வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:52 (02/02/2018)

அரசுப் பணித் தேர்வாணையங்கள் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 32 : பணியாளர் தேர்வாணையங்கள். 

TNPSC Gr4 தேர்வுக்கு, இந்திய அரசமைப்பு சட்டம் பற்றி, ‘இத்தனை’ ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமா…?’ என்கிற கேள்வி, பலருக்கும் இருக்கலாம்.

மூன்று முக்கிய குறிப்புகளை நினைவில் கொள்வது நல்லது.

1. எந்தவொரு போட்டித் தேர்வுக்கும், நாமாக ஒரு ‘எல்லை’ வகுத்துக் கொள்வது சரியல்ல. கடந்த சில ஆண்டுகளாக, அரசமைப்பு சட்டத்தில் இருந்து, அதிக எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப் படுகின்றன. ஆகவே விரிவாகத் தெரிந்து கொள்ளுதல், அவசியம்.

2. Tnpsc Gr4 தேர்வுக்காக நம்மைத் தயார் செய்து கொள்கிறபோதே, மற்ற பிற தேர்வுகளுக்கும் பயன் தருகிற வகையில், படிப்பது – நீண்ட கால நன்மை பயக்கும்.

3. கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் போன்ற பகுதிகளுக்கு, பள்ளிப் பாடப் புத்தகங்கள் போதுமானவை; ‘நடப்பு நிகழ்வுகள்’ (Current Affairs) பகுதிக்கு, ‘ஆண்டுப் புத்தகம்’ (Year Book) தேவையான செய்திகளைத் தரும். ஆனால், ‘அரசமைப்பு சட்டம்’ பகுதிக்கு, ‘வழிகாட்டி’ புத்தகங்கள் (Guides) மட்டுமே நம்பி இருக்க வேண்டி உள்ளது. இது, போதுமானது அல்ல. ஆகவேதான், இயன்றவரை விளக்கமாகப் பார்த்து வருகிறோம். உண்மையில், இந்தப் பகுதியில், ‘விகடன்.காம்’ மட்டுமே, இத்தனை ஆழமாக, விவரங்களைத் தந்துள்ளது. எல்லாக் காலத்திலும் எல்லாப் போட்டித் தேர்வுகளுக்கும் இப்பகுதியை மீண்டும் மீண்டும் படிக்கிற சந்தர்ப்பம் வருகிற போது, தேர்வர்கள் இதனை நன்கு உணர்வார்கள். 

பாகம் XII அத்தியாயம் II – (அரசு) கடன்கள் (Borrowings) 

இரண்டே பிரிவுகள் கொண்ட மிகச் சிறிய அத்தியாயம் இது.

இந்திய தொகுப்பு நிதியம் (Consolidated Fund of India) மீது, நாடாளுமன்றம் சட்டப்படி அனுமதிக்கிற அளவுக்கு, கடன் வாங்குவதற்கு, மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது பிரிவு 292. இதே போன்று, மாநில அரசுகள் கடன் வாங்கவும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடன் வழங்கவும் வகை செய்கிறது பி. 293. 

அத்தியாயம் – III ‘சொத்துகள்’.

மத்திய அரசு, வியாபாரத்தில் ஈடுபட, சொத்துகள் வாங்க, விற்க அனுமதிக்கிறது பி. 298.அரசாங்கம் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டாலும், குடியரசுத் தலைவர் (அ) ஆளுநர் பெயரிலேயே அது இருக்கும். பி.299(1). (இதனால்தான் அரசு அலுவலர்கள்/ ஊழியர்களுக்கு, குடியரசுத் தலைவர் / ஆளுநர் பெயரால் பணியாணை வழங்கப் படுகிறது)

எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், குடியரசுத் தலைவர் (அ) ஆளுநர் மீது, தனிப்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. பி. 299(2) யார் மீதும் அரசோ, அரசு மீது யாருமோ - வழக்கு தொடுக்கலாம். பி.300. அதாவது, தகுந்த முகாந்திரம் இருந்தால், ஒரு குடிமகன் மீது அரசாங்கம் வழக்கு தொடுக்கலாம்; இதே போல, எந்தக் குடிமகனும், தகுந்த காரணங்கள் இருந்தால், அரசின் மீது வழக்கு தொடுக்கலாம். இதற்கு வகை செய்கிறது - பிரிவு 300. மறந்து விட வேண்டாம்.

