வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (06/02/2018)

கடைசி தொடர்பு:10:45 (06/02/2018)

அவசரநிலை பிரகடனம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறது? - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-ல் ஜெயிக்கலாம் ஈஸியா!

Day 34: மொழிகள், சிறப்பு அதிகாரங்கள். 

வரவிருக்கும் TNPSC Gr4 தேர்வில், அரசமைப்பு சட்டம் மிக முக்கிய பகுதியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். 10 கேள்விகளுக்குக் குறைவில்லாமல் எதிபார்க்கலாம். இந்தப் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறுவதுதான், தேர்ச்சியை நிர்ணயிக்கிற அம்சமாக இருக்கப் போகிறது. ஆகவே சற்றே கூடுதல் கவனத்துடன் ஆழப் படித்து வைத்துக் கொள்ளவும்.

பாகம் XVII Official Language. அலுவல் மொழி. 

தேவநகரி வடிவில் உள்ள ஹிந்தி, (இந்திய) ஒன்றியத்தின் அலுவல் மொழி என்கிறது பி. 343(1). எண்களைப் பொறுத்த மட்டில், இந்திய எண்களின் சர்வதேச வடிவம், (international form of Indian numerals) அலுவல் பணிகளில் பயன்படுத்தப்படும். சாசனம் வடிவமைக்கப்பட்டு முதல் 15 ஆண்டுகள் வரை, மைய அரசின் அலுவல்களில், ஆங்கில மொழி பயன்பாட்டில் இருக்கும். பி. 343(2) இடையில், குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில், ஆங்கிலத்துடன் இந்தியும், மைய அரசின் அலுவல் மொழியாகப் பயன் படுத்தப் படலாம்.  

15 ஆண்டுகளுக்குப் பிறகு (1965க்குப் பின்) ஆங்கில மொழி பயன்பாட்டில் இருக்க, நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். குடியரசாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹிந்தி மொழியின் பயன்பாட்டை வளர்க்கவும், ஆங்கிலத்தின் பயனைக் குறைக்கவும் பரிந்துரைப்பதற்காக, ஆணையம் அமைக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது பி. 344.  எட்டாவது அட்டவணையில் உள்ள வெவ்வேறு மொழிகளுக்கும், இந்த ஆணையத்தில் உறுப்பினர்கள் இருப்பார்கள். 

ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு (’கமிட்டி’) இருக்கும். இவர்களில் 20 பேர் மக்களவை, 10 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பார்கள். சட்டமன்றத் தீர்மானத்தின் படி, ஒரு மாநிலம், ஹிந்தியையோ (அ) வேறு மொழியையோ, அலுவல் மொழியாக வைத்துக் கொள்ளலாம். மத்திய அரசின் அலுவல் மொழியே, மாநிலங்களுக்கு இடையிலான அலுவல் மொழியாகவும் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில், அலுவல் மொழியாக, ஆங்கிலம் இருக்கும். பி.348.

குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் (previous consent) ஆளுநர், உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக, ஹிந்தி மொழியைப் பயன்படுத்த அங்கீகரிக்கலாம். மத்திய (அ) மாநிலஅரசுக்கு எழுதும் குறை தீர்ப்பு மனுவை, ஒரு குடிமகன், மத்திய, மாநில அரசு பயன்படுத்தும் எந்த மொழியிலும் எழுதலாம். அதாவது, மத்திய அரசுக்கு எழுதுகிற குறைதீர்ப்பு மனு, ஆங்கிலம் (அ) ஹிந்தியில்தான் என்கிற கட்டாயம் இல்லை. பி. 350.

 சிறுவருக்கான தொடக்க நிலைக் கல்வி, அவரவர் தாய்மொழியில் கிடைக்கச் செய்வதே, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் குறிக்கோள் ஆகும். பி. 350-A மொழிச் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க சிறப்பு அலுவலரை குடியரசுத்தலைவர் நியமிக்க, வழி செய்கிறது பி. 350-B. 

பாகம் XVIII. Emergency Provisions. அவசரகால விதிகள். 

போர் (அ) அத்துமீறல் (அ) ஆயுதக் கலகம் மூலமாக, இந்தியாவின் (அ) இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால், குடியரசுத் தலைவர், அவசர நிலை பிரகடனம் செய்யலாம். பிரிவு 352(1). இந்தப் பிரகடனத்தைப் பிறகு திரும்பப் பெறவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. பி.352(2) இத்தகைய பிரகடனம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்கு உள்ளாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன் வைக்கப்படும். நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு இருந்தால், புதிய அவை ஏறப்டுத்தப்பட்ட, ஒரு மாதத்துக்கு உள்ளாக, அவையில் வைக்கப் படும்.

இந்த அவசர நிலை, நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து, 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும். அதன் பிறகு நாடாளுமன்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கலாம். இவ்வாறு ஒரே ஒரு நீட்டிப்பு மட்டுமே செய்யலாம். அதாவது நாடாளுமன்றம் செயல் பாட்டில் இருக்கும் போது, ஓராண்டுக்கு மேல், அவசர நிலை நீடிக்க, அரசியல் சாசனப்படி, சாத்தியம் இல்லை.

