வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (16/03/2018)

கடைசி தொடர்பு:19:23 (16/03/2018)

தைரியம், நேர்மை, சமயோஜிதம்... நேர்முகத்தேர்வை சமாளிப்பது எளிதே! #InterviewTips

ஒருமுறை, உள்ளூர் போட்டியில் தோனியும் யுவராஜும் மோதவேண்டியிருந்தது. போட்டிக்கு முந்தைய நாள் யுவராஜ், தோனி அணியைக் கடந்து செல்கிறார். அவரது பெயர், தேர்வுப் பட்டியலில் முன்னணியில் அப்போது இருக்கிறது. அவரை ஆச்சர்யமாகப் பார்த்தது தோனி அணி. அடுத்த நாள் போட்டியில் யுவராஜ் சதம். அசால்ட்டாக வெல்கிறது யுவி அணி. தோல்விக்கான காரணங்களை தோனி & கோ பட்டியலிடுகிறது. எல்லாக் காரணங்களையும் புறம்தள்ளுகிறார் தோனி. ``போட்டிக்கு முந்தைய நாள் யுவியைப் பார்த்தோமே... அப்பவே தோல்வி உறுதியாகிடுச்சு” என்கிறார் தோனி.  அப்போதே யுவியைப் பார்த்து தனது அணியினர் பயந்துவிட்டனர் என்பது தோனியின் முடிவு. `தனது அணியிடம் தைரியம் மிஸ்ஸிங்' என நினைத்தார். ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், நம் மனதை தயார்செய்யவேண்டியது மிக முக்கியமான பணி. அதில்தான் தோற்றதாக தோனி நினைத்தார். அதுதான் உண்மையும்கூட.

தைரியம் interview

”படிச்சு மார்க் எடுத்துடலாம். ஆனா, இன்டர்வியூல இவங்க கேட்கிறதை நினைச்சாத்தான்..” என்பதே பல பட்டதாரிகளின் கவலை. இதனால் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் முன்பே தோனி அணியைப்போல தோற்றுவிடுகிறார்கள். 10, 20 வருட அனுபவஸ்தர்கள்கூட சறுக்கும் இடம் இதுதான். ஆனால், சின்னச் சின்ன விஷயங்களைக் கவனித்தாலே போதும். நேர்முகத்தேர்வில் அடி தூள் கிளப்பலாம்!

தயார் ஆகுங்கள்:

நேர்முகத்தேர்வுக்கு முந்தைய நாளோ அல்லது அன்று காலையிலோ அரை மணி நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இதுவரை செய்த முக்கியமான விஷயங்களை, பொறுப்புகளை நினைத்துப்பாருங்கள். அவற்றில் முக்கியமானவற்றை மனதில் ரீவைண்டு செய்துபாருங்கள். ஃப்ரெஷர்ஸ் என்றால் கல்லூரியில் நிகழ்ந்ததில் நீங்கள் பெருமைகொள்ளும் தருணங்கள் எவை எவை என்பதை நினைத்துப்பாருங்கள். ஒருமுறை அதை அசைப்போட்டுவிட்டால், நேர்முகத்தேர்வில் அது சரியான நேரத்தில் கைகொடுக்கும்.

ஒரு வேலையை விட்டுவிட்டுத்தான் அடுத்த வேலையில் சேர முடியும். எனவே, `ஏன் இப்போதைய வேலையைவிடுகிறீர்கள்?' என்ற கேள்விக்கு நியாயமான ஒரு பதிலை யோசித்துவைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் கேட்காவிட்டாலும் இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பயன்படும்.

