ஜி.எஸ்.டி தொடர்பாக என்னவெல்லாம் தெரிந்துவைத்திருக்கவேண்டும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 24 : ஒரே நாடு! ஒரே வரி! 

TNPSC Gr4 தேர்வுக்கு நாட்டு நடப்புகள் பகுதியில் 'ஜி.எஸ்.டி.' முக்கிய இடம் வகிக்கலாம். 

2017 ஜூலை1  - நடைமுறைக்கு வந்தது 'ஜி.எஸ்.டி.' - சரக்கு மற்றும் சேவை வரி. (Goods & Services Tax)  'ஒரே நாடு', 'ஒரே சந்தை', 'ஒரே வரி'. - இதுதான் 'ஜி.எஸ்.டி.'க்கான முழக்கம். 'One Nation; One Market; One Tax'.  மாநிலம் விட்டு மாநிலம் வர்த்தகம் செய்வோர் பயனடைய வேண்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே வரி விகிதங்களும் வர்த்தகக் கட்டுப்பாடுகளும் இருத்தல் கூடாது; ஒரு பொருளுக்கு, நாடு முழுக்க ஒரே வரி விகிதம் வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதனை நிறைவேற்றும் விதமாக 'ஜி.எஸ்.டி.' அறிமுகப்படுத்தப் பட்டது.

'ஜி.எஸ்.டி.' - முற்றிலும் கணினி / மின்னணு மயமாக்கப் பட்ட வரி முறை. அதாவது, 'ஜி.எஸ்.டி.' தொடர்பான படிவக்கள் அனைத்தும் கணினி மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.  எல்லா வர்த்தக நடவடிக்கையும் கணினி மூலம் மட்டுமே சாத்தியம் என்பதால், கணக்குகள் அனைத்தும் சரியானதாக, மாற்ற முடியாததாக, நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கும். போலி ரசீதுகள், பொய்க் கணக்குகள், பதுக்கப்படும் சரக்குகள், வரிக்கு உட்படாத விற்பனை... ஆகிய எதற்கும் 'ஜி.எஸ்.டி.' யின் கீழ் சாத்தியம் இல்லை என்பதால், நேர்மையான வணிகம் உறுதி செய்யப்படுகிறது. ஏற்கனவே இருந்த மறைமுக வரிகளை ஒன்றிணைத்து 'ஜி.எஸ்.டி.' கொண்டு வரப் பட்டுள்ளது. 

'மறைமுக வரி' என்றால் என்ன..?

வரிகளில் இரண்டு வகை உண்டு. 

1) நேரடி வரி;  2) மறைமுக வரி. 

வருமான வரி, வீட்டு வரி முதலியன, வரி செலுத்துவோரால், நேரடியாக அரசுக்கு செலுத்தப் படுகிறது. விற்பனை வரி, சேவை வரி ஆகியன, வாடிக்கையாளரால் நேரடியாக அரசுக்கு செலுத்தப் படுவதில்லை. கடை, ஓட்டல், திரையரங்குகள், நம்மிடம் இருந்து வரை வசூலித்து, அரசுக்கு செலுத்துகின்றனர். வருமான வரியை எப்படி செலுத்துகிறோம்? நமது வருமானத்தின் அடிப்படையில் அதற்கான வரியைக் கணக்கிடுகிறோம். இந்த வரித் தொகையை நம்முடைய 'PAN' மூலம், நாமே நேரடியாக செலுத்துகிறோம்.ஆகவே இது, நேரடி வரி. 

ஒரு ஓட்டலுக்கு செல்கிறோம். உணவு அருந்துகிறோம். அதற்கான விலையுடன், சேவை வரியும் தருகிறோம். ஆனால் இதனை நாமா அரசுக்கு செலுத்துகிறோம்...? கடைக்காரரிடம் தருகிறோம். நாம் செலுத்திய வரித் தொகை, பிறிதொரு நாளில் கடைக்காரர் மூலம் அரசுக்கு செல்கிறது.ஆகவே இது, மறைமுக வரி.

