நிகழ்வுகளை ஈசியா நினைவில் வச்சுக்க இப்படி ஒரு டைம்லைன் போடுங்க - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 25 : என்னவெல்லாம் நடந்தது? 

TNPSC gr 4 தேர்வுக்குத் தயார் செய்து கொள்கிற யாருக்கும், ஒரு கேள்வி நிச்சயம் எழவே செய்யும். நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு எத்தனை ஆண்டுகள்/ மாதங்களுக்கு முன்னால் இருந்து படிக்க வேண்டும்? தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முந்தைய செய்தியுடன் நிறுத்திக் கொண்டு விட வேண்டும்? நேர்மையாக, அப்படி ஒரு ‘கட்-ஆஃப்’ எதுவுமே இல்லை. ஆனால், சில நடைமுறைகளைக் கொண்டு யோசித்துப் பார்ப்போம். 

சுமார் 15 லட்சம் வினாத்தாள்கள் அச்சடிக்க வேண்டும்; ஒரு மாதமாவது அவகாசம் வேண்டாமா..? குறைந்தது, 15 நாட்கள்?  2018 பிப்ரவரி 11 தேர்வு நாள். அநேகமாக 2018இன் நிகழ்வுகள் வருவதற்கு சாத்தியம் இல்லை. தேர்வுக்கு சுமார் ஒரு மாதம் முன்னர் வரை உள்ள செய்திகளைப் பார்க்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முற்பட்டதும் தேவை இருக்காது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ செய்திகளில் அடிபடுகிற பிரசினை / நபர் எனில், தெரிந்து வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.  2017 மற்றும் 2016 ஆண்டுப் புத்தகங்கள் (Year Books) படித்தால் போதும். ஒரே ஒரு சிக்கல்தான். ஒரு பிரசினை, சம்பவம், நபர் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து வாசித்தால்தான் புரியும்; நினைவில் நிற்கும். 

ஆண்டுப் புத்தகங்களில் பெரும்பாலான செய்திகள், கால வரிசைப்படி, அதாவது தேதி வாரியாகவே இருக்கும். என்ன செய்யலாம்? சற்றே சிரமம் பாராமல், நமக்கு ஏற்றவாறு, சம்பவம், நபர் சார்ந்த செய்திகளைத் தனியே குற்இப்பு எழுதி வைத்துக் கொள்ளலாம். இன்னும் எளிமையாக, வெவ்வேறு வண்ணங்களில் ஆண்டுப் புத்தகத்திலேயே, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பக்க எண்களை (Page nos) குறித்து வைக்கலாம். மீண்டும் வாசிக்கும் போது, எளிதாக இருக்கும். சரி. நிகழ்வுகளுக்கு வருவோம். 

ஜல்லிக்கட்டு: 

9 ஜனவரி 2017 – மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு கோரிக்கை.

21 சனவரி – அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

23 சனவரி – ஜல்லிக்கட்டு தடை விலக்கு (திருத்த) மசோதா, தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. 

24 சனவரி – ஜல்லிக்கட்டுப் போராடம் முடிவு.

இப்படித்தான் செய்திகளை நாம் ஒரே தலைப்பின் கீழ் வருமாறு வகைப்படுத்திப் படிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் இந்த சங்கடம் இல்லை. முன் பின் படித்தாலும் பயன் தரும். காரணம், ஒவ்வொரு போட்டியும் தனித் தனியானது. 2017 அக்டோபர் மாதம், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கால்பந்துப் போட்டி, இந்தியாவில் நடைபெற்றது. உலகக் கால்பந்துப் போட்டி ஒன்று இந்தியாவில் நடைபெற்றது  இதுவே முதன் முறை. ஆகவே, இவ்வாண்டு TNPSC Gr 4 தேர்வில் இது குறித்த வினாவை எதிர்பார்க்கலாம். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நடத்தப் படுகிறது.

’ஜூனியர்’ கோப்பை என்று ஒரு போட்டியை முதலில் தொடங்கியது சிங்கப்பூர். ஆண்டு 1977. அதன் பிறகு சீனாவில் முதல் U16 உலகக் கோப்பைப் போட்டி, 1985இல் நடந்தது. 3 போட்டிகள் (6 ஆண்டுகள் கழித்து) 1991 முதல், U16 போட்டி, U17 போட்டியாக, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக என்று மாறியது. இந்தப் போட்டி, சென்னையில் நடைபெறவில்லை.  மொத்தம் 24 அணிகள் பங்கு பெற்றன. பிரிவுக்கு 4 அணிகள் வீதம், 6ஆகப் பிரிக்கப் பட்டது. இந்தியா, ‘A’ பிரிவில் இடம் பெற்றது. உடன் இப்பிரிவில் விளையாடிய அணிகள் – அமெரிக்கா, கொலம்பியா, கானா. தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று பெரு நகரங்களுடன், கோவா, கொச்சி (கேரளா) மற்றும் கவுகாத்தி (அசாம்) நகரங்களில் நடைபெற்றது. கேரளா, கோவா, அசாம், கொல்கத்தாவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக இருப்பதால் அங்கு போட்டிகள் நடத்தப் பட்டன. 

இந்தியாவின் U17 கால்பந்து அணிக்கு தலைவர் (காப்டன்) – அமர்ஜித் சிங் கியாம். பயிற்சியாளர் – நார்ட்டன் மார்ட்டோஸ். இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் மோதின. 5 – 2 கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்து, கோப்பையைக் கைப்பற்றியது. உலகின் அதிவேக ஓட்டக்காரர் - உசைன் போல்ட் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசி ஆட்டத்தில் பங்கு பெற்றார். ஜமைக்காவில் நடந்த 400மீ தொடர் ஓட்டம் (4 x 100) தான் அணிந்திருந்த  கால் ஷூ கழன்று போனதால், களத்தில் வழுக்கி விழுந்தார். ஆனாலும் அவரது ஜமைக்கா அணி, தங்கப் பதக்கம் வென்றது.

உலகின் மிகப் பிரபலமான விளையாட்டுப் போட்டி – 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி. அடுத்த போட்டி இவ்வாண்டு (2018) ரஷ்யாவில் நடைபெறுகிறது. தற்போதைய ( நடப்பு) உலக சாம்பியன் – ஜெர்மனி. இதே போன்று, குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 முதல் 25 வரை, தென் கொரியாவில் நடைபெறுகிறது. இளைஞர் (’யூத்’) ஒலிம்பிக் போட்டியும் 2018இல், அர்ஜென்டினாவில் நடைபெற இருக்கிறது. 

நாடாளுமன்ற, மேலவை உறுப்பினராக (ராஜ்ய சபா எம்.பி.) சச்சின் தெண்டுல்கர், முதன் முறையாக அவையில், குளிர்காலத் தொடரின் போது (டிசம்பர் 2016) உரையாற்றினார். ‘விளையாட்டை விரும்பும் நாடாக இருக்கும் இந்தியா, விளையாட்டை ஆடுகிற தேசமாக மாற்ற வேண்டும்’ என்று கூறினார். (we should change India from being a sports loving country to a sports palying nation)

மேலும் பல நடப்பு நிகழ்வுகள்…… தொடரும்.  

நீந்திப் பழகுவோம்: மாதிரித் தேர்வு 25

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!