அவசர நிலைத் தீர்மானத்தை நிறைவேற்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும், 3இல்2 பங்கு ஆதரவு இருக்க வேண்டும். அவசர நிலைப் பிரகடனத்தை நாடாளுமன்றம் நிராகரித்தால், குடியரசுத் தலைவர், அவசர நிலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவார்.  அவசர நிலைக்கு (அ) அவசர நிலை தொடர்வதற்கு எதிராக, மக்களவையின் 10%க்குக் குறைவில்லாத எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கோரினால், 14 நாட்களுக்கு உள்ளாக, அவையின் சிறப்புக் கூட்டம் நடத்தப் படும். பிரிவு 268 முதல் 279 வரையிலான நிதி அதிகாரங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவர் நிர்வகிப்பதற்கான அவசரகால பிரகடனம் குறித்துப் பேசுகிறது பி. 354. இதயே சிலர், நிதி தொடர்பான அவசர நிலை (financial emergency) என்று குறிப்பிடுகின்றனர். 

வெளி (நாட்டு) தாக்குதல்களில் இருந்து மாநிலங்களைக் காப்பாற்றுகிற கடமை மத்திய அரசுக்கு உண்டு. பி. 355. 

அரசமைப்பு சட்டப்படி மாநில அரசை நடத்துகிற சூழல் இல்லை என்றால், ஆளுநரின் அறிக்கையின் மீதோ, அல்லாமலோ, சம்பந்தப்பட்ட மாநில அரசின் நிர்வாகம் அனைத்தையும், குடியரசுத் தலைவரே ஏற்றுக் கொள்ளலாம். பி. 356. இதைத்தான், மாநில சட்டசபைக் கலைப்பு, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி என்று வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறோம். மாநில ஆட்சியைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வருகிற அதிகாரத்தை வழங்குகிற, கொடூரமான (draconian) சட்டப் பிரிவு என்று ஜனநாயகவாதிகள் அழைப்பது, இந்த 356ஆவது பிரிவைத்தான். 

ஏற்கனவே சொன்னதுதான். மாநில சட்ட சபையைக் கலைத்து விட்டு கொண்டு வரப்படுகிற ஜனாதிபதி ஆட்சி, நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். முதலில் இது 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். மறு ஒப்புதலுடன், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கலாம். இதற்கு மேல் ஜனாதிபதி ஆட்சி நீடிக்க வழி இல்லை. அவசர நிலைக் காலத்தில், பிரிவு 19 கூறுகிற, பேச்சுரிமை, கருத்துரிமை, சங்க / அமைப்பு நடத்துகிற உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் அரசால் தற்காலிகமாக முடக்கப் படலாம். பி. 358.

பாகம் XIX. Miscellaneous சிறு விவகாரங்கள். 

குடியரசுத் தலைவர், ஆளுநரின் நடவடிக்கைகள், அவர் அப்பதவியில் இருக்கும் வரை, எந்த நீதிமன்றத்தாலும் கேள்வி கேட்கப்படாது. பி. 361. நாடாளுமன்றம் (அ) சட்டமன்ற அவையின் உள்ளே பேசிய எதற்காகவும் ஒருவரை நீதிமன்றம் தண்டிக்க முடியாது. மத்திய அரசு பிறப்பிக்கிற உத்தரவுகளை மாநில அரசு மதித்து நடக்கவில்லை எனில், அரசமைப்பு சட்டப்படி மாநில அரசு னடந்து கொள்ளவில்லை என்று கருதலாம் என்கிறது பி. 365. 

மேலே சொல்லப்பட்டுள்ள விவரங்கள் பொதுவாக ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வுக்கு அதிகம் பயன்படலாம். 

அடுத்தது - பாகம் XX. திருத்தங்கள் (amendments)  

ஒரே ஒரு பிரிவு (368) கொண்ட மிகச் சிறிய பாகம் இது. அரசமைப்பு சட்டத்தில் எவ்வாறு திருத்தம் செய்வது என்பதற்கான வழிமுறையைக் கூறுகிறது இப்பிரிவு. இரு அவைகளில் ஏதெணும் ஒன்றில், திருத்தம் வேண்டி மசோதா கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் இருந்து வாக்களிக்கிற (present and voting) உறுப்பினர் எண்ணிக்கையில் 3இல்2 ஆதரவு பெற்று இருக்க வேண்டும். இதன் பிறகு, மசோதா குடியரசுத் ட்க்ஹல்ஐவரின் ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான், திருத்தம் அமலுக்கு வரும்.

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வுக்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கும் நிலையில், இதற்கு முன்பு வந்த எல்லா பகுதிகளையும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். இந்த லிங்கில் எல்லா பகுதிகளையும் படிக்கமுடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்