சட்டம், காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை. ‘இயன்றவரை விரைவில்’ (‘as soon as possible’) என்று மட்டுமே கூறுகிறது. ஆனால், பண மசோதாவுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது. அதாவது, தன் முன் வரும், பண மசோதாவை குடியரசுத்தலைவர், உடனுக்குடன் ஒப்புதல் அளித்து அனுப்புவார். குடியரசுத் தலைவர், சில மாற்றம் கோரி திருப்பி அனுப்புகிற மசோதாவை, நாடாளுமன்ற அவைகள், மாற்றங்களை ஏற்றோ, ஏற்காமலோ நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கும்.  இம்முறை, குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை வழங்குவார். அதாவது, இரண்டாவது முறை மாற்றங்கள் கேட்டு, மசோதாவைத் திருப்பி அனுப்ப, சாசனம் வாய்ப்பு அளிக்கவில்லை.

பிரிவு 112 முதல் 117 வரை - ‘ஆண்டு நிதிநிலை அறிக்கை’ (Annual Budget). தொகுப்பு நிதியம் மீதான செலவுகள், ஓட்டுக்கு விடப்பட மாட்டாது. (‘expenditure charged upon the Consolidated Fund of India shall not be submitted to the vote of Parliament’) பிரிவு 113 (1) நிதிப் பங்கீட்டு மசோதா (Appropriation Bills), தனியே அறிமுகப்படுத்தப்படும். அதாவது, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்று இனம் / துறை பிரித்து, அவையின் முன் வைக்கப்படும். இந்த நிதி ஒதுக்கீடு (appropriation) நிறைவேற்றப்பட்டால் அன்றி, தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி எடுக்க முடியாது. பிரிவு 114 (3) சிறப்பு வரவு (credit) மானியம் (grant) ஒதுக்கீடுசெய்கிற ‘vote on account’ வாய்ப்புக்கு வகைசெய்கிறது பிரிவு 116.  நிதிநிலை அறிக்கைமூலம் அல்லாது, தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி எடுக்க இந்தப் பிரிவு உதவுகிறது.  

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டில், முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசு தாக்கல்செய்வதே சிறந்தது. ஆகவே, இடைப்பட்ட காலத்துக்கு இடைநிலை அறிக்கை (Interim Budget) அல்லது ‘vote on account’ மூலம், தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி எடுத்துக்கொள்ள, பிரிவு 116 உதவுகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்கு (‘joint sitting of the two Houses’) மக்களவை சபாநாயகர் அல்லது அவர் நியமிக்கும் ஒருவர் தலைமை வகிப்பார். பிரிவு 118 (4) இரு அவைகளும் சேர்ந்து கூடும் போது, யார் சபாநாயகராக இருப்பார்..? என்கிற கேள்விக்கு, இந்த உட்பிரிவு விடை அளிக்கிறது.

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள், இந்தி அல்லது ஆங்கிலத்தில்  நடைபெறும். பிரிவு 120. இந்தி (அ) ஆங்கிலத்தில் போதுமான அளவுக்கு வெளிப்படுத்த இயலாத உறுப்பினர், தனது தாய்மொழியில் பேச, அவைத்தலைவர் அனுமதிக்கலாம். 120 (1). சாசனம் நடைமுறைக்கு வந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இதற்கு மாறாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றினால் அன்றி, ‘அல்லது ஆங்கிலத்தில்’ என்கிற பகுதி, நீக்கப்பட்டதாகக் கருதப்படும் என்கிறது பிரிவு 120 (2) (குறிப்பு: சாசனம், பிரிவு 120 சொல்வதை அப்படியே தந்துள்ளோம். ‘மொழி’ விஷயத்தில், நம்முடைய விளக்கம் / நிலைப்பாடு எதுவும் இங்கு தரப்படவில்லை.) 

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி நடத்தைகுறித்து, நாடாளுமன்றம் விவாதிக்காது. பிரிவு – 121. அவையை நடத்தில் செல்லும் பொறுப்பில் உள்ள ஒருவரின் நடவடிக்கை, நீதிமன்றத்தின் வரம்புக்குள் வராது. பிரிவு 122 (2).   இரு அவைகளுமே நடைபெறாத போது (அவை விடுமுறை நாள்களின்போது), குடியரசுத் தலைவர், அவசர சட்டம் (Ordinance) பிறப்பிக்க வழிசெய்கிறது பிரிவு 123 (2). மீண்டும் அவை கூடுகிற நாளிலிருந்து 6 வாரங்களுக்குள்ளாக, அவசர சட்டம், அவை முன் வைக்கப்படும். 123 (2) (a). 

இதுவரை நாம் பார்த்த அத்தனையும், UPSC, SSC, TNPSC உள்ளிட்ட அத்தனை போட்டித் தேர்வுகளுக்கும் மிகமிக முக்கியமானது. மீண்டும் மீண்டும் படித்து, மனதில் நன்கு பதியவைத்துக்கொள்ளவும். இதுவரை வந்த பாடங்களைப் படிக்க விரும்பினால், இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க!

நீந்திப் பழகுவோம் - மாதிரித் தேர்வு 20

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்