குல்பூஷன் ஜாதவ் முதல் ஜின்பிங் வரை.. கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய சர்வதேச அரசியல்! - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 26: நடப்பு நிகழ்வுகள் 

TNPSC Gr4 தேர்வுக்கு ‘நடப்பு நிகழ்வுகள்’ எந்த அளவு முக்கியம்? 

பொதுப் பாடப் பிரிவில் 100 கேள்விகள். இதில், கணிதம், திறனறித் தேர்வு (aptitude test) பகுதிக்கு 25 போக, மீதம் - 75 வினாக்கள். வரலாறு, புவியியல், அறிவியலின் 4 பாகங்கள் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), அரசியல் (சாசனம்)…. இத்தனைக்கும் போக, நடப்பு நிகழ்வுகளுக்கு என்ன மிஞ்சும்? மிக நியாயமான கேள்வி. ஆனால், கடந்த சில தேர்வுகளாக, பொதுப்பாடப் பிரிவில், பாடப் புத்தகங்களின் ஆதிக்கம் குறைந்து,  நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. 

ஏறத்தாழ 20 கேள்விகள், அதாவது 30 மதிப்பெண்கள், நடப்பு நிகழ்வுகள் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம். என்ன பொருள்..? TNPSC Gr4 தேர்வில், வெற்றியைத் தீர்மானிக்கிற ஒரு பகுதி இது. ஆகவே, மிகுந்த கவனம் வேண்டும். நடப்பு நிகழ்வுகளில் ‘ஜி.எஸ்.டி.’ பற்றிப் பார்த்தோம். இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றன..? 

சர்வதேச செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம். TNPSC Gr4 தேர்வுக்கு, மேலோட்டமான அடிப்படை செய்திகள் தெரிந்திருந்தால் போதுமானது. முதலில், அண்டை நாடுகள்.

இலங்கை! நமக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கிற தீராத பிரச்னைகள் இரண்டு.

1) தமிழின விடுதலை

2) மீனவர் பிரச்னை. 

இரண்டுமே அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் நேரடியாக இடம் பெறாது. காரணம், TNPSC Gr4 thErvil, சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கேள்வி கேட்கிற மரபு இல்லை. UPSC (Civil Services), TNPSC GR1 பணிகளில், எழுத்துத் தேர்வுக்குப் பிந்தைய, நேர்முகத் தேர்வில் (interview) இதுபோன்ற, பிரச்னைகள்குறித்து கேட்கப்படுகின்றன. குரூப்-4 தேர்வில், இவை பொதுவாக, பாடத் திட்டத்துக்குள் அடங்குவதில்லை. அதனால், விட்டு விடுவோம். சரி… இலங்கைகுறித்து கேட்பதற்கு, வேறு என்ன இருக்கிறது..? இரண்டு வினாக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தம். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரப் பகிர்வும் அதிக உரிமைகளும் கிடைக்க வழி ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தத் திருத்தம் இன்னமும் முழுமையாக இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்திய அரசு, தேவையான அழுத்தம் தந்து, இதன் முழுமையான நிறைவேற்றத்துக்கு உதவலாம். 

2017 மே மாதம், இலங்கைத் தலைநகர் கொழும்புவில், ‘சர்வதேச வேசாக் தினம்’ (International Vesak Day) கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். ஆமாம்…., அது என்ன ‘வேசாக் தினம்’? ‘புத்த பூர்ணிமா’ என்று அழைக்கப் படுகின்ற, ‘புத்தர் தினம்’தான் இது. கெளதம புத்தர், பிறந்த, ‘மகா நிர்வாண்’ (மறைவு) பெற்ற நாள்தான், ‘வேசாக் தினம்’.

இவ்விரு செய்திகளுடன், பாகிஸ்தான் செல்வோம். ஊழல் வழக்கில், நீதிமன்ற தண்டனை காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரிஃப், பதவி விலக நேரிட்டது. அவருக்குப் பதிலாக, ஷாகித்கான் அப்பாஸ், பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவுக்கு உளவு வேலை பார்த்தார் என்று பொய்க் காரணம் காட்டி, கைது செய்யப்பட்ட இந்தியர் குல் பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக 1947 ஆகஸ்ட் 14 அன்று சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானின் தலை நகரம் – இஸ்லாமாபாத்.

அடுத்தது – சீனா! 