இந்தியாவில் ஏராளமான மறைமுக வரிகள் இருந்தன. விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி, நுழைவு வரி, விளம்பர வரி, கொள்முதல் வரி.... என்று பல வரிகள் இருந்தன. இவை எல்லாவற்றையும் இணைத்து, 'ஜி.எஸ்.டி.' என்கிற ஒரே குடையின் கொண்டு வரப் பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யில் மொத்தம் 5 அடுக்குகள் / விகிதங்கள் உள்ளன. அவை - 0%, 5%, 12% 18% மற்றும் 28%. சிலர், 0% வரி விகிதத்தைக் கருத்தில் கொள்ளாமல், 4 வரி விகிதங்கள் என்கிறார்கள். இது தவறு. ஐந்து அடுக்குகள் என்பதே சரி. ஜி.எஸ்.டி. அதிகபட்சமாக 40% வரை விதிக்கப் படலாம். தற்போது, 28% வரை மட்டுமே விதிக்கப் படுள்ளது. 'ஜி.எஸ்.டி.யில் அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச வரி விகிதம்  40% ஆனால், நடைமுறையில், ஜி.எஸ்.டி.யின் கீழ் அரசு விதித்துள்ளாதிகபட்ச வரி விகிதம் - 28%. இரண்டுக்குமான வித்தியாசம் நினைவிருக்கட்டும்.

ஆடம்பரப் பொருட்கள் (luxury items) அதிக வரி விதிப்புக்கு உள்ளாகும்; சொகுசுப் பொருட்கள் (comfort goods) அதை விடக் குறைவான வரி விகிதத்தில் வரும். அன்றாடப் புழக்கத்தில் வரும் அதற்க்குக் கீழும், அத்தியாவசியப் பொருட்கள் (essential goods) 5% அல்லது 0% வரி விகிதத்தின் கீழும் வருகின்றன. 

உதாரணத்துக்கு.....

கார்கள், உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், ஏ.சி. பிரிட்ஜ் ஆகியன   - 28%;

சி.சி.டி.வி., ஹேர் ஆயில், பிஸ்தா, ஐஸ்கிரீம், சாக்லேட், பற்பசை..   - 18% 

வெண்ணெய், நெய், பழச்சாறு, மொபைல், பதப்படுத்தப்பட்ட உணவு.. - 12%

சர்க்கரை, சமையல் எண்ணெய், தேயிலை, சமையல் எரிவாயு, குழந்தை உணவு - 5%

பால், தயிர், முட்டை, காய்கறிகள், பொடலம் கட்டப்படாத உணவு தானியங்கள் . 0%.

ஏராளமான பொருட்கள் உள்ளன. எது எதற்கு எத்தனை சதவீத 'ஜி.எஸ்.டி.' என்று சரியாக நினைவில் வைத்துக் கொள்வது சிரமமான காரியம்தான். ஆனால், பொதுவாக எந்த அடிப்படையில் வரி விகிதங்கள் பிரிக்கப் பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியும். ஆடம்பரம் என்றால் மிக மேலே 28% அத்தியாவசியம் எனில், மிகக் கீழே - 0%. இந்த விதிமுறையின் படி, ஓரளவுக்கு வரி விகிதத்தைக் கணித்து விடலாம். 

முக்கியமான மூன்று பொருட்கள், 'ஜி.எஸ்.டி.'யின் கீழ் கொண்டுவரப் படவில்லை. அவை - 

1) மதுவகைகள் (alchoholic products) 

2) முத்திரைத்தாள் தீர்வை (Stamp Duty) & 

3) பதிவுக் கட்டணம் (Registration charges)

இவை அல்லாமல், பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியனவும்,  ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வரப்படவில்லை. ஓர் ஆண்டின் வர்த்தகம் 20 லட்ச ரூபாய்க்கு மிகுந்தால் ஜி.எஸ்.டி. வலைக்குள் வரும். ஏற்கனவே எங்கேயேனும் வரி செலுத்தப்பட்டு இருந்தால், அந்தத் தொகையை, வரவு வைத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, காகிதம் வாங்கி புத்தகம் தயாரிக்கிறோம். காகிதத்துக்கு ஏற்கனவே வரி செலுத்தி விட்டோம். புத்தகமாக விற்கிற போது, அதன் வரியில், தாளுக்காகத் தந்த வரியைக் கழித்து விட்டு, மீதத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு, 'Input Tax Credit' 'உள்ளீட்டு வரி வரவு' என்று பெயர். 

