கட்டுரைத் தாளில் சாதிக்க 5 வழிகள்! - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை 

மெயின் தேர்வுகள் ஸ்பெஷல் (பகுதி-3)  பொதுப் பாடங்கள் மற்றும் கட்டுரை

டி.என்.பி.எஸ்.சி

கடந்த பகுதிகளில் பொதுப் பாடங்களுக்கான முதல் மூன்று தாள்களில் முக்கிய தலைப்புகளை பார்த்தோம். இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 

நெறிமுறைகளை நிர்ணயம் செய்பவை, அவற்றை கடைபிடிப்பதன் எதிரொலி, பொது மட்டும் தனிப்பட்ட வாழ்வில் நெறிமுறைகள், மிகப் பெரிய தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், நிர்வாகிகள் ஆகியோரின் வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் தத்துவங்கள், நெறிமுறைகளை கற்றுத் தருவதில் கல்வி, குடும்பம் மற்றும் சமூகத்தின் பங்கு, தார்மீக அணுகுமுறைகள், பாரபட்சமற்ற நடத்தை, உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence) ஆகிய தலைப்புகள் மிக முக்கியமானவை. அதேபோல, நேர்மையான நிர்வாக முறைகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் அதற்கு ஏற்படும் இடர்ப்பாடுகள், அது சார்ந்த விதிமுறைகள், பொது சேவை பற்றிய அடிப்படை, ஊழல், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தகவல் உரிமை உள்ளிட்ட குடிமக்களுக்கான முக்கிய சட்டங்களை அறிந்து கொள்வது அவசியம். 

டி.என்.பி.எஸ்.சி

உதாரண கேள்வி 

 நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு சமூக மற்றும் தனி மனித நன்மை ஏற்படுகிறது ? ( UPSC 2017 , 10 marks ) 
 'ஆட்சி', 'நல்லாட்சி' , ' நெறிமுறையான, நேர்மையான ஆட்சி' ஆகியவற்றின் மூலம் நீங்கள் அறிவதை விவரிக்கவும். ( UPSC 2017 10 marks) 
case study: நீங்கள் ஓர்  ஊரில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரியாக உள்ளீர்கள். மிகவும் ஏழ்மையான பெண் ஒருவர் உங்களிடம் ஆதரவற்ற பெண் சான்றிதழ் கேட்டு வந்து நிற்கிறார். விசாரித்ததில் அவர் உண்மையிலேயே ஆதரவற்ற பெண் என்று தெரிகிறது. ஆனால், அந்த பெண்ணிடம் ஆவணங்கள் சரிவர இல்லை என்பது தெரிய வருகிறது. இவருக்கு சான்றிதழ் வழங்கினால் நீங்கள் விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று ஆகும் அதேசமயம் அந்த பெண்ணுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ( UPSC 2017 20 marks ) 

அடுத்ததாக, நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால் மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும். ஆக, கேள்விகளைப் பலமுறை படித்துப் பார்த்து ஒவ்வொரு பகுதியிலும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுப்பது அவசியம். ' இது மிகவும் கஷ்டமான, சவாலான கேள்வியாக இருக்கிறது. யாரும் இதை எழுத மாட்டார்கள். எனக்கு இதைப்பற்றி ஓரளவு தெரிந்தாலும் நான் யாரென்று காட்டுறேன்' எனத் தேர்ந்தெடுத்து காட்டுவதை விட, மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமக்கு தெரிந்ததை, புரிந்ததை மட்டும் எழுதினாலே போதும் வெற்றி நமக்குத்தான் !

உதாரண தலைப்புகள்/ கேள்விகள்

 ஒரு நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகிறது.( UPSC 2017)
 சமூக வலைதளம் இயற்கையாகவே ஓர் சுயநலமான ஊடகம் ( UPSC 2017 ) 

கல்வி, பொருளாதாரம், ஜனநாயகம், தேசப்பற்று, நாட்டின் வளர்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சனைகள், நிர்வாகம், ஊடகங்கள், சுற்றுச்சூழல், நெறிமுறைகள், அறிவியல் தொழில்நுட்பம்  போன்ற தலைப்புகளை ஏற்கனவே பொதுப் பாடங்களுக்காக படிக்கிறோம், இந்த தலைப்புகளில் கட்டுரை எழுதும் கண்ணோட்டத்துடன் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வது கட்டுரைத்தாளில் அதிக மதிப்பெண்களைப் பெற பெரிதும் உதவும்.

கட்டுரைத் தாளில் சாதிக்க 5 சூப்பர் டிப்ஸ் ! 

1. தலைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தை எண்ணிக்கைக்கு தகுந்தவாறு நம் கட்டுரை அமைவது மிக அவசியம். பல நேரங்களில் 1000-1200 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும் ( 125 மதிப்பெண்களுக்கு) இதை அளவீடாக வைத்துக்கொண்டு கொள்ளுங்கள், திடீர் என்று மதிப்பெண்கள் மாற்றப்பட்டாலோ அல்லது வார்த்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலோ, இந்த அளவீட்டை வைத்து உங்கள் கட்டுரையை உருவாக்குங்கள். 

2. 1200 வார்த்தைகளில் உங்கள் கட்டுரை என்றால் அதில் 12 முதல்15 உப தலைப்புகள் இட்டு எழுதுங்கள். உப தலைப்புகளை முதலிலேயே முடிவு செய்து விட்டு எழுதத் தொடங்குங்கள். 

3. மேற்கோள்கள் மற்றும் பொன்மொழிகள்/பிரபல வாக்கியங்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப ஆங்காங்கே பயன்படுத்துங்கள். தற்போதைய / அண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதினால் அது உங்கள் கட்டுரைக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

4. அனைத்து தலைப்புகளிலும் நாம் சொல்லும் விஷயத்தின் சாதக, பாதகங்களை ஆராய்வது மிக முக்கியம். அனைத்தும் கட்டுரையில் அமைவதும் அவசியம். ஆனால் அதிகப்படியான எதிர்மறை வரிகளை தவிர்க்கவும். 

5. ' பாஸிடிவான’ அதே சமயம் நடுநிலையான கட்டுரைகளுக்கு என்றுமே மதிப்பு அதிகம். நாம் ஒரு புத்தகத்தில் நன்றாகப் படித்த தலைப்பே தேர்வில் வந்தாலும், அதை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதாமல், நமக்கான சுயமான சொற்களை தேர்ந்தெடுத்து எழுதினால், நிச்சயம் நல்ல பலனை தரும். புத்தகங்களில் இருந்து புறப்படும் கட்டுரைகளை விட மனதில் இருந்து புறப்படும் கட்டுரைகளுக்கே மகத்துவம் அதிகம். அவைகள் மதிப்பெண்களையும் அள்ளித் தரும். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!