அத்தியாயம் IV Right to Property. சொத்துகள் மீது உரிமை.

எந்தத் தனி மனிதனும் சொத்து வைத்துக் கொள்வதை, சட்டத்தினாலன்றி, யாரும் தடுக்க முடியாது. (‘அரசு உட்பட’ என்று பொருள் கொள்ளவும்) பி. 300-A 

இனி, பாகம் – XIII. ‘Trade, Commerce….’ வணிகம், வர்த்தகம்…. முதலியன.

இந்தியா முழுதிலும் எங்கு வேண்டுமானாலும், வியாபாரம், வர்த்தகம் மேற்கொள்ள சுதந்திரம் வழங்குகிறது பி. 301. அதே சமயம், வணிகம் செய்வதில், பொது நலன் கருதி, கட்டுப்பாடுகள் விதிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு. பி. 302. ஆனால், வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே, பாரபட்சம் காட்டுகிற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்கிறது பி.303. 

அடுத்து வருகிறது பாகம் XIV ‘Services under the Union and the States’.   மத்திய மாநில அரசுகளின் கீழ் வரும் சேவைகள்.

இங்கே சேவைகள் என்று குறிப்பிடப் படுவது – அரசுப் பணிகள். இந்த பாகத்தில் உள்ள எதுவும், ஜம்மு & காஷ்மிர் மாநிலத்துக்குப் பொருந்தாது. பி. 308. அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க, தேவையான சட்டங்கள்/ விதிகள் வகுத்துக் கொள்ள, அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது பி. 309. குடியரசுத் தலைவர் / ஆளுநர், மன மகிழ்வு உள்ள வரைக்கும் (during the pleasure of the President / Governor) ஒருவர் பணியில் இருக்கலாம். பி. 310. இங்கு, குடியரசுத் தலைவர் / ஆளுநர் என்று சொல்லப் பட்டு இருப்பது, நடைமுறையில், அரசு விதிகள்/ கட்டுப்பாடுகளைக் குறிக்கிறது. குடிமைப் பணியில் (Civil Service) உள்ள ஓர் அலுவலர், குடியரசுத் தலைவரால் அன்றி, தக்க விசாரணையின் விளைவாக அன்றி, பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார். பி. 311. 

3இல்2 ஆதரவுடன் நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றி, அகில இந்திய பணி (சேவை) ஏற்படுத்தப் படலாம். அதாவது, புதிதாக ஒரு ‘சேவை’, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் அன்றி, மத்திய அரசின் கீழ் வருகிற, அகில இந்தியப் பணியாக, உருவாக்க (அ) மாற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் 3இல்2 ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 

இனி வருகிறது, மிக முக்கியமான அத்தியாயம் II. 

Public Service Commissions. அரசுப் பணித் தேர்வாணையங்கள்.

மத்திய அரசுப் பணிகளுக்கு ‘மத்திய பணித் தேர்வாணையம்’ என்றும் மாநில அரசுப் பணிகளுக்கு ‘மாநில பணித் தேர்வாணையம்’ என்றும் தனித்தனியே இருக்கும் என்கிறது பி. 315(1). இரண்டு (அ) இரண்டுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவாக, ஒரே தேர்வாணையம் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட மாநில சட்டசபைகள் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பி. 315(2) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (U.P.S.C.) தலைவர், உறுப்பினர்களை, குடியரசுத் தலைவரும்; மாநிலத் தேர்வாணைய தலைவர் / உறுப்பினர்களை, ஆளுநரும் நியமிப்பர். பி. 316. தேர்வாணைய உறுப்பினர், ஆறு ஆண்டுகளுக்கு, (அ) 65 வயது நிறைவு செய்யும் வரை, பதவியில் இருப்பார். (எது முதலில் வருகிறதோ, அது வரை)  தேர்வாணைய உறுப்பினர் மீதான புகார் பற்றி, உச்சநீதிமன்றம் விசாரித்து அறிக்கை தரும்படி குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்வார். அறிக்கையின் படி, குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். பி. 317.

