செஸ் விளையாட்டில் குதிரை; போட்டித்தேர்வில் புவியியல்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை...!

#8 செஸ் விளையாட்டில் குதிரை; போட்டித்தேர்வில் புவியியல்! 

இந்திய புவியியல் 

போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரையில் புவியியல் முக்கியமான ஒன்று. முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என அனைத்திலும் இதுதொடர்பான கேள்விகள் நிச்சயம் இடம்பெறும். முதன்மை தேர்வுகளைப் பொறுத்தவரை சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை கேள்விகள் இடம்பெற்றுள்ளன ( சுற்றுச்சூழல் பகுதிகளைச் சேர்க்காமல்தான் இந்தக் கணக்கு). இதில் 80 முதல் 85 சதவிகிதம் வரை இந்திய புவியியல் சார்ந்த கேள்விகளே இடம் பெற்றுள்ளன. எப்படி செஸ் விளையாட்டில் குதிரையை சரியாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், அதுவே நமக்கு மிகப்பெரிய பலமாக அமையுமோ அதேபோலத் இந்தப் புவியியலும். நன்றாக கற்றுக்கொண்டு சரியாக பயன்படுத்தினால் மிகப்பெரிய வெற்றிகளை நாம் போட்டித்திறன் தேர்வுகளில் அடைய முடியும். நம்முடைய பயணத்தை இந்தியாவிலிருந்தே தொடங்குவோம். 

இந்தியாவின் அமைப்பானது வடக்கு துருவத்தில் ( northern hemisphere ) உள்ள வெப்ப மண்டலத்தில் , 8^4’ N மற்றும் 37^6’ N அட்சரேகை ( latitude ) மற்றும் 68^7’ E மற்றும் 97^25’ E தீர்க்கரேகை ( longitude) ஆகியவற்றில் அமைந்துள்ளது. வடக்கு முதல் தெற்கு வரை சுமார் 3,214 கி.மீட்டர்கள், மேற்கு முதல் கிழக்கு வரை சுமார் 2,933 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. உலகத்திலேயே ஏழாவது பெரிய நாடு; உலகின் பரப்பளவில் 2.4 சதவிகிதத்தைக் கொண்டது. உலக மக்கள்தொகையில் 17.5 சதவிகித்தை ( 121.06 கோடி ) கொண்டுள்ளது. இதில் இந்திய கடலோரப் பகுதிகளாக 7516.5 கி.மீட்டரும் நிலப்பகுதிகளாக 15200 கி.மீட்டர்களும் உள்ளன. இந்தியாவுடன் பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பூட்டான், ஆஃப்கானிஸ்தான் என 7 நாடுகள் தங்கள் எல்லை பகுதிகளைப் பகிர்கின்றன. இந்தியாவில் மலைப்பகுதிகள் ( mountains ) 10.6 சதவிகிதமும் சிறுமலைகள் ( Hills ) 18.5 சதவிகிதமும் பீடபூமிகள் ( plateaus ) 27.7 சதவிகிதமும் சமவெளிகள்( plains ) 43.2 சதவிகிதமும் இடம்பெறுகின்றன. 

இந்திய புவியியல் பகுதியைப் பொறுத்தவரையில் இப்போதைய ட்ரெண்ட், இந்திய வரைபடத்தை மையமாக வைத்து அல்லது இந்திய வரைபடத்தை நினைவு கூர்ந்து பதில் தரக்கூடிய கேள்விகள். 