ஜி.எஸ்.டிக்கான முதல் செயல், 2000இல் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள் 3 பேர் - ஐ.ஜி.படேல், பிமல் ஜலான், சி. ரங்கராஜன் - ஆகிய மூவரைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில், ஜி.எஸ்.டி.க்கு செயல் வடிவம் தர, அப்போதைய பிரதமர்  வாஜ்பாய், ஒரு குழு அமைத்தார். அப்போதைய, மேற்கு வங்க நிதி அமைச்சர் அசிம்தாஸ் குப்தா (இடது கம்யூனிஸ்ட்) இந்தக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப் பட்டார்.

இதற்கு 3 ஆண்டுகள் கழித்து (2003), விஜய் கேல்கர் தலைமையில், வரிச் சீர்திருத்தக் கமிட்டியை, பிரதமர் வாஜ்பாய் நியமித்தார். 2005ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் (Budget), 'ஜி.எஸ்.டி.' முதன் முறையாக குறிப்பிடப்பட்டது. 2009ஆம் ஆண்டு, ஜி.எஸ்.டி.க்கான அடிப்படைக் கட்டமைப்பை அறிவித்தார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. 2013ஆம் ஆண்டு, ஜி.எஸ்.டி.யினால் வருவாய் இழப்பை சந்திக்கும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, 89,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார் ப. சிதம்பரம். ஆகஸ்ட் 2016இல், ஜி.எஸ்.டி. தொடர்பான அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

ஜி.எஸ்.டி. முறை, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதால், 50%க்கு மேற்பட்ட மாநிலங்கள், தமது சட்ட சபையில், ஜி.எஸ்.டி.யை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் தர வேண்டும். 18 மாநிலங்கள் இவ்வாறு ஒப்புதல் தந்த பின்னர், 2016 செப்டம்பர் 6 அன்று,  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார்.

ஜி.எஸ்.டி.யில் 4 பிரிவுகள் உள்ளன:

1) மத்திய ஜி.எஸ்.டி. (Central GST)

2) ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (Integrated GST)

3) மாநில ஜி.எஸ்.டி. (State GST) 

4) யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. (Union Territory GST)

2017 ஜூலை அதிகாலை 00:01 மணிக்கு (ஜூன் 30 நள்ளிரவு) நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்ததாய் அறிவித்தார். ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை 'ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்வகிக்கும். இதன் தலைவராக மத்திய நிதி அமைச்சரும் 29 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். 

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற, 75% ஆதரவு தேவை. அதிக எண்ணிக்கை மாநிலங்களின் ஆதரவு இருந்தால் மடுமே ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்ற இயலும்; மத்திய அரசும் மத்திய ஆளும் கட்சியும் நினைத்தால் மட்டும், ஜி.எஸ்.டி.யில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது. இதற்காகத்தான், தீர்மானம் நிறைவேற, சாதாரணமான நடைமுறையான 50% ஆதரவு என்பதை, 75%ஆக வைக்கப் பட்டுள்ளது.

பிரான்சு நாடில் அறிமுகமான 'ஜி.எஸ்.டி. - தற்போது சுமார் 160 நாடுகளில் அமலில் உள்ளது. ஜி.எஸ்.டி. காரணமாக மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்  மாநிலங்களில், தமிழகம் ஒன்றாகும். இதற்கு இடாக முதல் 5 ஆண்டுகளுக்கு, வருவாய் இழப்பீடு மத்திய அரசால் வழங்கப்படும்.  ஜி.எஸ்.டி.க்கு எதிரான கருத்துகள், TNPSC Gr4 தேர்வுக்குத் தேவைப்படாது. தெரிந்து வைத்துக் கொண்டால், UPSC (ஐ.ஏ.எஸ்.) தேர்வுக்குப் பயன்படும். 

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 24

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!