வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (19/01/2018)

கடைசி தொடர்பு:11:14 (19/01/2018)

நடப்பு நிகழ்வுகள்: எப்படி கேள்விகள் வரும்? எப்படி தயார் செய்யவேண்டும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 23 : நம்மைச் சுற்றி… நடந்தது என்ன?

TNPSC Group4 தேர்வு எழுத இருக்கும் அத்தனை பேரும், அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி – கடந்த ஓரிரு தருணங்களில், அதாவது TNPSC Gr 2 உள்ளிட்ட தேர்வுகளில், இரண்டு பகுதிகள், மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

1. இந்திய அரசமைப்பு சட்ட்ம். 

2. நடப்பு நிகழ்வுகள். (Current Affairs) 

கணிதம், திறனறி பகுதிகள் நீங்கலாக உள்ள 75 வினாக்களில், பாதிக்கும் மேற்பட்டவை, மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் இருந்து மட்டுமே கேடகப்பட்டன. TNPSCயின், மாறி வரும், புதிய அணுகுமுறையை மனதில் கொண்டுதான் TNPSC Gr4 தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.அதனால்தான், அரசமைப்பு சட்டத்தை விரிவாகப் படித்து வருகிறோம். இருப்பினும், ஒரே பகுதியை தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் படிக்கிற போது, ஒருவித மனச் சோர்வு ஏற்படலாம். ஆகையால், இடையிடையே, பிற பகுதிகளையும் பார்ப்போம்.

நடப்பு நிகழ்வுகள் (Current Affairs): தேசிய / சர்வதேச முக்கிய நிகழ்வுகள் (events of National / International significance) இந்தப் பகுதியில் அடங்கும். ஒரு சம்பவம், நாடு தழுவிய அளவில் நடந்து இருந்தால்தான், (ஜி.எஸ்.டி. போன்று) அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று பொருள் அல்ல.  ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடந்து இருக்கலாம். ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கலாம்.உ-ம். தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். இது, நாடு முழுவதும், ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியது அல்லவா..? ஆகவே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்த அளவுகோல் கொண்டுதான், நடப்பு நிகழ்வுகளை அணுக வேண்டும். 

‘மணிப்பூரின் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா, 2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை?’ 

சென்ற ஆண்டு TNPSC Gr2 தேர்வில் கேட்கப்பட்டது இது. மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எத்தனையோ பேர், போட்டி இட்டனர்.  ஆனால், இரோம் ஷர்மிளா மட்டுமே, ஒரு போராளியாக, இந்தியா முழுதும் அறியப் பட்டவர். ஆகவே, தேசிய முக்கியத்துவம் பெறுகிறது. 

ஏன் இந்த விளக்கம்..? 

இந்தத் தொடரின் நோக்கமே, தேர்வர்கள் தாமாகத் தேர்வுக்குத் தயார் செய்து கொள்கிற பக்குவம் பெற வேண்டும் என்பதுதான். பயிற்சி மைய வகுப்புகள், வழிகாட்டிப் புத்தகங்கள் (Guides) ஆகியவற்றின் மீது வீணே பணம் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். சுயமாகப் படிக்கலாம்; முயற்சிக்கலாம்; பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்; தேர்ச்சியும் பெறலாம். இதற்கான வழிமுறையைத்தான் விகடன்.காம் கையில் எடுத்து இருக்கிறது. இதுவொரு, முதல் முயற்சி. ஆகவே அவ்வப்போது விளக்கம் தர வேண்டி உள்ளது. பொறுத்துக் கொள்ளவும். 

TNPSC Group 4 தேர்வில் தகவல் அடிப்படையிலான ‘factual’ கேள்விகள், மிக முக்கியம். ஆங்கிலத்தில் ‘who is who?’ என்று சொல்வார்கள். எங்கே? எப்போது? யார்? – முக்கியம். ஏன்? எப்படி? என்னாயிற்று? (விளைவு) – அத்தனை முக்கியமில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஏன் நடைபெற்றது? என்ன காரணம்? எப்படி இத்தனை ஆயிரம் இளைஞர்கள் ஒன்று திரள முடிந்தது? போராட்டத்தின் விளைவு என்ன? – TNPSC Gr4 தேர்வுக்குப் பயன்படாது. 

எங்கே தொடங்கியது? என்றைக்குத் தொடங்கி, என்று முடிந்தது? யாருக்கு எதிராக, யார் நடத்தினார்கள்? யாரால் முடிவுக்கு வந்தது? இவையெல்லாம், தேவையான தகவல்கள். நாம் சொல்வதெல்லாம் TNPSC Group4 தேர்வுக்கு மட்டுமே. மற்றபடி, TNPSC GR1, UPSC தேர்வுகளுக்கு, முழு விவரங்களும் தெரிந்து இருக்க வேண்டும். 

இனி…. ‘நடப்பு நிகழ்வுகள்’!  

ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், என்னவெல்லாம் இருக்கின்றன என்று, உத்தேசப் பட்டியல் தயார் செய்து கொள்ளலாமா..? 

1. ஜி.எஸ்.டி. சரக்கு மறும் சேவை வரி.

2. ஆதார் அட்டை.

3. கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள்.

4. மத்திய பட்ஜெட் 2017 -18.

5. இந்திய, அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன் அதிபர் தேர்தல்.

6. நோபல் பரிசு உள்ளிட்ட விருதுகள், பட்டங்கள்.

7. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்.

8. சர்வதேச உடன்படிக்கைகள்.

9. அறிவியல், தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்

10. மத்திய / மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள்.

இப்போதைக்கு இந்த 10 அம்சங்களுடன் நிறுத்திக் கொள்வோம். இந்தத் தலைப்புகளின் கீழுள்ள தகவல்கள், பொது வெளியில், பத்திரிகைகளில், ஆண்டுப் புத்தகங்களில் (Year Books), தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் கிடைக்கும். தகவல்களைத் திரட்டுவதில் பிரசினை இருக்காது. திரட்டிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கலாம். இது, அத்தனை பேருக்குமே இருக்கக் கூடிய பிரசினைதான். என்ன ஒன்று…, தொடர்ந்து தரமான செய்தித் தாள்களை வாசிக்கிற வழக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்தப் பழக்கம் இதுவரை இல்லாதவர்கள், இனியாவது ஏற்படுத்திக் கொண்டால், TNPSC, SSC, UPSC உள்ளிட்ட எல்லாப் போட்டித் தேர்வுகளுக்குமே பயன்படும்.

நாளை ‘ஜி.எஸ்.டி.’ குறித்து விரிவாகப் பார்க்கலாம். இதற்கு முந்தைய பாடங்களைப் படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க!

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 23 

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்