உதாரணமாக UPSC 2017 முதன்மை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இதோ: 

#நீங்கள் கோஹிமா முதல் கோட்டையம் வரை சாலை வழியாக பயணித்தால், எத்தனை மாநிலங்களை கடந்து வருவீர்கள் ? ( புறப்படும் மற்றும் வந்தடையும் மாநிலங்கள் உட்பட ) 

6

7 ( பதில்) 

8

நாம் இந்திய வரைபடத்தையோ அல்லது கூகுள் மேப்ஸ்யையோ எடுத்துப் பார்த்தால் நாகாலாந்தில் தொடங்கி அசாம்- மேற்கு வங்காளம் - ஒரிசா- ஆந்திர பிரதேசம்- தமிழ்நாடு - கேரளம் என மொத்தம் ஏழு மாநிலங்களை நாம் வழியில் பார்க்கிறோம். இந்த மாதிரி கேள்விகளுக்கான விடைகளை நேரடியாக எந்தப் புத்தகத்திலும் படித்துவிட முடியாது. இந்திய வரைபடத்தை நன்கு தெரிந்து வைத்திருந்து, பத்து வினாடிகள் நம் கண்களை மூடி யோசித்துப் பார்த்தால் கண்முன் இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள், நதிகள் போன்றவை வந்து போகும். இப்படி வரைபடத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள ஒரு பெரிய வரைபடத்தை வாங்கியோ அல்லது வரைந்தோ( இன்னும் நல்லது ) நம் வீட்டுச் சுவற்றில் தொங்கவிட்டுவிடுவது அவசியம். அப்படிச் செய்தால் நம்மை அறியாமலேயே வீட்டில் வலம்போது, அதிக தடவை நம் கண்களில்பட்டு, ஆள் மனதில் நன்றாகவே பதிந்து விடும். ஆக உடனே தயார் செய்யுங்கள் உங்களுக்கான இந்திய வரைபடத்தை ! 

இன்னோரு உதாரண கேள்வி ( UPSC 2017 ) 

#இந்தியாவில் உள்ள ஓர் இடத்தில், நீங்கள் கடற்கரையில் நின்று கடலை உற்று நோக்கினால், ஒரு நாளுக்கு இருமுறை கடல் நீர் முழுவதுமாக சில கி.மீட்டர்கள் உள்வாங்கி அதன்பின் அலைகளோடு கடற்கரைக்கு மீண்டும் திரும்பும். கடல் உள்வாங்கிய அந்தநேரத்தில் கடல் படுக்கையின் மீது நாம் நடக்கக்கூடிய அந்த இடம் இந்தியாவில் எங்கு உள்ளது ? 

பாவ்நகர்

பீமுனிபட்னம்

சந்திபூர் ( பதில்) 

நாகபட்டினம் 

இப்படி இந்தியா முழுவதும் தனித்துவம் மிக்க , சிறப்பு வாய்ந்த இடங்கள் பல உள்ளன. முதலில் மாநிலம் வாரியாக அப்படிப்பட்ட இடங்களைப் பட்டியலிட்டு, அவற்றை பற்றிய குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். TNPSC தேர்வுகளை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள முக்கியமான இடங்களை ஒன்று விடாமல் சல்லடை போட்டுத் தேடிக் குறிப்பெடுத்து விடுங்கள். நான் TNPSC group I முதன்மை தேர்வு எழுதிய போது கேட்கப்பட்ட,  ' எமரால்ட் அணை ( emerald dam ) எங்கு உள்ளது?' என்ற கேள்விக்குத் தவறான பதில் அளித்து ( சரியான விடை ஊட்டி/ நீலகிரி  ) எளிதான ஒரு கேள்வியை கோட்டை விட்டது போல் நீங்களும் செய்து விட கூடாது என்பதற்காக தான் இந்தக் கூடுதல் அட்வைஸ். முக்கியமான இடங்கள் - தேசிய மற்றும் மாநில அளவில் பட்டியலிட்டுத் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வு என்ற சதுரங்க ஆட்டத்தில், உங்கள் குதிரையான புவியியலின் முக்கிய நகர்வுகளில் ஒன்றுதான் இது. இதனை உங்கள் வசம் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தடுத்த வெற்றி நகர்வுகளை வரக்கூடிய புவியியல் பகுதியில் பார்க்கலாம்! 

TNPSC UPSC Preparation Tips

Do you like the story?

Please Appreciate the Author by clapping!