1 லட்சம் ரயில்வே பணிக்கு 2 கோடி இந்தியர்கள் விண்ணப்பம்... அட்றா சக்க இந்தியா! | Railway Recruitment Board got two crore applications for one lakh vacancies

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (28/03/2018)

கடைசி தொடர்பு:12:21 (22/06/2018)

1 லட்சம் ரயில்வே பணிக்கு 2 கோடி இந்தியர்கள் விண்ணப்பம்... அட்றா சக்க இந்தியா!

ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களுக்கு, இரண்டு கோடி பேர் விண்ணப்பித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பணியிடத்துக்கு 200 பேர் போட்டியிடுகின்றனர்.

ரயில்வே

பிப்ரவரி மாதத்தில் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் உதவி பைலட் பணிக்கு 17,849 பேர், தொழில்நுட்பப் பணிக்கு 9,170 பேர், குரூப் `டி’ பிரிவில் 62,907 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவுக்கு 9,500 பேர் என மொத்தம் 99,426 பேரை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

ரயில்வே பணிக்கு அறிவிப்பு வெளியான 30 நாள்களிலேயே ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பம் அனுப்ப மேலும் 15 நாள்கள் கால அளவை நீட்டிக்க, இரண்டு கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், உதவி பைலட் பணிக்கு மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள். இன்னும் நான்கு நாள்களே இருப்பதால் விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம். 

`ரயில்வேயில் வேலை பெற, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என ரயில்வே துறை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டுவருகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `எழுத்துத்தேர்வின் அடிப்படையிலேயே பணியிடங்கள் ஆள்களை நிரப்ப உள்ளதால் மற்றவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளது. 

ரயில்வே

தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினீயரிங், இயற்பியல், கணிதப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பையும் உயர்த்தியுள்ளது ரயில்வே வாரியம். பொதுப்பிரிவுக்கு 30 வயது எனவும், இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவுக்கு 33 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவுக்கு 35 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்கள் 500 ரூபாயும், இதர பிரிவினருக்கு 250 ரூபாயும் செலுத்த வேண்டும். 

சென்னையை மையமாகக்கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயில் குரூப் `டி' மற்றும் குரூப் `சி' முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக்கு 2,979 பேரை தேர்வுசெய்ய உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள், ஐடிஐ சான்றிதழ் அல்லது தேசிய பயிற்சித் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பொதுப்பிரிவுக்கு வயது வரம்பு 33 எனவும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 36, எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 38 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாயும் செலுத்த வேண்டும். 

தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கும், குரூப் `டி' மற்றும் குரூப் `சி' முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பணிக்கும் எழுத்துத்தேர்வின் மூலமே தேர்வு செய்யவுள்ளது. எழுத்துத்தேர்வு பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருக்கும். கணிதம் சார்ந்த கேள்விகளில், எண்ணியல், தசம எண்கள், வகுத்தல், மிகப்பெரிய வகுபடு எண், மி.சி.ம, சதவிகிதம், அளவிடல், நேரம் மற்றும் பணி, தூர அளவு, வட்டிக்கணிதம், லாபம் மற்றும் நஷ்டக்கணக்கு போன்ற பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுஅறிவு குறித்தும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மேலும், விவரங்களுக்கு www.rrbchennai.gov.in. 

இந்தத் தேர்வில் தேர்வானால், நீங்கள் கோடியில் ஒருவராக இருப்பீர்கள்!


டிரெண்டிங் @ விகடன்