ஆளுநர்... அமைச்சர்கள்... உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள்குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன உள்ளது?

Day 22 : மாநிலங்கள்! 

அரசமைப்புச் சட்டம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளில் சரியாக வழிகாட்டுவதற்கு, பள்ளிப் பாடப் புத்தகங்கள் கிடைப்பது இல்லை. TNPSC Group 4 தேர்வைப் பொறுத்த மட்டும், மொழித் தாள் முழுக்கவும் நேரடியாக பாடப் புத்தகங்களில் இருந்து வருகிற வினாக்கள் கொண்டதாகத்தான் இருக்கிறது. எப்போதேனும் ஓரிரு வினாக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறி இருக்கலாம். கலவரப்பட, கவலை கொள்ள ஏதும் இல்லை. பொதுப் பாடத் தாளில், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் பகுதிகளில் பெரும்பாலும் பாடப் புத்தகங்களில் இருந்தே கேள்விகள் வருகின்றன. விட்டுப் போனவை…? அரசமைப்புச் சட்டம், பொருளாதாரம், அரசு நிர்வாகம் (Governance) நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) மட்டுமே.  TNPSC Group 4 தேர்வுக்குத் தயார் ஆகிறவர்கள், பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவறாமல் தொடர்ந்து படித்து வரவும். 

ஏற்கெனவே சொல்லி உள்ளோம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி, குறைந்த வழி… (short cut) என்றெல்லாம் எதுவும் இல்லவே இல்லை. எந்த அளவுக்கு பள்ளிப் பாடங்களில் நல்ல பயிற்சி எடுத்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு TNPSC Group4 தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புகள் அதிகம். பாடப் புத்தகங்களுக்கு வெளியே உள்ள பகுதிகள், படிக்க, புரிந்துகொள்ள சற்றே கடினமாக இருக்கலாம். அத்தகைய பகுதிகளை இயன்ற வரையில், விரிவாக, எளிமையாகத் தர முயற்சிக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தை நிறைவு செய்துவிட்டு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகளைப் பார்ப்போம். 

அரசியல் சாசனம் பாகம் VI  -  மாநிலங்கள். (The States) 

இந்தப் பாகத்தில் வருகிற, ‘மாநிலம்’, ‘ஜம்மு-காஷ்மீர்’ மாநிலத்தைக் குறிக்காது. பிரிவு 152. ஒரு மாநிலத்தின் நிர்வாக அதிகாரம், ஆளுநரிடம் இருக்கும்; அதை அவர் உபயோகிப்பார். (the executive power of the State shall be vested in the Governor and shall be exercised by him.) அதாவது, ஆளுநர் என்பது வெறுமனே அலங்காரப் பதவி அல்ல; செயல்படுகிற அமைப்பு என்கிறது பி.154 (1). ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். பி. 155. குடியரசுத் தலைவர் விரும்புகிற வரை, அல்லது 5 ஆண்டுகளுக்கு, ஒருவர் ஆளுநராகப் பொறுப்பு வகிப்பார். பி. 156. 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன், ஆளுநராகலாம். பி. 157. 

ஒரு மாநில ஆளுநர், அந்த மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவர் இல்லாதபோது, உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி முன்னிலையில் ஆளுநர் பொறுப்பு ஏற்றுக்கொள்வார். கருணை அடிப்படையில், தண்டனையைக் குறைக்கிற அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பி. 161. மாநில முதல்வரும், அவரின் ஆலோசனைப்படி அமைச்சர்களும், ஆளுநரால் நியமிக்கப்படுவர். சடிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா மாநிலங்களில், பழங்குடியினர் நல்வாழ்வுக்கு என்று அமைச்சர் இருப்பார். பி.164

மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15%க்கு மிகக் கூடாது. அதேபோல், முதல்வரைச் சேர்த்து, ஒரு மாநில அமைச்சரவையில் குறைந்தது 12 பேர் இருப்பர். (முதல்வர் + 11 அமைச்சர்கள்) பிரிவு164(1-A) சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதங்கள் வரை ஒருவர் அமைச்சராக இருக்கலாம். அதற்குள்ளாக தேர்தலில் நின்று உறுப்பினராகி, அமைச்சராகத் தொடரலாம். சாசனத்தில் இது சொல்லப்படவில்லை. இது, நாமாகப் பெறுகிற விளக்கம். ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் (Legislature) என்பது, ஆளுநர் மற்றும் சட்டப் பேரவையை உள்ளடக்கியது. “For every State there shall be a Legislature which shall consist of the Governor and one House.” 

சட்டம் இயற்றி, மாநிலங்களில் ‘மேலவை’ (Council)  ஒன்றை உருவாக்கவும் அல்லது கலைக்கவும் நாடாளுமன்றத்துக்கு உரிமை தருகிறது பி. 169. எந்த ஒரு மாநில சட்டமன்றத்திலும், 60க்குக் குறையாமல் 500க்கு மேற்படாமல் உறுப்பினர்கள் இருக்கலாம். “the Legislative Assembly of each State shall consist of not more than 500, and not less than 60 members.” பி.170. ஒரு மாநிலத்தின் மேலவையில் அதிகபட்ச (maximum) எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3இல் 1 என்கிற அளவைத் தாண்டக் கூடாது. குறைந்த (minimum) எண்ணிக்கை 40. 

சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு i) 25 வயது நிரம்பிய   ii) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.  சட்ட மேலவை உறுப்பினராக, 30 வயது நிரம்பி இருக்க வேண்டும். கவனத்தில் கொள்க: ஒரு மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக, இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் என்றுதான் சாசனம் கூறுகிறது. அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்குச் சொன்னது அனைத்தும், சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்குப் பொருந்தும்.  காலண்டர் ஆண்டின் முதற் கூட்டம், கூட்டுக் கூட்டம் (மேலவை இருப்பின்) ஆகியன, ஆளுநர் உரையுடனே தொடங்கும். 

சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் அல்லது அவரால் நியமிக்கப்படுகிற நபர் முன்பாக பொறுப்பு எடுத்துக்\கொள்வர். ‘பண மசோதா, மேலவையில் கொண்டுவரப் பட மாட்டாது’ உள்ளிட்ட அத்தனை அம்சங்களிலும், நாடாளுமன்ற அலுவல்களுக்கு உள்ள அதே விதிகள்தாம் சட்டமன்றங்களுக்கும். உயர் நீதிமன்றத்துக்கான விதிகளும் கூட, உச்ச நீதிமன்றத்துக்கான விதிகள் போலவேதாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து, குடியரசுத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிப்பார்.

கீழமை நீதிமன்றங்கள் (Subordinate Courts) குறித்து அத்தியாயம் VI கூறுகிறது. உயர் நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்து, ஆளுநர், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார். மாவட்ட நீதிபதி ஆவதற்கு ஒருவர், குறைந்தது 7 ஆண்டுகள், வழக்கறிஞராய்ப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

இத்துடன் ‘மாநிலங்கள்’ பகுதி நிறைவடைகிறது. அடுத்து வருவது, சாசனத்தின் பாகம் VIII – யூனியன் பிரதேசங்கள். – The Union Territories. மத்திய, மாநில அரசுகளுக்குச் சொல்லப்பட்டதில் இருந்து பெரிய மாற்றம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேச முதல்வர், அவரின் அறிவுறுத்தலின் படி பிற அமைச்சர்கள், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்; பி. 239 (5). அமைச்சர்களின் எண்ணிக்கை, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10%க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சிறிய பகுதிதான் இது. இதைத் தொடர்ந்து வருகிறது – பாகம் ix. பஞ்சாயத்துகள். (The Panchayats). இது பற்றி நாளை பார்க்கலாம். இதற்கு முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க!

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 22

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!