முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...! | General topics for preliminary examination

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (23/01/2018)

கடைசி தொடர்பு:16:09 (09/03/2018)

முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...!

முதன்மை தேர்வுக்கான பொதுப் பாடங்கள் 

இந்திய வரலாறு 

பகுதி 1 - பண்டைய கால வரலாறு 

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரையில் மூன்று பெரும் பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம். அதாவது பண்டைய கால வரலாறு (Ancient ), இடைக்கால (Medieval) வரலாறு மற்றும் நவீனகால (Modern) வரலாறு. UPSC தேர்வைப் பொறுத்தவரை, இத்தோடு சேர்ந்து கலை மற்றும் கலாசாரம் (Art and Culture) ஆகிய பாடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மொத்தமாக இந்தப் பகுதியில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்தால் சுமார் 20 கேள்விகள் வரையில் எதிர்பார்க்கலாம். அதாவது, மொத்த கேள்விகளில் சுமார் 20 சதவிகிதம், நவீன கால வரலாறு,  கலை மற்றும் கலாசாரம் ஆகிய பகுதிகளில் இருந்தே இடம் பெற்றிருக்கின்றன. 

முதலில் பண்டைய கால வரலாற்றைப் பார்ப்போம். கற்கால வரலாற்றில் பாலியோலித்திக் ( Palaeolithic ), மீசோலித்திக் (Mesolithic) மற்றும் நியோலித்திக் (Neolithic) காலங்கள் ஆகியவை. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள், இந்த வரலாறு நடந்த முக்கிய இடங்கள் (அவற்றின் பழைய மற்றும் தற்போதைய பெயர்கள்) உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்வது நல்லது. அதேபோல் இந்தஸ் கலாசாரம், வேத காலம் ஆகியவற்றின் முக்கிய நிகழ்வுகள், இடங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருள்களை நன்றாக பார்த்து வைத்துக்கொள்ளவும். இதற்கடுத்த முக்கிய பகுதி கி.பி 321ல் சந்திரகுப்த மௌரியரால் தோற்றுவிக்கப்பட்ட மௌரிய சாம்ராஜ்ஜியம். இப்படிப்பட்ட சாம்ராஜ்ஜியங்களைப் பற்றி படிக்கும்போது நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அந்த சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களின் காலவரிசைகள். அதோடு மன்னர்களின் தனித்துவம் மிக்க விஷயங்கள், அந்த சமயத்தில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள், அப்போது வருகைபுரிந்த முக்கிய வெளிநாட்டவர்கள், முக்கியமான இடங்கள், ஆட்சி முறை - பதவிகளின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. புனைப்பெயர்கள், சிறப்புப் பெயர்கள் ஆகியவற்றை நினைவில் கொள்வது நல்லது. உதாரணத்துக்கு மன்னர் அசோகரைத் தவிர தசரதருக்கும் ' தேவனம்பிரியா' என்ற சிறப்புப் பெயர் உண்டு. பெரும்பாலும் TNPSC தேர்வில் இதுபோன்றவற்றை நேரடி கேள்வியாகவே கேட்பதுண்டு. 

UPSC யைப் பொறுத்தவரை இவர்களில் எவருக்கு “ தேவனம்பிரியா” என்ற சிறப்பு பெயர் உண்டு ? 

அசோகர் 2. சந்திரகுப்த மௌரியா 3. தசரதர்                                                                                  

A. 1 only correct B. 1,3 correct C. 2,3 correct D. All are correct என்ற ரீதியில் கேட்கப்படும் 

மௌரிய சாம்ராஜ்ஜித்துக்குப் பிறகு சுங்காஸ், ஹுன், கனவா போன்ற சிறிய வம்சங்களையும் சாம்ராஜ்ஜியங்களையும் சட்டகர்னி, வாசுதேவர், ருத்ரதாமன், கனிஷ்கர் போன்ற அரசர்களை பற்றிய தகவல்கள் முக்கியம். அதன் பிறகு குப்தா சாம்ராஜ்ஜியத்தை (320- 550 கி.பி) பற்றி மேலே குறிப்பிட்ட (மௌரியா சாம்ராஜ்ஜியம்) தலைப்புகளில் தகவல்களை குறிப்பெடுத்துக்கொள்வது நல்லது. 

உதாரண கேள்வி: 

1. பிருஹ்சம்ஹிதா என்னும் நூலை எழுதியவர் வராஹமிரா; 2. ஃபாஹியன் சந்திரகுப்த மௌரியா II ஆட்சி செய்யும்போது இந்தியா வந்தார். 

A) 1 correct 2 wrong B. 2 correct 1 wrong C. Both 1 and 2 are correct D. Both are wrong 

( பதில் ) (c)

குப்தா சாம்ராஜ்ஜியத்துக்குப் பிறகு ஆண்ட மன்னர்களான மிஹிர்குலா, ஷர்ஷா, துருவசேனா, உதயதேவா போன்ற மன்னர்கள், அவர்களின் சிறப்பம்சங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. 

உதாரண கேள்வி :

இவற்றில் எவை ஷர்ஷா எழுதாத புத்தகம் ? 

A. பிரியதர்ஷிகா B. ரத்னவளி C. நாகாநந்தா D. மேகதத்தம் 

பதில்: D. மேகதத்தம்

பண்டைய  கால வரலாற்றில் சங்க காலம் மிகவும் முக்கியம். சங்கங்கள் நடந்த இடங்கள், அப்போதிருந்த ஆட்சியாளர்கள், முக்கிய படைப்புகள் ஆகிய அனைத்தும் பல முறை TNPSC group I உள்ளிட்ட தேர்வுகளில் பலமுறை கேட்கப்பட்ட கேள்விகள். 

UPSC தேர்வுகளைப் பொறுத்தவரையில், மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பாடத்துக்கான 20 சதவிகிதமான கேள்விகளில் பண்டைய  கால வரலாற்றில் இருந்து மட்டும் 5 முதல் 7 சதவிகிதமான கேள்விகளை எதிர்பார்க்கலாம். இது அனுபவரீதியான ஒரு கணக்கு. அந்தந்த ஆண்டுகளில் பாடங்களுக்கான கேள்வி விகிதம் நிச்சயம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல் மேலே குறிப்பிட்டவை பண்டைய கால வரலாற்றின் சில முக்கிய துளிகள்தான். இதே ரீதியில் உள்ள மற்ற தலைப்புகளையும் குறிப்பெடுத்துக்கொண்டால் பண்டை கால வரலாற்றுக்கான பாடங்களைப் படிக்கும் உங்கள் முயற்சி முழுமை பெறும். TNPSC தேர்வுகளைப் பொறுத்தவரையில், இந்தத் தலைப்பில் பெரும்பாலும் தமிழக பண்டைய வரலாற்றைப் பற்றிய கேள்விகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியது வரும். மற்றபடி கேள்விகளை பொறுத்தவரை UPSC தேர்வில் ஒரே கேள்வியில் பல பகுதிகளைக்கொண்டு சற்று சவாலாகவே அமையும். அந்த சவாலை சமாளித்து விடை அளிக்கும் முறைகளை படிப்படியாகப் பார்க்கலாம். 

இதற்கு முந்தைய பகுதியை படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க.. அடுத்து, இடைக் கால( Medieval) வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலாம். 

TNPSC UPSC Preparation Tips

டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

கோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்