வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (31/01/2018)

கடைசி தொடர்பு:13:01 (31/01/2018)

நகராட்சிகளுக்கு இருக்கும் அதிகாரம்.. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு.. - டி.என்.பி.எஸ்.சி குரூப்-4ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 30 : நமது நகரம்!

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பாகம் IX-A. நகராட்சிகள். (Municipalities) 73, 74-வது திருத்தம்.

ஒரு கேள்வி எழுகிறது. எந்த அடிப்படையில் ஒரு பகுதியை, நகராட்சி (அ) மாநகராட்சி என்று பிரிப்பது?

3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்டது – நகராட்சி. (243-S)

10 லட்சத்துக்கு மேல் இருந்தால் – மாநகராட்சி. 243-P (c) 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பஞ்சாயத்துகளுக்கு) தேர்தல் நடத்தும் பொறுப்பு – மாநிலத் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது. பிரிவு 243-K. மாநிலத் தேர்தல் ஆணையர், ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான எல்லா அம்சங்களிலும், தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள மாநில சட்டமன்றங்களுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 243-K(4). பிரிவு 243-T மிக முக்கியமானது. இதன்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம்; மற்றும், மகளிருக்கான ஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்து உத்தரவு இடுகிறது – 243-T.

மாநில சட்டமன்றம் இயற்றுகிற சட்டங்களின் படி, நகராட்சிகள், வரி, தீர்வை, கட்டணம் வசூலிக்க உரிமை பெறுகின்றன. 243-X.  சட்டமன்ற அங்கீகாரம், கட்டாயம் ஆக்கப்படவில்லை. சட்டமன்றம் ‘அங்கீகரிக்கலாம்’ (may authorise a Municipality to levy) என்றுதான் கூறுகிறது பிரிவு 243-X. சட்டமன்ற அங்கீகாரம் இல்லாமலும் வரி, தீர்வை, கட்டணம் வசூலிக்க, அரசமைப்புச் சட்டத்தின் படி, நகராட்சிகளுக்கு உரிமை உண்டு என்பதைத் தெளிவு படுத்தவே இந்த விளக்கம்.

பஞ்சாயத்துகள், நகராட்சிகள் வகுக்கும் திட்டங்களைத் தொகுப்பதற்கு (to consolidate) மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்படும். (243-ZD) மாவட்ட திட்டக் குழு, அந்த மாவட்டம் முழுமைக்குமான, வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்கும். இந்தக் குழுவின் உள்ளமைப்பு (composition) குறித்து, மாநில சட்டமன்றம் தீர்மானிக்கலாம். இதேபோன்று, மாநகராட்சி எல்லைகளுக்கும் தனியே ஒரு, திட்டக்குழு, செயல்படும்.

அது சரி… நகராட்சிகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றன…? பிரிவு 243-W குறிப்பிடும், 12-வது அட்டவணை (Twelfth Schedule) இதோ: (அதே வரிசையில், இயன்றவரையில் அதே சொற்களில்) 

நகர்ப்புற திட்டம் (Urban planning)

நிலப் பயன்பாட்டு வரைமுறை மற்றும் கட்டடம் கட்டுதல் (regulation of land use and construction of buildings)

சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள்

சாலைகள், பாலங்கள்

வீட்டு, வணிக, தொழிற்சாலை உபயோகத்துக்கு தண்ணீர் சப்ளை

பொது சுகாதாரம், திடக் கழிவு மேலாண்மை

தீயணைப்பு சேவை

நகரப் பகுதிகளில் காடு வளர்ப்பு (urban forestry)

நலிவடைந்த பிரிவினரின் நலன் காத்தல்.

குடிசைப் பகுதி முன்னேற்றம்/ மேம்படுத்துதல்

நகரப் பகுதிகளில் வறுமை ஒழிப்பு

பூங்கா, தோட்டம், விளையாட்டுத் திடல் வழங்குதல்;

கல்வி, கலாசார, பாரம்பர்ய அம்சங்களைப் பெருக்குதல்

இடுகாடு, சுடுகாடு, மின்சார தகன மையங்கள்.

கால்நடை, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல்;

பிறப்பு, இறப்பு பதிவு, விவரங்களைப் பராமரித்தல்;

தெரு விளக்குகள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், பொதுக் கழிப்பிடங்கள்

இறைச்சிக் கூடங்கள், தோல் பதனிடும் இடங்கள்.

