வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (17/01/2018)

கடைசி தொடர்பு:10:30 (17/01/2018)

உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரங்கள் என்னென்ன? - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 21 : உச்சநீதிமன்றம்! 

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 7-க்கு மேற்படாமல், நீதிபதிகள் இருப்பார்கள். பிரிவு 124 (1).   உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, குடியரசுத் தலைவர் நியமிப்பார். 124 (2).

supreme Court

உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்குத் தேவையான தகுதிகள் என்ன? 

அ) இந்தியக் குடிமகனாக இருத்தல்;

ஆ) உயர் நீதிமன்ற நீதிபதியாகக் குறைந்தது 5 ஆண்டு அனுபவம்;

இ) வழக்கறிஞராக, உயர்நீதிமன்ற அளவில் 10 ஆண்டு அனுபவம்;

ஈ) குடியரசுத் தலைவரின் கருத்துப்படி, சிறந்த நீதிபதி. 

வழக்கறிஞர் அனுபவத்துடன், அதன் பிறகு மாவட்ட நீதிபதி அளவில் பணி புரிந்து இருந்தால், அந்த அனுபவமும் கணக்கில் கொள்ளப்படும். நாடாளுமன்ற இரு அவைகளிலும், மொத்தத்தில் பெரும்பான்மை ஓட்டு மற்றும் ஓட்டெடுப்பின் போது அவையில் உள்ளவர்களில் 3இல் 2 பங்கு ஓட்டு மூலம், உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும்.  அதன் பேரில், குடியரசுத் தலவரால் மட்டுமே அவர் நீக்கப் படலாம். குடியரசுத் தலைவர் அல்லது அவரால் நியமிக்கப் படுகிற நபர் முன்பாக, பொறுப்பு ஏற்றுக் கொள்வார். உச்ச நீதிபதியாகப் பணியாற்றியவர், அதன் பிறகு, இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும், வழக்கறிஞராக பணியாற்ற முடியாது. 124 (7) உச்ச நீதிமன்றம், தில்லியில் இருந்து இயங்கும். பிரிவு 130.

உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு (Jurisdiction of the Supreme Court):

இந்திய அரசுக்கும் மாநில அரசு / அரசுகள் இடையிலான சச்சரவு;

இந்திய அரசுடன் சில மாநிலங்கள் – எதிரே சில மாநிலங்கள் கொண்ட சச்சரவு;

மாநிலங்களுக்கு இடையிலான சச்சரவுகள் ஆகியவற்றின் மீது உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் மீது மேல் முறையீட்டு அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்குகிறது பிரிவு 132. தனது தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்வதற்கான சான்றிதழ் (அனுமதி), உயர்நீதிமன்றம் வழங்க, பிரிவு 134A வகை செய்கிறது. அதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், தீர்ப்பு வழங்குகிற உயர் நீதிமன்றம், பி.134A வின் கீழ், சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் பிறகே, உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்ய முடியும். உயர் நீதிமன்றம் ஒன்றின் முன் உள்ள ஒரு வழக்கை, தானே எடுத்துக் கொள்ளவோ, அல்லது, வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி விடவோ, உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை தருகிறது பி.139A.

உச்ச நீதிமன்றம் பிரகடனப் படுத்துகிற சட்டம், எல்லா நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். (‘Law declared by Supreme Court to be binding on all courts’) பி.141.  சட்டம் தொடர்பான கேள்வி / ஐயம் எழுகிற போது, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத்தைக் கலந்து ஆலோசிக்கலாம். பி.143. உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக செலவுகள் அனைத்தும், இந்திய தொகுப்பு நிதியம் (Consolidated Fund of India) மூலம் செய்யப் படும். பி. 146(3).  இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (Controller and Auditor General of India), குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுவார். பி.148. மத்திய அரசின் கணக்குகளை ஆய்வு செய்து, அதன் மீதான அறிக்கையை, தலைமைத் தணிக்கையாளர், குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார். பி. 151(1).  இதே போன்று, மாநில அரசின் கணக்குகள் மீதான அறிக்கை, அவ்வந்த மாநில ஆளுநரிடம் வழங்கப்படும். பி.151(2).

இத்துடன், சாசனத்தின் பாகம் V – ஒன்றியம் (The Union) நிறைவுறுகிறது.  அடுத்து வருவது – மாநிலங்கள்! அதை நாளை பார்க்கலாம். இதுவரை வந்த பாடங்களில் எதையாவது மிஸ் பண்ணீட்டீங்களா? இந்த லிங்கில் எல்லா பாடங்களும் இருக்கிறது. புக் மார்க் பண்ணிக்குங்க. முடிந்தால் க்ரூப் 4 எழுத தயாராகிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க...!

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 21

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்