‘லாபம் தருகிற பணி’ (office of profit) எதிலும், தேர்வாணைய உறுப்பினர் இருப்பது, நடத்தை விதிகளுக்கு எதிரானது. பி. 317(4)  ஒரு முறை தேர்வாணைய உறுப்பினராகப் பணியாற்றியவர், பிறகு எப்போதும், எந்த அரசுப் பணியும் ஏற்றுக் கொள்ள முடியாது. பி. 319. மத்திய / மாநில அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்துவது, தேர்வாணையத்தின் கடமை ஆகும். பி. 320.

தேர்வாணையத்தின் ஊழியருக்கான சம்பளம் உள்ளிட்ட அத்தனை செலவுகளும், இந்தியத் தொகுப்பு நிதியம் மூலம், ஏற்றுக் கொள்ளப் படும். (the expenses of the Public Service Commissions shall be charged on the Consolidated Fund of India) மத்தியத் தேர்வாணையம் குடியரசுத் தலைவருக்கும், மாநிலத் தேர்வாணையம், ஆளுநருக்கும், ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது குடியரசுத்தலைவர் / ஆளுநர் தருகிற கருத்துகளுடன், இந்த அறிக்கை, நாடாளுமன்றம் / சட்டமன்றத்தில் முன் வைக்கப் படும். பி.323.

தேர்வாணையம் குறித்து இதுவரை நாம் பார்த்த அனைத்தும், போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியம் ஆகும். இத்துடன், தற்போது தேர்வாணையத் தலைவராக யார் இருக்கிறார் என்பதையும் சேர்த்துத் தெரிந்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தகவல், நடப்பு நிகழ்வுகளின் கீழ் வரும். கடந்த சில ஆண்டுகளாக, தேர்வாணையம் குறித்த கேள்விகள் அதிகம் தென்படுகின்றன. மிக எளிய பகுதி. ஒருமுறை படித்து வைத்துக் கொண்டால் போதும். சரியான பதில் சொல்லி விடலாம்.

இதற்கு அடுத்து வருகிறது – 

பாகம் XIV-A. Tribunals.  முறையீட்டு மன்றங்கள்.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம்,அரசுப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் மீது வருகிற புகார்களை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கிற ‘நிர்வாக முறையீட்டு மன்றம்’ (Administrative Tribunal) அமைக்க, அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது பி. 323-A. இது அல்லாமல், ‘பிற விவகாரங்கள்’ (‘other matters’) தொடர்பாகவும், முறையீட்டு மன்றம் அமைக்கப் படலாம். ‘பிற விவகாரங்கள்’ – என்னவெல்லாம் இருக்கலாம்….? 

வரி விதிப்பு, வரி வசூல் உள்ளிட்டவை. அதாவது, ஒருவர் மீது, வரி விதிக்கப்பட்டால், அதனை எதிர்த்து அவர், முறையீடு செய்யலாம். 

ஏற்றுமதி, இறக்குமதி, அன்னிய மாற்று (foreign exchange) தொடர்பான விவகாரங்கள்.

தொழிற்சாலை/ தொழிலாளர் சச்சரவுகள். (Industrial / Labour disputes)

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள்

நகர சொத்து உச்சவரம்பு (ceiling on urban property)

நாடாளுமன்ற/ சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பானவை

எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, கொள்முதல் தொடர்பானவை.

வீட்டு வாடகை தொடர்பானவை.

எது எதற்கெல்லாம், ‘மேல் முறையீடு’ செய்ய குடிமகனுக்கு உரிமை உண்டு என்பதை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளவும். இதனை விசாரிக்கிற அமைப்புகள்தாம், இந்த முறையீட்டு மன்றங்கள். (ஆனால், இவை குறித்து குரூப்4 தேர்வில், அதிகம் கேட்கப்படுவதில்லை)  

அடுத்து வருகிறது – பரபரப்பாகப் பேசப்படுகிற, தேர்வுக்கு மிகவும் முக்கியமான பாகம் – ‘தேர்தல்கள்’. அதுபற்றி நாளை பார்க்கலாம். முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்