பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரயில்வேயில் ஒரு லட்சம் பேருக்கு வேலை!

ரயில்வே துறையில் பொறியியல் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே பணியாளர் தேர்வாணையம். இந்தத் தேர்வுக்கான வயது வரம்பையும் தளர்த்தி உள்ளது மத்திய அரசு. பத்தாம் வகுப்பு முடித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே


இந்தியாவில், அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கும் மிகப்பெரிய அமைப்பாக உள்ளது ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (Railway Recruitment Board). 2018-ம் ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு 17,849 பேர், பல்வேறு தொழில்நுட்ப பணிக்கு 9,170 பேர் உள்பட மொத்தம் 27,019 பேர், குரூப் டி பணிகளுக்கு 62,907 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, இன்ஜினீயரிங், இயற்பியல், கணிதப் பட்டதாரிகள் www.ompl.co.in என்ற ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். 

மத்திய அரசின் புதிய அறிவிப்பின் படி, 30 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33 வயது வரை உள்ளவர்களும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 500 ரூபாயும், இதரப் பிரிவினருக்கு 250 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05.03.2018. 

ரயில்வே வேலை

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவச் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ரெயில்வே (Railway Loco pilots) உதவி ஓட்டுநராகப் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இந்தியா முழுவதும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். சம்பளமாக, 19,900 ரூபாயும், இதர படிகளும் வழங்கப்படும். 

குரூப் டி மற்றும் குரூப் சி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கு 62,907 பேரைத் தேர்வு செய்ய உள்ளது. இதில், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேக்கு மட்டும் 2,979 பேரைத் தேர்வு செய்ய உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ சான்றிதழ் அல்லது தேசிய பயிற்சி திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு வயதுவரம்பு 33 எனவும், இதரப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 36 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 38 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக, பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாயும் செலுத்த வேண்டும். 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அப்ஜக்ட்டிவ் முறையில்தான் இருக்கும். நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கணிதம் சார்ந்த கேள்விகளில், எண்ணியல், தசம எண்கள், வகுத்தல், மிகப்பெரிய வகுபடு எண், மி.சி.ம, ரேசியோ, சதவிகிதம், அளவிடல், நேரம் மற்றும் பணி, தூர அளவு, வட்டிக் கணிதம், லாபம் மற்றும் நஷ்டக்கணக்கு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அலுவலக உதவியாளர், பாதை பராமரிப்பாளர், கேட் கீப்பர் போன்ற பணிகள் வழங்கப்படும். இவர்களுக்கு, மாதச்சம்பளமாக 18,000 ரூபாயும், இதரச் சலுகைகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ரயில்வே பணியாளர் தேர்வாணையம்

இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், சான்றிதழ், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவச் சான்றிதழ் போன்றவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். சான்றிதழ் நகல்களை கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.03.2018. 

ரயில்வே தேர்வை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் தமிழிலும் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது மத்திய அரசு. மேலும், விவரங்களுக்கு www.rrbchennai.gov.in

Do you like the story?

Please Appreciate the Author by clapping!