இந்தியாவுக்குச் சொந்தமான, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியே, சீனா – பாகிஸ்தான் வர்த்தக சாலை அமைப்பது; இந்தியாவின் ஒன்றிணைந்த மாநிலமான அருணாசலப்பிரதேசத்துக்கு, தான் உரிமை கோருவது; இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள ‘டோக்லாம்’ எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைவது…. என்று தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறது சீனா. ‘டோக்லாம்’ பகுதி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் நம்மை இணைக்கும் மிகவும் குறுகலான பகுதி. ‘சிக்கன் குரல்வளை’ எனப்படும் இப்பாதையை ஆக்கிரமிப்பதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைத் தனியே பிரித்துவிடலாம் என்பதே சீனாவின் சதித் திட்டம். இதற்கு, இந்திய அரசு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. முழுக்கவும் கம்யூனிச நாடான சீனாவில், அவர்களின் சொந்த நாட்டுக் குடிமகன்களுக்கே அடிப்படை உரிமைகள் எதுவும் அளிக்கப்படாமல், அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. அரசை எதிர்த்துக் கேட்ட ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள், சீனத் தலைநகர் ‘பீஜிங்’கில் உள்ள, தினானமன் சதுக்கத்தில், புல்டோசர் ஏற்றிக்கொல்லப் பட்டனர். இதனால் உலக அரங்கில் எந்த நாடும், எந்தப் பிரச்னையிலும், சீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. 

சமீபத்தில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் நிலைக் கூட்டத்தில், சீன அதிபர் ‘ஜி ஜின்பிங்’, முழு அதிகாரம் கொண்ட எதேச்சாதிகார அதிபராகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். இதன் மூலம், தான் அதிபராக வர உதவிய, கட்சியின் மூத்த தலைவரான, பிரதமர் ‘லீ கேக்கியாங்’, அதிகாரமற்ற பொம்மை ஆக்கப்பட்டார். தற்போது, ‘ஜி ஜின்பிங்’ சீனாவின் அரசமைப்புச் சட்டத்திலும் தனக்கேற்றவாறு மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளார்.  ‘மா – சே – துங்’க்குப் பிறகு, சீனாவின் மிக சக்தி வாய்ந்த தலைவராக  ‘ஜி ஜின்பிங்’ உருவாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இனி, நேபாளம். இதன் அதிபர் - பித்யா தேவி பண்டாரி; பிரதமர் – ஷேர் பகதூர் தியூபா. தலைநகர்: காத்மாண்டு. உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம், 2015-ல், மதச் சார்பற்ற நாடாக மாறியது. வங்க தேசம்: இந்தியாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான வங்க தேசம், இந்தியாவின் கிழக்கே உள்ளது. இதன் தலைநகரம் – டாக்கா. அதிபர்: அப்துல் ஹமீது; பிரதமர்: ஷேக் ஹசீனா. இந்தியா – வங்க தேசம் இடையே, ‘டீஸ்டா’ நதி நீர்ப் பங்கீடு, ஒரு பிரச்னையாக நீடித்து வருகிறது. சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களின் வழியே வங்க தேசத்துக்குச் செல்கிறது ‘டீஸ்டா’. இந்த நதி நீரில் தற்போது இந்தியா, 55% நீர் பெறுகிறது. தனக்குச் சரி பாதி பங்கு (50%) தண்ணீர் கேட்கிறது வங்கதேசம்.  ஆனால், வங்க தேசத்துக்குக் கூடுதலாகத் தண்ணீர் தருவதை, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கடுமையாக எதிர்க்கிறார். 

மியன்மர்: இதன் பழைய பெயர் – பர்மா. பிரதமர் (கவுன்சிலர்) – புகழ்பெற்ற பெண்மணி ‘அவுங் சாங் சூ கி’. தமக்கு எதிரான அடக்குமுறை / தாக்குதல்களுக்குப் பயந்து,  ஆயிரக்கணக்கான ‘ரோகிங்யா’ முஸ்லிம் அகதிகள், வங்க தேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த அகதிகள் பிரச்னை, தற்போது சர்வதேச மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதேபோன்று பிற நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் அவர்களுடனான சச்சரவுகள், பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகள்குறித்து ஏதேனும் ஓர் ஆண்டுப் புத்தகம் (Year Book) பார்த்துத் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் நல்லது.

2 முதல் 4 கேள்விகள் வரை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து நாளிதழ்களில் சர்வதேச செய்திகள் படித்து வருகிறவர்களுக்கு, மிக எளிமையான பகுதி இது. மற்றவர்களுக்கு, பல இடங்கள், மனிதர்களின் பெயர்கள், நினைவில் வைத்துக்கொள்ளல் சற்றே கடினமாக இருக்கலாம். தவிர்க்க முடியாது. இனி, ‘உள்ளே’ என்ன நடக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா…?

இதற்கு முந்தைய பாடங்களை படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க

மாதிரித் தேர்வு 26

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!