பொதுவாக TNPSC தேர்வுகளில், உள்ளாட்சி அமைப்புகள் குறித்த கேள்விகள், தவறாது இடம் பெறுகின்றன. சமீப காலமாக, UPSC (Civil Services) Examination அதாவது ஐ.ஏ.எஸ். தேர்விலும்கூட, இந்தப் பாகத்தில் இருந்து கேள்விகள் வருவது, அதிகமாகிக் கொண்டு வருகிறது. ஆகவே, விளக்கமாக இதைப் பார்த்து விடுவது நல்லது.

பாகம் IX-B – கூட்டுறவு சங்கங்கள். The Co-operative Societies.

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக செயல்பாடுகள், மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருகின்றன. (பிரிவு 243-ZI)  ஒரு கூட்டுறவு சங்கத்தில், அதிகபட்சமாக 21 இயக்குநர்கள் மட்டுமே இருக்க முடியும். இவர்களில், குறைந்த பட்சமாக, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒரு பதவியும், மகளிருக்கு இரண்டு பதவிகளும் ஒதுக்கீடு செய்து, மாநில அரசு சட்டம் இயற்றலாம். (243-ZJ) கூட்டுறவு சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிற தணிக்கையாளர் (‘ஆடிட்டர்’) மூலம், சங்கத்தின் கணக்குகள் ஆய்வுசெய்யப்பட்டு, ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். 243-ZM.

கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை ஆய்வு செய்வதற்கு என்று, தணிக்கையாளர் குழு (Panel of Auditors) ஒன்றை, அரசு அங்கீகரிக்கும். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த ஒருவரைத்தான் தணிக்கையாளராக, பொதுக்குழு நியமிக்க வேண்டும். 243-ZM (3) நிதியாண்டு முடிந்த 6 மாதங்களுக்கு உள்ளாக, பொதுக்குழு (General body) கூட்டப்பட வேண்டும்.  கூட்டுறவு சங்கத்தின் கணக்குப் புத்தகங்களைப் பார்வையிட, சங்கத்து உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்னும், 6 மாதங்களுக்குள்ளாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில், சங்கத்தின் ஆண்டறிக்கை, தணிக்கையிடப்பட்ட கணக்குகள் ஆகியன அடங்கிய, ஆண்டுப் படிவங்கள் (annual returns) தாக்கல் செய்யப்பட வேண்டும். பஞ்சாயத்துகள், நகராட்சிகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகிய மூன்றும், அரசமைப்புச் சட்டத்தில் ஒரே பாகத்தின் கீழ் (பாகம் IX) கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த மூன்றிலும் சாமான்ய மக்களின் நேரடி நிர்வாகம் இருக்க வேண்டும்; மேலும், கூட்டுறவு சங்கம், கிராமப் பஞ்சாயத்து போலவே, முழுக்கவும் சேவையை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும். இதுவே இந்திய அரசமைப்பு சட்டத்தின் உள்ளார்ந்த விழைவு ஆகும். (the underlying spirit of the Constitution) 

அரசமைப்புச் சட்டத்தின் பாகம் X – The Scheduled and Tribal Areas பற்றிப் பேசுகிறது. அதாவது, பட்டியலின பழங்குடிகள் பிரதேசங்கள். 

இது, 5-வது அட்டவணையில் (Fifth Schedule) அடங்கி உள்ளது. பிரிவு 244 – அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் அல்லாத பிற மாநிலங்களில் உள்ள பட்டியலின, பழங்குடிகள் பிரதேசங்களுக்கு மட்டுமே, 5-வது அட்டவணை செல்லும் என்கிறது. (இந்த நான்கு மாநிலங்களும், முழுக்கவுமே பழங்குடியினர் அடங்கிய பகுதிகள் என்பதால், தனியே சிறப்பு அதிகாரங்கள் கொண்ட மாநிலங்களாக அடையாளம் காணப்படுகின்றன.)  பிரிவு 244A, அசாம் மாநிலத்தில், பழங்குடியினர் மிகுந்துள்ள சில பகுதிகள் மீதான, 6-வது அட்டவணை (Sixth Schedule) குறித்துப் பேசுகிறது. TNPSC GR4 தேர்வில் இடம் பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று தோன்றுவதால், இந்த அட்டவணைகளை இங்கே விவரிக்கவில்லை.

அடுத்து வருகிறது – பாகம் XI. ‘Relations between the Union and the States’.  ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’!

அதுபற்றி நாளை பார்க்கலாம். இதற்கு முந்தைய பாடங்களை நீங்கள் தவறவிட்டிருந்தால் இந்த லிங்கில் படிக்கலாம்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்