இந்தியா, இன்னும் முழுமையாக டிஜிட்டல் ஆகவில்லை. எனவே, 2 அல்லது 3 காப்பி ரெஸ்யூம் பிரின்ட் அவுட் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்த மின்னஞ்சலில் வேறு ஏதும் குறிப்பிட்டிருந்தால், அதையும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன உடை அணியலாம் என யோசித்துப்பாருங்கள். பொதுவாக, வெளிர்நிற சட்டையையும், அடர்நிறத்தில் கால்சட்டையையும் அணிவது நல்லது. நீங்கள் எந்த வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் செல்கிறீர்களோ, அது தொடர்பான உடைகளை அணிந்து செல்லுங்கள்.

நேர்முகத்தேர்வில்:

நம்ம ஊர் டிராஃபிக் பற்றித் தெரிந்துகொண்டு தாமதமாகச் செல்வதில் அர்த்தமில்லை. கொஞ்சம் முன்னதாகவே கிளம்பலாம். பெங்களூரு என்றால், இன்னும் முன்னதாகவே கிளம்பலாம்!

ஒரு நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி?

அலுவலகத்தில் யாரைச் சந்தித்தாலும் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு, அழுத்தமான ஒரு கைகுலுக்கல். கேள்விகளுக்கு, உங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள். ஆனால், சொல்லும் முறையில் சிறிய மாற்றத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கேள்வி கேட்பவர் என்ன வேகத்தில் கேட்கிறாரோ, அதே வேகத்தை மேட்ச் செய்ய முயலுங்கள். ஆங்கிலத்தில் `mirroring, matching, pacing and leading' என்பார்கள். இதைப் பின்பற்றினால் தேர்வுசெய்யும் நபர் உங்களை விடவே மாட்டார்.

தனிப்பட்டத் தகவல்களை, அவர்களாகக் கேட்டால் தவிர சொல்லத் தேவையில்லை. நேரிடையான கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள். பதில் கொஞ்சம் விரிவாக இருந்தால், அதைச் சொல்லிவிட்டு தொடங்குங்கள். இல்லையேல், பாதியில் உங்களை நிறுத்த யோசித்து அவர்கள் கவனத்தை இழந்துவிடுவார்கள்.

interview

`உங்கள் குறைகள் என்ன?' என அவர்கள் கேட்டால், உண்மையைச் சொல்லலாம். இல்லையேல், நீங்களாக `நான் மெதுவா வேலைசெய்வேன்', `எப்பவும் லேட்டாத்தான் கிளம்புவேன்' போன்ற நெகட்டிவ் விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.

கேள்விகளை முழுமையாகக் கேட்டுவிட்டு பதில் சொல்லவும். கேள்வி சரியாகக் கேட்கவில்லையெனில் அல்லது புரியவில்லையெனில், மீண்டும் கேட்கலாம். அதில் தவறேயில்லை.

நீங்கள் வேலை செய்த/செய்கிற நிறுவனத்தைப் பற்றி தவறாகச் சொல்லவே வேண்டாம்.

சம்பளத்தைப் பற்றி அவர்களாகக் கேட்காமல் நீங்கள் எதுவும் கேட்க வேண்டாம்.

எல்லாம் முடிந்த பிறகு, அடுத்து என்ன என்பதைப் பற்றி அவர்கள் சொல்லாமல்விடலாம். அப்போது `இது தொடர்பா ஹெச்.ஆர் எனக்கு அப்டேட் செய்வார்களா?' என்பது போன்ற ஃபாலோ அப் கேள்விகளை நீங்களே கேட்கலாம்.

உங்களை நேர்முகத்தேர்வு செய்பவருக்கு முன் உங்களிடம் ஹெச்.ஆரிலிருந்து யாராவது சந்தித்திருந்தால், அவரிடம்கூட கேட்கலாம்.

`இந்த வேலை இல்லைன்னா அவ்ளோதான்!' என எதுவும் கிடையாது. அதனால், எந்தச் சூழலிலும் பயத்துடனோ சந்தேகத்துடனோ இருக்காதீர்கள். தைரியம்தான் உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் என்பதை மறக்காதீர்கள்.

ஆல் தி பெஸ்ட்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்