வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/01/2018)

கடைசி தொடர்பு:15:20 (28/01/2018)

ரயில்வே பட்ஜெட் ரத்து முதல் இந்தியாவின் பெரிய அணை வரை.. முக்கியமான உள்நாட்டு செய்திகள் - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 27:  உள்நாட்டு செய்திகள்!

TNPSC Gr4 தேர்வில் நடப்பு செய்திகள் (Current Affairs) பிரிவில், இந்திய செய்திகள், அதாவது, உள்நாட்டு செய்திகள் தொடர்பான வினாக்கள், அதிகம் இடம் பெறலாம். கடந்த சுமார் ஓராண்டில் இந்தியாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் (events) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு, தரமான ‘ஆண்டுப் புத்தகம்’ (Year Book) வாங்கிப் படிப்பது நல்லது. இப்போதைக்கு, சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

அக்னி 5 ஏவுகணை, 26 டிசம்பர் 2016 அன்று வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது. இது, 5000 கி.மீக்கும் அப்பால் சென்று தாக்குகிற வல்லமை கொண்டது. இதற்கு முன்னதாக, அக்னி4, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை (Ballistic Missile) ஒரிசா மாநிலத்தில் உள்ள ‘அப்துல் கலாம்’ தீவில் இருந்து, வெற்றிகரமாக சோதனை இடப்பட்டது.

இதேபோல, ‘பிரம்மோஸ்’ சூபர் சானிக் ஏவுகணை, 2017 மார்ச் 11 அன்று ஒரிசாவின் சாந்திபூர் கடல்பகுதியில் சோதிக்கப் பட்டது. இது ஒரு, இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பு. எனவே, இந்திய நதி ‘பிரம்மபுத்ரா’ மற்றும் ரஷ்ய நதி ‘மோஸ்க்வா’ என்று இரண்டு பெயர்களையும் இணைத்து, ’பிரம்மோஸ்’ என்று பெயரிடப் பட்டது.  

இந்த ஆண்டில் (2017) இருந்து, ரெயில்வே பட்ஜெட் ரத்து செய்யப் பட்டது. இது இனிமேல், மற்ற பிற துறைகளைப் போல, மத்திய அரசின் பொது பட்ஜெட்டிலேயே, ஒரு பாகமாக இடம் பெறும். பிப்ரவரி இறுதியில் சமர்ப்பிக்கப் பட்டு வந்த மத்திய பட்ஜெட், 2017 முதல், பிப்ரவரி மாதம் முதல் தேதியே சமர்ப்பிக்கப் படுகிறது.

’தூய பணம்’ (Clean Money) என்று அழைக்கப் படும் ‘ஸ்வத் தன் அபியான்’ என்கிற நடவடிக்கையை, வருமான வரித் துறை தொடங்கியது. ‘ஸ்வத்’ (Swath) – தூய்மை; ‘தன்’ (Dhan) – பணம்/ செல்வம்; ‘அபியான்’ (Abhiyan) – நடவடிக்கை (operation) அதாவது, ‘Clean Money Operation’ / ‘தூய பண நடவடிக்கை’. 

இணைய சரிபார்ப்பு ‘e-verification’ மூலம் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையில் வருமான வரித்துறை தீவிரமாக செயல்படுவதை இந்தத் திட்டம் குறிக்கிறது.

2017 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை முன்வைத்த நடவடிக்கைகள்/ திட்டங்களில் சில:

எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் 3 லட்சம் ரூபாய்க்கு மேல், ரொக்கமாக ஈடுபடுவதைத் தடை செய்கிறது. (cash transaction in excess of Rs 3 lacs is prohobited)

இதே போல, அரசியல் கட்சிகள், 2000 ரூபாய்க்கு மேல், ரொக்க நன்கொடை (cash donation) பெறத் தடை விதிக்கப் பட்டது.

இந்த ஆண்டில் மட்டும் விவசாயக் கடனுக்கு என்று ரூ 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

2018 மே மாதம் முடிவுக்குள், இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தருவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மோட்டார் வாகன (திருத்த) மசோதா Motor Vehicles (Amendment) Bill 2017 ஏப்ரல் மாதம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, மோட்டார் வாகன ஓட்டுதலில் தவறுகளுக்கு, அபராதம் / தண்டனை கடுமை ஆக்கப் பட்டுள்ளது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் (Ministry of Forests and Environment, Government of India) – ‘விலங்குகளுக்கு எதிரான வதைத் தடுப்புச் சட்டம் 2017’ என்கிற பெயரில் ஓர் அறிவிப்பை, 2017 மே மாதம் வெளியிட்டது. கசாப்புக்காக கால்நடைகள் சந்தைப் படுத்தப் படுவதை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப் பட்டது. இது, பலத்த கண்டனம், விமர்சனத்துக்கு உள்ளானது.

நாடெங்கும் 100 நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்கும் திட்டத்துக்கு தொடக்க நிதியாக ஒரு லட்சம் கோடி; ஒவ்வொரு மாநிலத்துக்கும் 500 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு.

தமிழ்நாட்டில், ஸ்மார்ட் சிட்டிகளாக, சென்னையை அடுத்த பொன்னேரி, வேலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

குஜராத் மாநிலத்தில், நர்மதை ஆற்றின் குறுக்கே, ‘சர்தார் சரோவர் அணை’, பிரதமர் மோடியால், 2017 செப்டம்பரில், ‘திறக்கப் பட்டது’.

1.21 கி.மீ. நீளம், 138 மீ உயரம், 163 மீ ஆழம் கொண்ட இது, இந்தியாவிலேயே மிகப் பெரியது; உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியது.

56 ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்ட இந்த அணைத் திட்டத்துக்கு, 1961இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். (5 ஏப்ரல் 1961)

இந்த அணையில் இருந்து பெறப்படும் மின்சாரம் – குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களுக்குக் கிட்டும்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘ரோத்தாங்’ கணவாயில், இந்தியாவில் முதன் முதலாக, மின்சாரப் பேருந்து விடப்பட்டது. (2017 செப்டம்பர்)

2017 அக்டோபர் மாதம், இமயமலையைக் காப்போம் ‘Secure Himalaya’ திட்டம் அறிவிக்கப் பட்டது. இப்பகுதியில், அழிவின் விளிம்பில் இருக்கும், பனிச்சிறுத்தை போன்ற அரிய வகை விலங்குகளைக் காப்பது இதன் நோக்கம்.

தலித் இனத்தை சேர்ந்த யது கிருஷ்ணா, கேரளாவின், மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக திருவிதங்கூர் தேவாஸ்வம் போர்டு நியமித்து பணியில் சேர்ந்தார். பிராமணர் அல்லாத 36 பேரை அரச்சகர்களாக நியமித்தது இந்த போர்டு. இவர்களில் 6 பேர், தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். சமூக நீதிக் களத்தில், மிகப் பெரிய வரவேற்புக்குரிய முன்னேற்றமாகும் இது.

ஏற்கனவே சொன்னதுதான்; முக்கியமானது என்று நமக்குத் தோன்றிய சிலவற்றை மட்டுமே இங்கே தந்துள்ளோம்.

2018ஆம் ஆண்டுக்கான ஆண்டுப் புத்தகம் (Year Book) பார்த்து, முழுச் செய்திகளையும் வாசித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் நல்லது.

தமிழகம் தொடர்பாக நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை நாளை பார்க்கலாம். இதுவரை வெளிவந்துள்ள மற்ற பகுதிகளை படிக்க விரும்பினால் இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 - மாதிரித் தேர்வு 27

 

 

loading...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க